பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு (ஏப்ரல் 15)

னம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்!

பிரபல சிறுகதை எழுத்தாளரான ஓ.ஹென்றி சொல்லக்கூடிய ஒரு கதை. ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அந்தச் சிறுவன் படித்துவந்த அதே வகுப்பில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவர்மீது மதிப்பும், மரியாதையும், உள்ளார்ந்த அன்பும் வைத்திருந்தார்கள். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேறுவேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். சிறுவன் வளர்ந்து தன்னுடைய கிராமத்திற்கு அருகே இருந்த ஒரு நகரத்திற்கு குடிபெயர்ந்து போனான். அங்கு அவனுக்கு புதிய நண்பர்கள், அதுவும் தீய வழியில் நடக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள். அதனால் அவன் சிறுது காலத்திலேயே கைதேர்ந்த பிக்பாக்கெட் திருடனாக மாறிப்போனான்.

ஒருநாள் அவன் ஒரு மூதாட்டியிடமிருந்து பர்சை திருடிக்கொண்டு ஆளில்லாத ஒரு வீதியின் வழியாக சென்றுகொண்டிருந்தான். அப்போது திடிரென்று அவனுக்கு எதிரே பள்ளிக்கூடத்தில் அவனோடு படித்த பெண் வந்துகொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்தபோது, அவளது முகம் மிகப் பிரகாசமாகவும், அருள்பொங்கி வழியக் கூடியதாகவும் இருந்தது. அப்போது அவன் அவளுக்கு முன்பாக நிற்பதற்கு அருகதையற்றவற்றவனாக உணர்ந்து, தன்னை அருகில் இருந்த ஒரு மின்கம்பத்திற்குப் பின்னால் மறைத்துக்கொண்டான். அவள் அவனைக் கடந்துபோன பின்பு, தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தான். அது கடவுளுக்கு உகந்த வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்தான். எனவே, அவன் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “கடவுளே நான் மனம்மாறவேண்டும்” என்று மிக உருக்கமாக ஜெபித்தான். அவன் செய்த ஜெபம் அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவே, அவன் தான் செய்துவந்த திருட்டு வேலையை விட்டுவிட்டு மனம்திரும்பிய மனிதனாக வாழத் தொடங்கினான்.

கதையில் வரும் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசமான ஒளி திருட்டுவேலையில் ஈடுபட்டிருந்த பையனுடைய வாழ்க்கையில் மனமாற்றத்தைக் கொண்டுவந்ததுபோல, பேதுரு திரண்டிருந்த மக்களிடம், அவர்கள் இயேசுவுக்கு செய்த தீமையை எடுத்துச் சொன்னபோது, அவர்கள் மனம்வருந்தி, மனம்திருந்தி திருமுழுக்குப் பெற்று புதிய மனிதர்களாக வாழத் தொடங்கினார்கள்.
.
பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பிவாருங்கள்’ என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் அதனைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு திரண்டிருந்த மக்களைப் பார்த்து, “நீங்கள் வாழ்வுக்கு ஊற்றானவரைக் கொன்றுபோட்டுவிட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். எனவே, உங்கள் பாவங்கள் போக்கும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்” என்கின்றார். பேதுரு மக்களுக்கு அறிவித்த செய்தியைக் கேட்டு, மக்கள் மனம்மாறி, திருமுழுக்குப் பெறுகின்றார்கள்.

இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய ஆழமான செய்தி என்னவெனில், திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, மக்களிடம் அவர்கள் செய்த குற்றத்தை ஓர் இறைவாக்கினரைப் போன்று எடுத்துரைக்கின்றார். அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு மக்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து மனம்மாறுகின்றார்கள். ஆகையால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் ஓர் இறைவாக்கினரைப் போன்று இறைவனுடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை மனம்மாற்றத்திற்கு இட்டுச்செல்லவேண்டும் இது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஓர் இறைவாக்கினர் யார், அவருக்கு உள்ள கடமை என்ன என்பதை இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்தில் மிக அழகாக வாசிக்கலாம். “தீயோனிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்’ என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவார்; ஆனால், அவர்களது இரத்ததப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால், தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திருமாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக்கொள்வாய்” (எசே 33:8) என்று ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக அங்கு வாசிக்கலாம். ஆம், பாவ வழியில் நடக்கும் ஒருவரிடம் அவருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லி, அவரை மனம்திருந்தி வாழச் செய்வதுதான் ஓர் இறைவாக்கினருக்கு இருக்கின்ற தலையாய கடமையாகும். அதைச் செய்யாதபோது ஓர் இறைவாக்கினர் தன்னுடைய கடமையிலிருந்து தவறுகின்றார் என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் பேதுரு அப்படித்தான் ஓர் இறைவாக்கினரைப் போன்று செயல்பட்டு, அவர்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றார்.

ஆகவே, நாம் ஒவ்வொரும் பேதுருவைப் போன்று செயல்பட்டு, மக்களை மனமாறச் செய்து, அவர்களை ஆண்டவரிடத்தில் கொண்டுவருவதுதான் நம்முன்னே இருக்கின்ற சவாலாக இருக்கின்றது.

அடுத்ததாக, பேதுரு இத்தகைய நெறியை – மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்ற நெறியை – யாரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்று பார்க்கும்போது, அதனை ஆண்டவர் இயேசுவிடமிருந்துதான் கற்றிருக்கின்றார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்பார். இயேசுவின் இந்த வார்த்தையை (பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்) உள்வாங்கிக்கொண்டுதான் பேதுரு மக்களை மனம்மாறுவதற்கு அழைப்பு விடுக்கின்றார்.

அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைப்பதற்கு முன்னதாக, இயேசுவை மறுதலித்த குற்றத்திற்காக மனம் வருந்தி, மனம் திரும்புகின்றார். ஆகையால், ஓர் இறைவாக்கினர்/ இறையடியார்/ இறைவாக்கை எடுத்துரைப்பவர் மக்களுக்கு மனமாற்றச் செய்தியை எடுத்துரைக்கும் முன்னதாக, அவர் மனம்திருந்தி கடவுளுக்கு ஏற்புடையவராக, இரண்டாம் வாசகத்தில் கேட்பது போல பாவம் செய்யவராக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அறிவிக்க மனமாற்றச் செய்த பொருளுள்ளதாக இருக்கும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், பேதுருவைப் போன்று மக்களுக்கு மனமாற்றச் செய்தியை அறிவித்து அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதற்கு முன்னதாக நாம் பாவமில்லா வாழ்க்கை வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.