சரக்கு லாரியில் கிடந்த உடல்கள் குறித்து இங்கிலாந்து JRS

இப்புதன் விடியற்காலையில், இங்கிலாந்தின் கிழக்கில், எஸ்ஸெக்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி ஒன்றில், உயிரற்ற 39 உடல்கள் காணப்பட்டது, மிகுந்த வேதனை அளிக்கிறது என்று, இங்கிலாந்தின் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி (JRS-UK) ஒருங்கிணைப்பாளர், Sarah Teather அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

வளர் இளம் பருவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட, இறந்துகிடந்த 39 பேரையும், ஏதோ ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறிய Teather அவர்கள், தங்கள் நாட்டில் நிலவும் கொடுமைகளை விட்டு தப்பித்துச் செல்லும் மக்கள், விவரிக்க இயலாத துன்பங்களைத் தாங்கி, விடுதலை பெற விழைவதை, இந்த மரணங்கள் உணர்த்துகின்றன என்று கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் வேற்று நாடுகளுக்கு மக்களைக் கொண்டு செல்லும் வர்த்தகக் கும்பல்களை தண்டிப்பதில் அரசுகள் காட்டிவரும் கவனத்தில் ஒரு பகுதியையாவது, புலம் பெயர்ந்தோரை வரவேற்கும் வழிகளை உறுதி செய்வதில் திருப்பினால், பல உயிர்களை காக்கமுடியும் என்று Teather அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பு, மனிதாபிமான முறையில் விசா அனுமதி வழங்குவதற்கு பல ஐரோப்பிய நாட்டு அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, உயர்ந்த சுவர்கள் கட்டும் முனைப்பில் ஒவ்வொரு நாடும் ஈடுபடுவதை விடுத்து, பாலங்களை அமைக்க முன்வந்தால், இந்த கொடுமைக்கு ஓரளவு தீர்வு காணமுடியும் என்று புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைமை இயக்குனர் Maurice Wren அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments are closed.