அக்டோபர் 19 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்.
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“வாய்ப்பை – தூய ஆவியாரை – நழுவவிடாதே”
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய பேச்சாளர் வில்லியம் ஜென்னிங்க்ஸ் ப்ரயன் (William Jennings Bryan 1860 – 1925). ஒரு சமயம் இவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டார். அழைப்பினை ஏற்றுக்கொண்டு பேசுவதற்குச் சென்ற ப்ரயன் அருமையானதொரு சொற்பொழிவினை வழங்கினார். மக்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்டு, வியந்து அவரைப் பாராட்டினார்கள்.
கூட்டம் முடிந்ததும் அவரைச் சந்திக்க வந்த ஒரு பெரியவர் அவரிடம், “ப்ரயன்! உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருந்தது… தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது” என்றார். உடனே ப்ரயன் அவரிடம், “நான் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் என்னால் இப்படியொரு சொற்பொழிவை ஆற்ற முடிந்தது” என்றார்.
“நீங்கள் சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை. சற்றுப் புரியும்படி சொல்லுங்களேன்” என்று அந்தப் பெரியவர் அவரை வேண்டி நிற்க, ப்ரயன் அந்தப் பெரியவர் புரிந்துகொள்ளும்படி சொல்லத் தொடங்கினார்: “இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவர்க்கும் பல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. எனக்கு நான் ஒரு பேச்சாளராக மாறுவதற்கான பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அந்த வாய்ப்புகளை எல்லாம் நான் உதறித் தள்ளாமல், சரியான முறையில் பயன்படுத்தினேன். அதனால்தான் நான் ஒரு பேச்சாளராக உங்கள் முன்னம் நிற்கின்றேன்” என்றார்.
நாம் ஒவ்வொருவர்க்கும் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமோ, அதுபோன்றுதான் நாம் தந்தை, மகன், தூய ஆவியாரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த மூவோர் இறைவனை அதிலும் குறிப்பாகத் தூய ஆவியாரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதபோது, அல்லது அவரைப் பழித்துரைக்கின்றபோது எத்தகைய தண்டனையை நாம் பெறுவோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தைக் கடவுளைப் புறக்கணித்த மக்கள்
நற்செய்தியில் இயேசு, “மானிட மகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்” என்கின்றார். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேல் மக்களை நல்வழிப்படுத்துவதற்கு தந்தைக் கடவுள் பல்வேறு இறைவாக்கினர்களை அவர்கள் நடுவில் அனுப்பினார்; இறுதியில், அவர்கள் நடுவில் திருமுழுக்கு யோவானை அனுப்பினார். அவர்களோ அவரைக் கொலைசெய்தார்கள். மெசியாவின் முன்னோடியாக, அவர்க்காக மக்களைத் தயார்செய்த திருமுழுக்கு யோவானை யூதர்கள் கொன்றுபோட்டது மிகப்பெரிய குற்றம்; அது அவரை அனுப்பிய தந்தைக் கடவுளுக்கு எதிராக குற்றம். ஆனால், இயேசு அவர்கட்காக தந்தையிடம் “தந்தையே! இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கின்றார்கள். இவர்களை மன்னியும்” (லூக் 23: 34, திப 3:17) என்று சொல்லி, மன்றாடியதால் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
இயேசுவைப் புறக்கணித்த மக்கள்
தந்தையைப் புறக்கணித்த மக்கள் அவர் மகன் இயேசுவை ஏற்றுக்கொண்டார்களா? என்றால் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அவரை இழிவுபடுத்தினார்கள்; அவமதித்தார்கள்; கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டார்கள். ஆனாலும் அந்த மக்கட்கு வாழ்வுதர இறுதி வாய்ப்பான தூய ஆவியார் அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவரை அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்களா? சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரைப் புறக்கணித்து தங்கள்மீது தண்டனையை வருவித்து கொண்ட மக்கள்
யூதர்கள் தந்தைக் கடவுளைப் புறக்கணித்தார்கள். பின்னர் இயேசு கிறிஸ்துவைப் புறக்கணித்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் நடுவில் உண்மையை வெளிப்படுத்தும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் தூய ஆவியார் அனுப்பப்பட்டார். அவரை அவரை ஏற்றுக்கொண்டார்களா? இல்லைவே இல்லை. தூய ஸ்தேவன் தன்னைக் கல்லால் எறிந்து கொல்ல முயன்றவர்களிடம் சொல்வதுபோன்று, அவர்கள் தூய ஆவியாரையும் எதிர்த்தார்கள் (திப 7: 51). இவ்வாறு அவர்கள் வாழ்வு பெறுவதற்கான கடைசி வாய்ப்பான தூய ஆவியாரையும் இழந்தார்கள் அல்லது அவரைப் பழித்துரைத்துப் பாவம் செய்து மன்னிக்க முடியாத தண்டனையை தங்கள்மேல் வருவித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களிடம் இருந்து நற்செய்தி எடுக்கப்பட்டு, சமாரியர்களிடமும் (திப 8) பின்னர் புறவினத்து மக்களிடமும் கொண்டு செல்லப்பட்டது (திப 10).
சுருங்கச் சொல்லவேண்டும் என்றால், மக்கள் தந்தைக் கடவுளைப் புறக்கணித்தபோது மகன் அவர்கட்காக இறைவனிடம் பரிந்து பேசினார். மகனை மக்கள் புறக்கணித்தபோது தூய ஆவியார் அங்கு துணைக்கு வந்தார். தூய ஆவியாரையும் மக்கள் புறக்கணித்தால் அவர்கட்கு உதவ யாரும் வரமாட்டார் என்பதால்தான் இயேசு, தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் அல்லது புறக்கணிப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்கின்றார் இயேசு. நாம் மூவொரு கடவுளை நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் காட்டும் வழியில் நடக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை.
‘மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்’ (யோவா 3: 36) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகையால், நாம் மூவொரு கடவுளான தந்தையிடமும் மகனிடமும் தூய ஆவியாரிடமும் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.