நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 16)
பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம்
புதன்கிழமை
லூக்கா 11: 42-46
சுமையைச் சுமத்துபவர்களாக இல்லாமல்,
சுமையைச் சுமப்பவர்களாக இருப்போம்
நிகழ்வு
அன்பான தந்தை, அருமையான தாய் என்று ஜெஸ்ஸியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அவளுக்கு வந்த பக்க வாதத்தால் அவளுடைய வலது காலும் வலது கையும் செயலிழந்து போயின. இதனால் துடித்துப்போன ஜெஸ்ஸியின் பெற்றோர் அவளை இன்னும் அதிகமாகக் கவனித்துக் கொண்டார்கள். இதனால் ஜெஸ்ஸி தனக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருக்கின்றது என்ற குறையே தெரியாமல் வளர்ந்துவந்தாள்.
இப்படியிருக்கையில் கிறிஸ்மஸ் நெருங்கி வந்தது. கிறிஸ்மஸிற்கு வீட்டில் உள்ளவர்கட்குப் புத்தாடை எடுக்கவேண்டும் என்பதற்காக ஜெஸ்ஸியின் தந்தை ஒரு பெரிய துணிக்கடைக்குச் சென்று, சுமக்க முடியாத அளவுக்கு ஜெஸ்ஸிக்கும் அவளுடைய தாய்க்கும் துணிமணிகளை எடுத்து வந்தார். அவர் துணிமணிகளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த நேரம், ஜெஸ்ஸி வீட்டின் கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்தாள். அவளுக்காக வாங்கிவந்த துணிமணிகளை அவளிடம் கொடுத்துவிட்டு, “அம்மா எங்கிருக்கிறாய்?” என்று கேட்டார் ஜெஸ்ஸி அப்பா. “அம்மா வீட்டின் மேல்தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாள்” என்றாள் ஜெஸ்ஸி. “சரிம்மா! நீ இங்கேயே இரு. நான் அம்மாவிடம் சென்று அவளுக்காக வாங்கிவந்த புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றார் ஜெஸ்ஸியின் அப்பா.
“அப்பா! நீங்கள் போகவேண்டாம். நானே அம்மாவிடம் சென்று, அவளுக்காக நீங்கள் வாங்கி வந்திருக்கும் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு வருகின்றேன்” என்றாள் ஜெஸ்ஸி. “நீ எப்படி மேல்தளத்திற்குச் செல்வாய்…? அது முடியாத செயலாயிற்றே…” என்று மறுமொழி கூறிய தன் தந்தையிடம் ஜெஸ்ஸி, “அப்பா! அம்மாவிற்காக நீங்கள் வாங்கிய புத்தாடைகளை நான் ஒரு கையில் சுமந்துகொள்கிறேன். நீங்கள் என்னைச் சுமந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால், அம்மாவிற்காக நீங்கள் வாங்கிய புத்தாடைகளை நான் கொடுத்ததாக இருக்கும்” என்றாள்.
தன் மகள் இப்படிப் பேசியதை எண்ணி ஜெஸ்ஸியின் தந்தை ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனார். பின்னர் அவள் சொன்னது போன்றே அவர் செய்தது ஜெஸ்ஸியின் உள்ளத்தில் மட்டுமல்லாது, அவளுடைய தாயின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பிறக்கச் செய்தது.
ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும்; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, மக்கள்மீது அதிகமான சுமைகளை ஏற்றி வைத்த திருச்சட்ட அறிஞர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் கடுமையாகச் சாடுகின்றார். அவர் அவர்களை எதற்காகச் சாடுகின்றார்? அவர்கள் செய்த தவறு என்ன? இயேசு அவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டு நிற்கின்றார்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள்மீது சுமையைச் சுமத்திய/ஏற்றிவைத்த திருச்சட்ட அறிஞர்கள்
இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு திருச்சட்ட அறிஞர்களைப் பார்த்து, “உங்கட்குக் கேடு! ஏனென்றால் நீங்கள்தாங்க முடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்’ நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்” என்று சாடுகின்றார்.
திருச்சட்ட அறிஞர்கள் மக்கள்மீது சுமக்கமுடியாத சுமைகளை சுமத்துகிறார்கள் என்று இயேசு சொல்கிறாரே, அது என்ன சுமை எனத் தெரிந்துகொள்வது நல்லது. சுமை என்று இயேசு குறிப்பிடுவது ‘சட்டச் சுமை’. ‘மக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்’, ‘இதைக் கடைப்பிடிக்கக் கூடாது’ என்று நூற்றுக்கணக்கான சட்டங்களை திருச்சட்ட அறிஞர்கள் மக்கள்மீது சுமத்தினார்கள். ஏற்கனவே, உரோமையர்களிடமிருந்தும் இன்னும் பலரிடமிருந்தும் வேதனைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வந்த சாதாரண யூத மக்கட்கு இது மிகப்பெரிய சுமையாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், ‘மக்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்; இதையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடாது’ என்று சொல்லிவந்த திருச்சட்ட அறிஞர்களோ அவற்றின்படி நடக்கவில்லை. அதனால்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.
மக்களுடைய சுமையைச் சுமந்த இயேசு
திருச்சட்ட அறிஞர்கள் இப்படி மக்கள்மீது அதிகமான சுமைகளை சுமத்தியபோது, இயேசுவோ, “பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! நீங்கள் என்னிடம் வாருங்கள். நாங்கள் உட்கட்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11: 28) என்கின்றார். இங்குதான் இயேசு மற்ற யூதத் தலைவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு நிற்கின்றார். ஆம், இயேசு மக்கள்மீது சுமைகளை ஏற்றவில்லை; மாறாக இறக்கிவைத்தார்.
ஆகையால், நாம் திருச்சட்ட அறிஞர்களைப் போன்று மக்கள்மீது சுமைகளை ஏற்றி வைக்காமல், இயேசுவைப் போன்று மற்றவருடைய சுமைகளைச் சுமப்பவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்’ (கலா 6:2) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று மற்றவர்களுடைய சுமையைச் சுமக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.