அக்டோபர் 17 : நற்செய்தி வாசகம்
ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54
அக்காலத்தில் இயேசு கூறியது: “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.
இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.
ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.
ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.”
இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
லூக்கா 11: 47-54
“இந்தத் தலைமுறையிடம் கணக்குக் கேட்கப்படும்”
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய இரு சக்கர வண்டியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். ஓரிடத்தில் எதிரே வந்த பேருந்து அவன்மீது மோத, வண்டி ஒருபக்கமாய், அவன் ஒரு பக்கமாய்த் தூக்கி வீசப்பட்டான். பக்கத்தில் இருந்தவர்கள்தான் அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, ஒருவழியாகக் காப்பாற்றினார்கள்.
அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் (ஒரு கிறிஸ்தவர்) அவனுடைய நெஞ்சில் ‘ஜீசஸ்’ என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்துவிட்டு, “இப்படியொரு பக்தியான இளைஞனுக்கா இந்தமாதிரி விபத்து ஏற்படவேண்டும்…?” என்று மிகவும் வருத்தப்பட்டார். அந்த மருத்துவர்க்கு அருகில் இருந்து, அவர்க்கு உதவிசெய்துகொண்டிருந்த செவிலித்தாய் ஒருவர் இதைக் கேட்டுவிட்டு அவரிடம், “இவன் தன்னுடைய நெஞ்சில் ‘ஜீசஸ்’ என்று பச்சை குத்தி என்ன பயன்? இவன் செய்யாத அட்டுழியங்கள் இல்லை!” என்றார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…? சொல்வதை கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்” என்று மருத்துவர் அந்த செவிலித்தாயை வினவ, செவிலித்தாய் அவரிடம், “இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன் தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறானே ஒழிய, அதற்கும் இவனுடைய வாழ்க்கைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் இவன் செய்யாத தப்பு இல்லை. அதனால்தான் என்னவோ இவனுக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கின்றது” என்று வருத்தத்தோடு சொன்னார்
எப்படியும் வாழ்ந்துவிட்டு, நெஞ்சில் இயேசு என்று பச்சை குத்துவதாலும் அல்லது இயேசுவின் திருப்பெயரைச் சொல்வதாலும் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது…? அது மிகப்பெரிய போலித்தனம் அல்லது முரண்பட்ட வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டும்.
இன்றைய நற்செய்தியில் போலியான அல்லது முன்னுக்குப் பின் முரணான வாழ்க்கை வாழ்ந்துவந்த திருச்சட்ட அறிஞர்களை ஆண்டவர் இயேசு கடுமையாகச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு அவர்களை ஏன் அவ்வளவு கடுமையாகச் சாடவேண்டும்? நம்முடைய நம்பிக்கை வாழக்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர்களைக் கொன்றவர்களும் அவர்கட்கு நினைவுச் சின்னங்களை எழுப்பியவர்களும்!
நற்செய்தியில் இயேசு திருச்சட்ட அறிஞர்களின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். திருச்சட்ட அறிஞர்களின் அல்லது யூதர்களின் முன்னோர்கள் அவர்கட்கு இறைவாக்கை எடுத்துச் சொன்ன இறைவக்கினர்களைக் கொன்றொழித்தார்கள். அவர்களின் வழிவந்தவர்களோ இறைவாக்கினர்கட்கு நினைவுச் சின்னங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் அவர்களுடைய மூதர்களின் செயலை நியாயப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.
யூதர்கள், இறையடியார்கள் அல்லது இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்திய வரலாறு தொடக்கத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. காயினால் கொல்லப்பட்ட ஆபேல் முதல் (தொநூ 4:8) சக்கரியா வரை (2 குறி 24: 20-22) இன்னும் சொல்லப்போனால் இயேசுவரை அவர்கள் சிந்தித்த இரத்தம் அதிகம். இதற்காக அவர்களிடம் கணக்குக் கேட்கப்படும் என்கின்றார் இயேசு. யூதர்கள் இறைவாக்கை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் இயேசுவையும் கொன்றதாலோ என்னவோ அவர்கள் கி.பி. 70 ஆண்டு மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தவேண்டிய நிலைக்கு உள்ளனார்கள். அப்படியானால் யூதர்கட்கு ஏற்பட்ட அந்த அழிவு அவர்கள் இறைவக்கினர்களையும் இயேசுவையும் மிக மோசமாக நடத்தியதன் விளைவு என்று உறுதியாகச் சொல்லலாம்.
இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கத் தயாரா?
யூதர்கள் மத்தியில் இறைவாக்கை எடுத்துரைத்த இறைவாக்கினர்களைப் போன்று, நம் மத்தியிலும் குருக்கள், துறவிகள் என்று பலர் இறைவாக்கை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை நாம் எவ்வாறு நடத்துகின்றோம்? இவர்கட்கு நாம் எவ்வாறு மதிப்பளிகின்றோம்? சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்கின்றவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்” (மத் 10: 40) என்று சொல்லும் இயேசு, “உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால், தீர்ப்பு நாளில் சோதோம் கொமொரோப் பகுதிகட்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாக இருக்கும்” (மத் 10: 14-15) என்கின்றார். ஆகையால், ஒவ்வொருவரும் இறைவாக்கினர் என்பவர் இறைவனுடைய பதிலாள் என்பதை உணர்ந்து, அவர்க்குரிய மதிப்பளிப்பதும் அவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பதும் சாலச்சிறந்தது.
சிந்தனை
‘ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்’ (உரோ 2:6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், நமக்கு இறைவாக்கை எடுத்துச் சொல்லும் இறையடியார்கள் மற்றும் இறைவாக்கினர்களின் குரல் கேட்டு நடப்போம்; போலியான வாழ்க்கையல்ல, உண்மையான வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.