நாவடக்கம்
என் சகோதரர்களே, நீங்கள் எல்லோரும் போதகர்களாக விரும்பாதீர்கள். போதகர்களாகிய நாங்கள் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பது தெரியுமன்றோ?
ஏனெனில், நாம் அனைவரும் பலவற்றில் தவறுகிறோம். தவறான பேச்சுக்கு இடங்கொடாதவன் தன் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவன்: அவனே நிறைவு பெற்றவன்
குதிரைகளைப் பாருங்கள். அவற்றை அடக்க வாயில் கடிவாளம் போட்டு முழுக் குதிரையையே கட்டுப்படுத்தி விடுகிறோம்
கப்பல்களைப் பாருங்கள். அவை எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், புயல் காற்றில் அடிபட்டாலும், கப்பலோட்டி சிறியதொரு சுக்கானைக் கொண்டு தான் விரும்பும் திசையிலெல்லாம் அவற்றைச் செலுத்துகிறான்
மனிதனின் நாவும் அவ்வாறே. அது உடலின் மிகச் சிறிய உறுப்பு தான். ஆயினும் பெரிய காரியங்களைச் சாதிப்பதாகப் பெருமையடிக்கிறது. சிறியதொரு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டை எரித்து விடுகிறது, பாருங்கள்
நாவும் அந்த நெருப்பு போலத்தான். அக்கிரம உலகின் உருவே அது. நம் உடலின் உறுப்புக்களுள் அமைக்கப்பட்டு உடல் முழுவதையும் கறைப்படுத்தி, மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தை எரிக்கும் நெருப்பு போல் உள்ளது. அந்நெருப்போ நரகத்திலிருந்தே வருகிறது
காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் நீந்துவன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதன் அடக்கிவிடலாம், அடக்கியும் உள்ளான். நாவையோ எம் மனிதனாலும் அடக்க முடிவதில்லை
ஓயாமற் தொல்லைப்படுத்தும் தீமை அது: சாவு விளைக்கும் நஞ்சு நிறைந்தது அது
பரம தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவதும் அந்நாவாலே: கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதனைத் தூற்றுவதும் அந்நாவாலே
போற்றுவதும் தூற்றுவதும் ஒரே வாய்தான். என் சகோதரர்களே, இப்படி இருத்தலாகாது
ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அங்ஙனமே உப்பு நீரிலிருந்து நன்னீர் வராது
உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்: அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்
ஆனால், உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும் பொறாமையும் கட்சி மனப்பான்மையும் இருந்தால், அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்.
இத்தகைய ஞானம் விண்ணினின்று வருவதன்று: மண்ணுலகையே சார்ந்தது, கீழ் நாட்டத்தைப் பின்பற்றுவது, பேய்த்தன்மை வாய்ந்தது
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எங்குள்ளதோ, அங்கே குழப்பமும் எல்லா தீச்செயல்களும் இருக்கும்
விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது: இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்: பொறுமையைக் கடைப்பிடிக்கும்: இணக்கத்தை விரும்பும்: இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்: நடுநிலை தவறாது: கள்ளமறியாது.
சமாதானம் செய்வோர், சமாதானத்தில் விதைக்கும் விதையிலிருந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வென்னும் கனி விளைகிறது.
யாகப்பர்(யாக்கோபு)
அதிகாரம் -3: 1 முதல் 18 முடிய
இந்த விவிலிய வார்த்தைகள் நமது பாரம்பரிய கத்தோலிக்க திருச்சபையின் வுல்காட் பைபிள் பதிவு
Comments are closed.