நம் விலங்குகளை உடைப்பவர் தூய ஆவியார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, அக்டோபர் 30, இப்புதன் காலையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. திருத்தூதர் பணிகள் நூலை மையப்படுத்தி, 13 பொது மறைக்கல்வியுரைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, இப்புதனன்றும், அந்நூலிலுள்ள புனித பவுல் அடிகளாரின் இரண்டாவது தூதுரைப் பயணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் பற்றி விளக்கினார். முதலில் திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 16, இறைவசனங்கள் 9 மற்றும்,10 வாசிக்கப்பட்டன.

“பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம் (தி.பணி.16,9-10)”.

பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியத்தில் தன் மறைக்கல்வியை ஆரம்பித்தார்.

திருத்தந்தையின் மறைக்கல்வி

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம்.

திருத்தூதர் பணிகள் நூலை நாம் வாசிக்கும்போது, தூய ஆவியார், திருஅவையின் தூதுரைப் பணிக்கு அடித்தளமாக இருக்கிறார். அவரே, தூதுரைப் பணியாளர்கள் பின்செல்லவேண்டிய பாதையைக் காட்டி, அவர்களை வழிநடத்துகிறார் என்பதைக் காண்கிறோம். இதனை, திருத்தூதர் பவுல், துரோவா நகரை அடைந்தபோது கண்ட காட்சியில், நாம் தெளிவாகப் காண்கிறோம். அக்காட்சியில், பவுல் அடிகளாரிடம், மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். திருத்தூதரும், இது கடவுளிடமிருந்து வந்த அழைப்பு என்பதில் உறுதிபூண்டு, எவ்வித தயக்கமுமின்றி, தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு, மாசிதோனியாவுக்குப் புறப்பட்டார். அப்பயணத்தில் சீலாவும் பவுலுடன் இருந்தார். அவர்கள் மாசிதோனியாப் பகுதியின் முக்கிய நகரமான பிலிப்பி சென்றனர். அங்கு பவுல், ஓய்வுநாளில் இறைவேண்டல் செய்வதற்காகக் குழுமியிருந்த பெண்கள் குழுவிற்கு முதலில் போதித்தார். அப்பெண்களில் ஒருவர் லீதியா. பவுல் அடிகளார் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு இயேசு அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும், அவரது கணவரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன் பயனாக, லீதியாவும், தன் வீட்டை கிறிஸ்துவைப் பின்செல்பவர்களுக்குத் திறந்து வைத்தார். கிறிஸ்தவ விருந்தோம்பல், விசுவாசத்தால் பிறப்பது என்பதற்கு, இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பிலிப்பி நகரில், ஓர் அடிமைச் சிறுமியைக் குணப்படுத்தியதற்காக, பவுலும், சீலாவும், சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில், நள்ளிரவில் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி ஆண்டவரிடம் உருக்கமாக மன்றாடினர். அச்சமயத்தில், திடீரென ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தால் அவர்களின் விலங்குகள் கழன்று வீழ்ந்தன. இந்த நிகழ்வால் அதிர்ச்சியுற்ற சிறைக்காவலர் அவர்களிடம், நான் மீட்படைய என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர்களிடமிருந்து ஆண்டவரது வார்த்தையை கேட்டபின், சிறைக்காவலர் தனது குடும்பத்தினரோடு திருமுழுக்குப் பெற்றார். இந்நிகழ்வுகளில் நாம் தூய ஆவியாரின் பணிகளையும், நற்செய்தியின் கட்டுகடங்காத வல்லமையையும் பார்க்கிறோம். ஆண்டவரது வார்த்தையைக் கேட்டு, மற்றவர்க்குப் பணிவிடை செய்த லீதியா போன்று, நம் இதயங்கள் திறக்கப்படுமாறு தூய ஆவியாரிடம் மன்றாடுவோம். நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், அடிமைப்படுத்தியிருக்கின்ற விலங்குகளை, தூய ஆவியாரால் மட்டுமே தகர்க்க இயலும் என்ற விசுவாசத்தில் உறுதிப்பட வேண்டுவோம். இதற்கு பவுல் மற்றும், சீலாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றுவோம்.

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்தார். அதன் பின்னர், ஈராக்கில் மக்களின் நியாயமான குரல்கள் கேட்கப்பட்டு,  பிரச்சனைகளுக்கு, நீதியான தீர்வுகள் காணப்படுமாறு கேட்டுக்கொண்டார். இறுதியில், கொரியா, இஸ்ரேல், இந்தோனேசியா, இங்கிலாந்து, டென்மார்க் என, பல நாடுகளிலிருந்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருப்பயணிகளையும், அவர்களின் குடும்பங்களையும் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் நிறைக்கட்டும் என வாழ்த்தி, திருப்பயணிகள் எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.