இணைந்து செபிப்போம்

இறைவாக்கினர் ஸ்தேவான் மக்களை கடிந்துகொள்வதையும், மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றதையும் இன்றைய வாசகத்தில் வாசிக்கிறேனே! ஆண்டவரே, எம்மில் பலரும், ஸ்தேவான் கூறியது போல தூய ஆவியாரை எதிர்த்து, உம்முடைய கட்டளைகளுக்கும், வார்த்தைகளுக்கும் செவிமடுக்காமல் எங்களின் விருப்பம் போல வாழ்ந்து வருகிறோமே! எங்களுடைய தவறான வாழ்க்கைமுறையின் மூலம், ஒவ்வொருமுறையும், ஸ்தேவானை போல, எத்தனையோ வேதசாட்சிகளை நாங்கள் கொன்று கொண்டிருக்கிறோம் ஐயா! அதற்காக எம்மை மன்னியும்! மறையுரையிலும், ஏனைய திருச்சடங்குகளிலும், குருக்களும், ஊழியர்களும் எனது தவறை சுட்டிக்காட்டி, அறிவுரை வழங்கும்போது, அதை உதாசீனப்படுத்தி, அவர்களை வெறுத்து ஒதுக்கும்போதெல்லாம், நான் உம்மையும், உம்முடைய இறைவாக்கினர்களையும் கொல்வதற்கு சமம் என்று நான் உணர்கிறேன் ஆண்டவரே! இனியும் அந்த பாவத்தை செய்யாது, மற்றவர் என்னை கண்டித்து திருத்தும்போது, அதை மனதார ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை எனக்கு தாரும் இயேசுவே! மேலும், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்று நீர் கூறியதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கும் நான், நீர் கொடுக்கும் உணவை தேடி வரும்படி, ஆன்மீக தாகத்தை எனக்கு தாரும் ஐயா! இந்த நாள் முழுவதும், வாழ்வு தரும் உணவாகிய உம்முடைய இறைவார்த்தைகளை ஆர்வமாய் படித்து, அதை பின்பற்றும் வரம் தாரும். ஆமென்!

Comments are closed.