அக்டோபர் 20, 93வது மறைபரப்பு ஞாயிறு
உடன் வாழ்கின்றவர்களுக்கு நற்செய்தியின் ஒளியைக் கொண்டு செல்ல உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
“நம் காலத்தில் வாழ்கின்றவர்களுக்கு நற்செய்தியின் ஒளியைக் கொண்டு செல்வதற்கு உங்களை ஊக்கப்படுத்துகிறேன். பிரிவினைகளை மேற்கொள்வதற்கு, உடன்பிறந்தநிலை மற்றும், உரையாடலைக் கைக்கொண்டு, சுதந்திரம் மற்றும், இரக்கத்தின் சான்றுகளாக வாழ்வீர்களாக” என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு மறைபரப்பு மாதமாகவும், அக்டோபர் 20, இஞ்ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறாகவும் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, #ExtraordinaryMissionaryMonth #MissionaryOctober என்ற ‘ஹாஷ்டாக்’களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மேலும், அக்டோபர் 20, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், 93வது மறைபரப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பத்து இலட்சம் சிறார் செபமாலை
இன்னும், “பத்து இலட்சம் சிறார் செபமாலை செபிக்கின்றனர்” என்ற தலைப்பில், உதவி தேவைப்படும் திருஅவைகளுக்கு உதவும் Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு நடத்தும் நடவடிக்கையைப் பாராட்டி ஊக்குவித்து #HolyRosary உடன், அக்டோபர் 18, இவ்வெள்ளி மாலையில், ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு இளையோரே, ஒன்றிப்பு மற்றும், அமைதிக்காக நீங்கள் செபிக்கும்போது, செபமாலை மணிகளில் ஒன்றில் நான் இருக்கிறேன் என்பதை நினைவில் இருத்துங்கள் என்ற சொற்களை, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.