நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 25)
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம்
வெள்ளிக்கிழமை
லூக்கா 12: 54-59
காலத்தின் குரல்கேட்டு கடவுளோடு ஒப்புரவாவோம்
நிகழ்வு
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளை. அந்தக் காலை வேளையில் இலண்டன் மாநகரின் ஒரு முக்கியமான சாலையில், மக்கள் எல்லாரும் கோயிலுக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரே ஒரு மனிதர் மட்டும் எதையோ இழந்தவர் போன்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார்.
அப்பொழுது கோயில் மணி ஒலித்தது. அது அவருடைய உள்ளத்தில் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ‘ஒரு காலத்தில் கோயிலே கதியெனக் கிடந்தேன்… இன்றைக்கு கோயில் மணி அடித்தபின்னும் கோயிலுக்குப் போகாமலும் கடவுளை நினையாமலும் இருக்கின்றேன்!’ என்று எண்ணிப் பார்த்தார். அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது. ‘அது என்ன சத்தம்’ என்று அவர் திரும்பிப் பார்த்தபோது, பெண்ணொருவர் நான்கு சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தார். அவர் அந்த மனிதருடைய அருகில் வந்ததும், ‘கோயிலுக்குப் போகிறேன்… வண்டியில் இடம் இருக்கின்றது… என்னோடு வருகின்றீர்களா…? என்று கேட்டார். அந்த மனிதர் ஒரு கணம் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டியில் ஏறிக்கொண்டார்.
அவர் வண்டியில் ஏறிக்கொண்டதும் வண்டி மெல்லக் கிளம்பியது. அந்தப் பெண்மணி தான் யாரென்று அவரிடம் அறிமுகம் செய்துகொண்டார். அந்த மனிதரும் தன்னை ‘ராபர்ட் ராபின்சன்’ என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னுடைய பெயர் ராபர்ட் ராபின்சன் என்று சொன்னதும், வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த அந்தப் பெண்மணி, “ஓ மிகப்பெரிய கவிஞரான ராபர்ட் ராபின்சன் நீங்கள்தானா..?. உங்களுடைய கவிதை நூலைத்தான் வாசித்துக் கொண்டு வருகின்றேன். இதோ நீங்கள் எழுதிய கவிதை நூல்” என்று அந்த நூலை அவர்க்குக் காட்டினார்.
ராபர்ட் ராபின்சன் அந்த நூலை பொறுமையாகப் பார்த்தார். அப்பொழுது அந்தப் பெண்மணி அவரிட்ம், “ஆமாம், உங்கட்கு கடவுள்மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டே! அப்படிப்பட்ட நீங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையில் கோயிலுக்குச் செல்லாமல், வேறு எங்கோ சென்றுகொண்டிருந்ததுபோன்று தெரிந்ததே” என்றார் அந்தப் பெண்மணி. “ஆமாம். வேறோர் இடத்திற்குத்தான் போய்க்கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் கடவுளுக்கும் எனக்கும் ஒரு சின்னச் சண்டை. அதனால்தான் நான் கோயிலுக்கும் போகாமல் அவரைப் பற்றி நினையாமலும் இருக்கின்றேன்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு, அவர் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேசினார்: “‘நான் அன்பு செய்யும் என் கடவுளை விட்டு ஒருநாள் விலகினாலும் விலகுவேன்’ என்று இந்தக் கவிதை நூலில் எழுதி இருக்கின்றேன். நான் எழுதியது போன்றே நடந்துவிட்டது.” அவர் இப்படிச் சொன்ன அடுத்த நொடி அந்தப் பெண்மணி, “ ‘இதோ என் இதயம். இதை எடுத்து உம்முடைய முத்திரை இடும்’ என்றும் இதில் எழுதியிருக்கின்றீர்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்றார்.
“காலம் மிகவும் கடந்து விட்டது. இதற்கு மேல் நான் கடவுளோடு ஒப்புரவாகி என்ன பயன்?” என்று ராபர்ட் ராபின்சன் கேட்க, “கடவுளோடு ஒப்புரவாக இந்த ஞாயிற்றுக்கிழமையைவிட நல்ல நாள் எங்கே கிடைக்கப்போகின்றது” என்று அந்தப் பெண்மணி சொன்னதும், ராபர்ட் ராபின்சன் என்ற அந்த கவிஞர் கடவுளோடு ஒப்புரவாகத் தொடங்கினார். அதற்குப் பின்பு அவர் கடவுளைவிட்டு விலகியதே இல்லை.
நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும்; அவர் குரல் கேட்டு அவரோடு ஒன்றித்து வாழவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் கடவுளைவிட்டு விலகி நிற்காமல், அவரோடு ஒன்றித்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயற்கையின் குரலைக் கேட்கத் தெரிந்த நாம், கடவுளின் குரலைக் கேட்கத் தெரிந்துகொள்வோம்!
நற்செய்தியில் இயேசு மக்கள்கூட்டத்தைப் பார்த்து, “நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கத் தெரிந்த நீங்கள், இக்காலத்தை ஆராய்ந்து பார்க்காமல் இருப்பது எப்டி?” என்று கடிந்து கொள்கின்றார்.
ஆண்டவராகிய இயேசு மக்களைத் தேடி வந்தார்; தன்னுடைய மக்கள் மனம்மாறி தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று மிகவும் விரும்பினார் (மத் 23: 37). ஆனால், அவர்கள் அவருடைய குரலைக் கேளாமல், அவர்க்கு மதிப்பும் அளிக்காமல் வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான் இயேசு மக்களைப் பார்த்து, இயற்கையில் தோன்றும் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, இது இப்படி நடக்கும் என்று சொல்லத் தெரிந்த நீங்கள், காலத்தில் தெரியும் கடவுளின் குரலைக் கேளாமல் இருக்கின்றீர்களே! என்று வருந்துகின்றார்.
இன்றைக்கும் கூட கடவுள் நம்மிடம் பல வழிகளில் பேசுகின்றார். எனவே, நாம் கடவுளின் குரலினைக் கேட்டு, அவரோடு ஒப்புரவாவதே சாலச் சிறந்த செயல்.
சிந்தனை
‘இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!’ (2 கொரி 6:2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இதுவே தகுந்த நாள் என்றும் இன்றே மீட்பு நாள் என்றும் உணர்ந்து, கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து, அவரோடு ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.