நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 23)

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம்
புதன்கிழமை
லூக்கா 12: 39-48

நீங்கள் நம்பிக்கைக்குரிய பணியாளரா?

நிகழ்வு

ஒருநாள் மாவீரன் நெப்போலியனைச் சந்திக்க அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அப்படி வந்தபோது கூடவே ஒரு படைவீரனையும் தங்களோடு கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

“அரசே! நீங்கள் இந்தப் படைவீரனுக்குப் பதவி உயர்வு தரவேண்டும்” என்றார்கள் அவர்கள். “இவனுக்குப் பதவி உயர்வு கொடுக்கும் அளவுக்கு அப்படியென்ன நல்லது செய்துவிட்டான்?” என்று நெப்போலியன் அவர்களைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள், “இவன் அண்மையில் நடைபெற்ற போரில் சிறப்பாக போரிட்டு, நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்தான். அதனால் இவனுக்குப் பதவி உயர்வு தரவேண்டும் என்று கேட்கின்றோம்” என்றார்கள்.

உடனே நெப்போலியன் அவர்களிடம், “போரில் சிறப்பாகச் செயல்பட்டது சரி; அதற்குப் பின்னால் வந்த நாள்களில் இவன் தனக்குப் பணிக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தானா…?” என்று கேட்டான். அதிகாரிகள் யோசிக்கத் தொடங்கினார்கள். பின்னர் அவர்கள் நெப்போலியனிடம், “எதிரி நாட்டவரோடு போரிட்டபோது இருந்த உற்சாகமும் பிரமாணிக்கமும் அதற்குப்பின் வந்த நாள்களில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவன் தனக்குப் பணிக்கப்பட்ட பணிகளில் அதன்பிறகு நம்பிக்கைக்குரியவனாய் இல்லை” என்றார்கள்.

“என்றோ ஒருநாள் நம்பிக்கைகுரியவனாய் இருந்தான் என்பதற்காக இவனுக்குப் பதவி உயர்வு கொடுக்க முடியாது; இறுதிவரைக்கும் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பதவி உயர்வு கொடுக்கப்படும்” என்றான் மாவீரன் நெப்போலியன்.

ஆம், நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நாம் இறுதிவரைக்கும் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதான் நமக்கு இறைவனிடமிருந்து ஆசி கிடைக்கும். இன்றைய நற்செய்தி வாசகம், நம்மை நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ அழைப்புத் தருகின்றது நாம் எப்படி நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக இருப்பது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே!

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரிய பணியாளர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தி, நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! அல்லது நாம் ஒவ்வொருவர்க்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். அந்தப் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்ட பணிகளாக இருக்கலாம் அல்லது நாம் வகிக்கக்கூடிய தந்தை தாய், கணவன் மனைவி, சகோதரன் சகோதரி என்ற பொறுப்பாக இருக்கலாம். அந்தப் பொறுப்பு அல்லது பணி கடவுள் நமக்காகவே கொடுத்திருக்கும் சிறப்பான பொறுப்பு என்று உணர்ந்து வாழவேண்டும்.

பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால் ஆசி

இயேசு சொல்லும் இவ்வுவமை நமக்கு எடுத்துச் சொல்லும் இரண்டாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும் என்பதாகும்.

இயேசுவின் இரண்டாம் வருகை தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த உவமையானது, யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கின்றார்களோ அவர்கட்கு ஆசி கிடைக்கும் என்று கூறுகின்றது. இங்கு ஆசி என்று சொல்வதை மேலான பொறுப்பு என்றுகூடச் சொல்லலாம். தலைவராம் இயேசு யாரும் நினையாத நேரத்தில் வருவார். ஆகவே, அவர் வருகையில் நாம் அனைவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கும் பட்சத்தில், அவர் நம்மை உயர்ந்த பொறுப்பில் அமர்த்துவார் என்பது உறுதி. இது குறித்து புனித பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறும்போது, “பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படலாம் அன்றோ” (1 கொரி என்று குறிப்பிடுவார். ஆகையால், நாம் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க முயற்சி செய்வோம்.

பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருந்தால் தண்டனை

யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கின்றார்களோ, அவர்கள் தங்களுடைய பதவிகளில் உயர்வடைவார்கள் என்று சொன்ன இயேசு, நிறைவாக, யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருக்கின்றார்களோ, அவர்கட்கு தண்டனை கிடைக்கும் என்று கூறுகின்றார்.

இயேசு சொல்லும் இந்த உவமையில் ஒரு முக்கியமான செய்தியும் அடங்கி இருக்கின்றது. அது என்னவென்றால், பொறுப்பில் இருப்பவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வறியவர்களை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவர்களுடைய குரல் ஆண்டவரை மிக விரைவாக எட்டும், அதுவே பொறுப்பில் இருப்பவர்கட்கு வினையாய் அமைந்துவிடும். காயின் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபேலை நல்லமுறையில் கவனித்திருக்க வேண்டும்; ஆனால், அவனே ஆபேலைக் கொன்றுபோட்டதால், அது அவனுக்கு வினையாய் அமைகின்றது. நற்செய்தியில் இயேசு சொல்லும் இவ்வுவமையில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருப்பவர்களை தலைவர் கொடுமையாகத் தண்டிப்பார் என்று கூறுகின்றார்.

ஆகையால், நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் பொறுப்பற்றவர்களாய் இருப்பதை விடுத்து, பொறுப்புள்ளவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்’ (மத் 25: 23) என்கின்றது இறைவார்த்தை. நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில், அது சிறிதாக இருந்தாலும், அதில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.