அக்டோபர் 15 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்
உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41
அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.
ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவர்க்கும் மீட்பு உண்டு”
சார்லஸ் ஆர். ப்ரௌன் என்றொரு குருவானவர் இருந்தார். அவர் ஆண்டவருடைய வார்த்தையை மிக அருமையாக எடுத்துரைத்து, சிறப்பான முறையில் பணிசெய்து வந்தார். அப்படியிருந்தும் அவர் இருந்த கோயிலுக்கு மக்கள் குறைவாகவே வந்தார்கள். இத்தனைக்கும் அவர் இருந்த பங்கில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. கோயிலுக்குக் மக்கள் குறைவாக வந்தது அவர்க்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஒருநாள் மாலையில் நடைபெற்ற திருப்பலிக்கு மிகவும் சொற்பமானவர்களே வந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவர் மிகுந்த வேதனையுடன், “எவ்வளவுதான் சிறப்பான முறையில் ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்தும் மக்களைக் கட்டியெழுப்பியும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய இல்லத்திற்கு வருவோருடைய எண்ணிக்கை கூடவே இல்லையே!” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்குச் சென்றார்.
அவர் தன்னுடைய அறைக்குள் சென்ற சிறிதுநேரத்திற்குள் அறைக் கதவு தட்டப்பட்டது. அவர் எழுந்து வந்து, கதவைத் திறந்து பார்த்தபோது, புதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த மனிதர் அருள்தந்தை பிரௌனிடம், “தந்தையே! நான் பிற சமயத்தைச் சார்ந்தவன்; அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு வங்கியில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். பிற சமயத்தைச் சார்ந்தவனாக நான் இருந்தாலும், நீங்கள் ஆற்றக்கூடிய மறையுரைத் தொடர்ந்து கேட்டு வருகின்றேன். இன்றைக்கு நீங்கள் ஆற்றிய மறையுரை என்னுடைய உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. அது இத்தனை நாள்களும் நான் செய்துவந்த குற்றத்தை எனக்கு உணர்த்தி, நான் நல்லதொரு கிறிஸ்தவராக வாழவேண்டும் என்ற எண்ணத்தை என்னுடைய உள்ளத்தில் ஊட்டியிருக்கின்றது” என்றார். அந்த மனிதர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அருள்தந்தை ப்ரௌன்.
தொடர்ந்து அந்த மனிதர் பேசினார்: “தந்தையே! நான் அருகாமையில் இருக்கும் வங்கியில் பணியாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னேன் அல்லவா! என்னிடம் ஒப்படைக்கப்படும் பணத்திலிருந்து அவ்வப்பொழுது சிறிது பணத்தை எடுத்துக்கொண்டு, அதைத் தவறாகப் பயன்படுத்தி வந்தேன். இன்றைக்கு நீங்கள் ஆற்றிய மறையுரை நான் அப்படியெல்லாம் செய்யக்கூடாது, எடுத்த பணத்தைக் திரும்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஊட்டியிருக்கின்றது. இப்பொழுது நானாகச் சென்று, வங்கி மேலாளரிடம் என்னுடைய தவறை ஒத்துக்கொண்டால், அவர் என்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவார். நீங்கள்தான் அவரிடம் எனக்காகப் பரிந்துபேசவேண்டும்.”
அவர் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அடுத்தநாள் காலை ப்ரௌன் அந்த மனிதர் பணியாற்றி வந்த வங்கிக்குச் சென்றார். பின்னர் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு வங்கி மேலாளரிடம் சென்று, நடந்தவற்றையெல்லாம் கூறி, “இந்த மனிதர் செய்த குற்றத்தை மன்னித்துக்கொள்ளுங்கள். இவர் வங்கியிலிருந்து தவறுதலாக எடுத்திருக்கும் பணத்தை ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவிடுவார்” என்றார். அருள்தந்தை ப்ரௌன் அவர்க்காகப் பரிந்து பேசியதும் வங்கி மேலாளர் அந்த மனிதர் செய்த குற்றத்தை மனதார மன்னித்தார்.
இதற்குப் பின்பு அந்த மனிதர் அருள்தந்தை பிரௌனிடம், ‘பாவம் செய்துவந்த என்னை உங்களுடைய போதனையின் வழியாக ஆண்டவர் இயேசு தொட்டு, புதுவாழ்வு தந்திருக்கின்றார். இனிமேல் நான் ஆண்டவர் இயேசுவை என் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கைகொண்டு புதுவாழ்வு வாழ்வேன்” என்றார். இதைக்கேட்ட அருள்தந்தை ப்ரௌன், “இத்தனை நாள்களும் நான் அறிவித்து வந்த நற்செய்தி வீண்போகவில்லை” என்று ஆறுதல் அடைந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர் ஆண்டவருடைய நற்செய்தியை அருள்தந்தை ப்ரௌன் வழியாகக் கேட்டு புது வாழ்வையும் மீட்பையும் பெற்றுக்கொண்டார். அதைப் போன்று நாமும் ஆண்டவருடைய நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், மீட்படைவோம் என்பது உறுதி. இன்றைய முதல் வாசகம் ஆண்டவருடைய நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையும் மீட்பும்
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், “நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவர்க்கும் அந்த மீட்பு உண்டு” என்று கூறுகின்றார்.
இங்கு நற்செய்தி என்று சொல்லப்படுவது வேறெதுவும் அல்ல, ஆண்டவர் இயேசுவே. ஆம், ஆண்டவர் இயேசுவின்மீது யாரெல்லாம் நம்பிக்கைகொண்டு அவருடைய விழுமியங்களின்படி வாழ்கின்றார்களோ, அவர்கட்கு மீட்பு நிச்சயம் உண்டு. அதே நேரத்தில் யூதர்களைப் போன்று ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவரை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தால் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வதுபோன்று கடவுளின் சினம்தான் நம்மீது வெளிப்படும்.
ஆகையால், நாம் கடவுளின் சினத்தை அல்ல, அவர் தரும் மீட்பினைப் பெற ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழத் தயாராவோம்.
சிந்தனை.
‘அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர்க்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்’ (யோவா 1: 12) என்பார் யோவான். ஆகையால், நாம் நற்செய்தியாம் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, தந்தைக் கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.