அக்டோபர் 31 : நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். `ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

அஞ்சா நெஞ்சர் ஆண்டவர் இயேசு

அயர்லாந்தின் அப்போஸ்தலர் (திருத்தூதர்) என்று அழைக்கப்படுகின்ற புனித பேட்ரிக் தன்னுடைய உதவியாளரும் குதிரையோட்டியுமான பிரைனின் உதவியுடன் ஒவ்வோர் இடமாகச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார்.

ஒருநாள் அவருடைய உதவியாளர் பிரைன் அவரிடம், “தந்தையே! இன்று நீங்கள் இந்நாட்டின் தென்பகுதியில் நற்செய்தி அறிவிக்கப்போகிறீர்கள் அல்லவா…! அதனால் இன்று ஒருநாள் மட்டும் உங்களுடைய அங்கியை நான் அணிந்துகொள்கின்றேன்… என்னுடைய உடையை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள்” என்றார். உடனே புனித பேட்ரிக் ‘இவர் எதற்காக இப்படிக் கேட்கின்றார்?’ என்று ஒருநொடி யோசித்தார். பின்னர் அவர் ஆசையோடு கேட்கின்றார் என்பதற்காக, தன்னுடைய அங்கியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அவருடைய உடையையும் தொப்பியையும் வாங்கிப் போட்டுக் கொண்டார்.

புனித பேட்ரிக்கின் உதவியாளர் குதிரையின் பின்னால் அமர்ந்துகொள்ள, அவர் குதிரையை ஓட்டிக்கொண்டு தென்பகுதியை நோக்கிச் சென்றார். அயர்ந்து நாட்டின் தென்பகுதியில் புனித பேட்ரிக் நற்செய்தி அறிவிப்பதற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. அதனால் அவர் மிகவும் கவனமாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார். இடையிடையே அவருடைய உதவியாளர் அவரிடம் கேட்கின்ற கேள்விகட்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒரு காட்டுப் பாதையில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்கள் கொண்டு சென்றுகொண்டிருந்த குதிரை கத்தத் தொடங்கியது. என்னவென்று புனித பேட்ரிக் அந்தக் குதிரையின் காலைப் பார்த்தபோது, அதில் எங்கிருந்தோ பறந்துவந்த ஓர் அம்பானது குத்தியிருந்தது தெரியவந்தது. உடனே அவர் குதிரையை வேகமாக ஓட்டத் தொடங்கினார். அப்பொழுது புதருக்குள் மறைந்திருந்த எதிரிகள் புனித பேட்ரிக் குதிரையின் பின்னால் உட்கார்ந்திருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டு அவர்மீது அம்புகளை ஒவ்வொன்றாக எய்தார்கள். இதனால் புனித பேட்ரிக்கின் உதவியாளர் வலியால் அலறினார்.

தன்னை எதிரிகள் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள் என்பதை அறிந்த புனித பேட்ரிக் குதிரையை இன்னும் வேகமாக ஓட்டத் தொடங்கினார். ஒருகட்டத்தில் எதிரிகள் தன்னைப் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டார்கள் என்பதை உறுதிசெய்துகொண்டு, குதிரையை நிறுத்தினார். அதே நேரத்தில் தன்னுடைய உதவியாளர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அறிந்து, மிகுந்த வேதனையுடன் அவரைக் குதிரையிலிருந்து இறக்கினார்.

“என் அன்பிற்குரிய பிரைன்! எதிரிகள் என்னை எப்படியும் தாக்குவார்கள் என்று தெரிந்து தானே நீ என்னுடைய அங்கியை வாங்கி அணிந்துகொண்டாய்! நீ எனக்காகச் செய்த இந்தத் தியாகத்திற்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?’ என்று கண்ணீர் சிந்தி அழுதார். அதற்கு அவருடைய உதவியாளர், “தந்தையே! உங்களைக் காக்கும் பொருட்டு நான் இறப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு! நான் இறப்பதற்குள் எனக்கு ஆசி கூறுங்கள். நான் நிம்மதியாக உயிர்துறப்பேன்” என்றார். இதைக் கேட்ட புனித பேட்ரிக்கிற்கு இன்னும் அழுகை வந்தது. அவர் தன்னுடைய கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தன்னுடைய உதவியாளர்க்கு ஆசிகூற, அவர் மனநிறைவோடு உயிர்துறந்தார்.

தன்னுடைய தலைவர் புனித பேட்ரிக்கின் அங்கியை அணிந்தால் எப்படியும் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்கூட, அஞ்சா நெஞ்சத்தோடு அவருடைய அங்கியை வாங்கி அணிந்துகொண்டு இறுதியில் எதிரிகளால் கொல்லப்பட்ட புனித பேட்ரிக்கின் உதவியாளருடைய துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசுவைக் கொல்வதற்காக சூழ்ச்சி நடக்கின்றது. அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஏரோதிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அஞ்சா நெஞ்சத்தோடு எதிர்கொண்ட இயேசு

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயர் சிலர், “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கின்றான்” என்று சொல்கின்றபோது, இயேசு அவர்களிடம், பேய்களை ஓட்டி, பிணிகளைப் போக்கி, மூன்றாம் நாள் என்னுடைய பணி நிறைவுபெறும் என்பதை அந்த நரியிடம் கூறுங்கள் என்று மிகவும் துணிச்சலாகக் கூறுகின்றார்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் வந்த எதிர்ப்புகளைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கவில்லை. மாறாக, அவர் மிகவும் துணிவோடும் அஞ்ச நெஞ்சத்தோடும் ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி வந்தார் (யோவா 2: 4; 7;30) இன்றைய நற்செய்தியில் அவர் ஏரோதை நரி எனச் சொல்வது நமது கவனத்திற்கு உரியது. திருவிவிலியத்தைப் பொறுத்தளவில் நரி என்றால் (நெகே 4:3) அழிவின் சின்னமாகச் சுட்டிக் காட்டப் படுகின்றது. இங்கு இயேசு ஏரோதை அழிவினை சின்னமாகக் குறிப்பிடுவதற்கு நிறையத் துணிச்சல் வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவர் மிகுந்த துணிச்சலோடு ஏரோதை நரியென்று சொல்லிவிட்டுத் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்கின்றார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், இயேசுவிடம் இருந்த அதே துணிவோடும் அஞ்சா நெஞ்சத்தோடும் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘அஞ்சாதே ஏனெனில், நான் உன்னோடு இருக்கின்றேன்’ (எசாயா 43: 5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.