உலக அமைதிக்காக வலைத்தளத்தில் செபமாலை

பாரம்பரிய செபமான, செபமாலை செபிப்பதில் இளையோரை ஈடுபடுத்தும் புதிய வழி ஒன்றை, திருத்தந்தையின் உலகளாவிய செப வலையமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அக்டோபர் மாதம், சிறப்பு தூதுரைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்பட்டுவரும்வேளை, இம்மாதத்தின் மத்தியில், வலைத்தளம் வழியாக, உலக அமைதிக்காக செபமாலை செபிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் உலகளாவிய செப வலையமைப்பு, Click To Pray eRosary என்ற செயலியை, அக்டோபர் 15, இச்செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இலவசமாக கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ள இந்த செயலியில், செபமாலை செபிக்கும் முறை மற்றும் நற்செய்தியை தியானிக்கும் வழிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவி, திருஅவையின் சிறந்த ஆன்மீகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருவியில் கை வளையல் போன்ற அமைப்பில், பத்து செபமாலை மணிகள் மற்றும், ஒரு சிலுவை,  உள்ளன.

திருத்தந்தையின் உலகளாவிய செப வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதுபோன்று, திருஅவையின் தூதுரைப் பணியின் மையம் செபம் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்த சிறப்பு தூதுரைப் பணி மாதத்தில், இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.