நற்செய்தியின் கதவுகளை, அனைவருக்கும் திறந்துவைக்க

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23, தன் புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட கருத்தையும், ‘சிறப்பான மறைபரப்புப்பணி மாதம்’ என்ற கருத்தையும் இணைத்து, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை, #ExtraordinaryMissionaryMonth என்ற ‘ஹாஷ்டாக்’குடன்  பதிவு செய்துள்ளார்.

“‘சிறப்பான மறைபரப்புப்பணி மாதத்’தைக் கொண்டாடும் வேளையில், நற்செய்தியின் கதவுகளை, அனைத்து மக்களுக்கும் திறந்துவைக்கவும், இறையன்பிற்கு உன்னத சாட்சிகளாக இருக்கவும், தூய ஆவியார் நம்மைத் தூண்டவேண்டுமென்று மன்றாடுகிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் தலைவரான கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், Zenit கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியில், அக்டோபர் மாதம் சிறப்பிக்கப்படும் ‘சிறப்பான மறைபரப்புப்பணி மாதத்’தைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ‘மறைபரப்புப்பணி மாதம்’ என்று சிறப்பிக்கப்பட்டாலும், இவ்வாண்டு, திருமுழுக்கு பெற்ற அனைவருமே மறைபரப்புப்பணியில் முழுமனதோடு ஈடுபட உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் அக்டோபர் மாதத்தை, ‘சிறப்பான மறைபரப்புப்பணி மாத’மாக அறிவித்தார் என்று கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

‘நம்பிக்கை பரப்புதல் பாப்பிறைக் கழகத்தை’, ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய வணக்கத்துக்குரிய Pauline Jaricot அவர்கள், திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரும், தங்கள் செபங்களின் வழியே, மறைபரப்புப்பணியில் ஈடுபடமுடியும் என்பதைச் சொல்லித்தந்தார் என்று, கர்தினால் ஃபிலோனி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.