நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 26)

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம்
சனிக்கிழமை
லூக்கா 13: 1-9

அடுத்தவரைப் பாவி என்று முத்திரை குத்துவதை நிறுத்துவோம்

நிகழ்வு

Paradise Lost என்ற அமர காவியத்தை உலகிற்கு அளித்தவர் இங்கிலாந்தை சார்ந்த ஜான் மில்டன். இவர் தன்னுடைய பார்வையை இழந்தபிறகு, இரண்டாம் சார்லஸ் என்ற அரசனின் மகன் இவரிடம் வந்து, “நீங்கள் என்னுடைய தந்தையை விமர்சித்துப் பேசியதால்தான் இப்பொழுது பார்வையிழந்து நிற்கிறீர்கள்!” என்றான்.

உடனே ஜான் மில்டன் அவனிடம், “நான் உன்னுடைய தந்தையை விமர்சித்துப் பேசியதால்தான் என்னுடைய பார்வையை இழந்தேன் என்றால், உன்னுடைய தந்தையின் தலை எதிரிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றதே! (இரண்டாம் சார்லசின் தலை பூரிடன்ஸ் என்ற குழுவினரால் துண்டிக்கப்பட்டது) அப்படியானால் அவர் யாரை விமர்சித்துப் பேசினார்…?” என்றார். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வந்த வேகத்தில் அவன் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான்.

அரசன் இரண்டாம் சார்லசின் மகன், ஜான் மில்டன் பார்வையிழந்ததை விமர்சிக்க வந்தபோது, ஜான் மில்டனோ அவனுடைய தந்தை தலைவெட்டிக் கொல்லப்பட்டதை விமர்சித்ததால் அவன் அவமானப்போட்டுப் போனான். பலரும் இப்படித்தான் அடுத்தவர்களை விமர்சிக்கவும் குறைசொல்லவும் தொடங்கி, கடைசியில் அவர்களே விமர்சிக்கப்பட்டும் அவமானப்பட்டுப் போவதும்தான் வாடிக்கையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படியொரு நிகழ்வு வருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிட வந்தவர்கள்

இயேசு கிறிஸ்து எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் சிலர் வந்து, பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றுவிட்டான் என்று கூறுகின்றார்கள். இயேசு அவர்கட்கு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், இயேசுவிடம் வந்தவர்கள் அவரிடம் அந்தச் செய்தியை ஏன் சொல்லவேண்டும் என்று தெரிந்துகொள்ளது நல்லது.

உரோமை ஆளுநனாக இருந்த பிலாத்து, தன்னுடைய அதிகாரத்திற்குள் இருந்த எருசலேம் திருக்கோவிலிலிருந்து வந்த வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்திவிட்டான் என்பதற்காக யூதர்கள் அவனைக் கேள்வி கேட்டார்கள். இதனால் பிலாத்து தன்னைக் கேள்வி கேட்டவர்களையெல்லாம் கூலியாள்களைக் கொண்டு கொலைசெய்தான். இந்த செய்தியைத்தான் சிலர் இயேசுவிடம் வந்து சொல்கின்றார்கள். இதற்கு இயேசு பதில் சொல்லியாக வேண்டும். ஒருவேளை அவர் பிலாத்து செய்தது தவறு என்று சொன்னால், இயேசு உரோமை அரசாங்கத்திற்கு எதிராக இருக்கின்றார் என்றும் ஒருவேளை அவர் கொல்லப்பட்ட கலிலேயர்களிடம்தான் தவறு இருக்கின்றது என்றால் இயேசு யூதர்கட்கு எதிராகப் பேசுகின்றார் என்றும் சொல்லி அவரைச் சிக்கலில் மாட்டிவிடத் திட்டம் தீட்டினார்கள் அவரிடம் வந்தவர்கள். ஆனால், இயேசுவோ அவர்களுடைய கேள்விக்கு மறுகேள்வி கேட்டு, அவர்களுடைய திட்டத்தை முறியடிக்கின்றார்.

மனம்மாறாவிட்டால் யாவரும் அழியவேண்டியதுதான்

இயேசுவிடம் வந்த சிலர், பிலாத்து பலிசெலுத்திக் கொண்டிருந்தவர்களைக் கொன்ற செய்தியைச் சொன்னதும், அவர் அவர்களிடம் சீலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்த செய்தியைச் சொல்லி, “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்று கூறுகின்றார்.

இயேசுவிடம் வந்தவர்கட்கு இரண்டு உள்நோக்கங்கள் இருந்திருக்கும். ஒன்று அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பது. இன்னொன்று பலிசெலுத்திக்கொண்டிருந்த – பிலாத்துவால் கொல்லப்பட்ட – அந்தக் கலிலேயர்கள் பாவிகள் என்று நிரூபிப்பது. இத்தகைய உள்நோக்கங்களோடு வந்தவர்களிடம் இயேசு, அவர்கள் மட்டுமல்ல, மனம்மாறாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள் என்று சொல்வது நமக்கு ஒரு முக்கியமான செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. அது என்னவென்று பார்ப்போம்.

பிறரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய வாழ்வை சரிசெய்வோம்

இயேசு தன்னிடம் வந்தவர்களிடம் எடுத்துரைக்கும் மிக முக்கியமான செய்தி, மற்றவர்களை அவர்கட்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலையை, துன்பத்தைக் கொண்டு தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், உங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, மனம்மாறுங்கள் என்பதுதான். ஏனென்றால் பலர்க்கு அடுத்தவரை, அவர்க்கு ஏற்பட்டிருக்கும் நோய் நொடியைக் கொண்டு, இழப்பைக் கொண்டு தீர்ப்பிட்டுக்கொண்டிருப்பது ஒரு பொழுதுபோக்காக இருக்கும். யோபுவின் நண்பர்கள் அவர் பாவம் செய்ததால்தான் அவர்க்கு அப்படியொரு துன்பம் ஏற்பட்டது என்று சொல்வதைப் போன்று, பலரும் அடுத்தவரைக் குற்றம் சாற்றுவதுதான் வாடிக்கையாக இருக்கின்றது. இந்நிலையில்தான் இயேசு ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார்.

ஆகையால், நாம் பிறரைப் பாவிகள் என்று முத்திரை குத்தும் போக்கினை விட்டுவிட்டு, நம்முடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, மனம்மாறத் தயாராவோம்.

சிந்தனை

‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்பொழுதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்’ (மத் 7: 1) என்பார் இயேசு. ஆகையால், பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடும் போக்கினை விட்டுவிட்டு, நம்முடைய வாழ்வைச் சரிசெய்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.