அக்டோபர் 14 : நற்செய்தி வாசகம்
யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
இயேசு தந்த அடையாளம்!
நிகழ்வு
அது ஒரு சனிக்கிழமை மாலைநேரம். ஒரு சிற்றூரில் இருந்த தாத்தாவும் அவருடைய எட்டு வயதுப் பேரனும் வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு குளத்தில் மீன்பிடிக்கச் சென்றார்கள். தாத்தா குளத்தில் தூண்டிலைப் போட்டு மீன்களைப் பிடித்துத் தர, பேரன் அவற்றை வாங்கி, தன்னுடைய கையோடு எடுத்துச்சென்றிருந்த பாத்திரத்தில் போட்டுக்கொண்டே இருந்தான். இடையிடையே அவன் தான் தாத்தாவிடம், “தாத்தா! இந்த மீன்களெல்லாம் இரவில் எங்கே போய்த் தூங்கும்…? அந்திவானம் இவ்வளவு சிவப்பாக ஊர்ப்பது ஏன்…?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.
பொழுது சாயத் தொடங்கியதும், தாத்தா பேரனிடம் “தம்பி! நேரமாகிவிட்டது வீட்டிற்குப் போகலாமா…?” என்றதும், பேரன் அதுவரைக்கும் பிடித்து வைத்திருந்த மீன்களைப் போட்டு வைத்திருந்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு தாத்தாவோடு வீட்டுக்குப் போனான்.
அன்றிரவு வானில் விண்மீன்கள் பூத்துக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு பேரன், “தாத்தா! பகலில் இந்த விண்மீன்கள் எல்லாம் எங்கே போயிருந்தன…?”என்று கேட்டான். தாத்தா அதற்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். பின்னர் அவன் அவரிடம், “தாத்தா! நீங்கள் எப்பொழுதாவது கடவுளைப் பார்த்தாதுண்டா…? என்றான். தாத்தா மிகவும் அமைதியாக, “தம்பி! இப்பொழுதெல்லாம் நான் எங்கும் எதிலும் கடவுளைத்தான் பார்க்கிறேன். தவழ்ந்து வரும் தென்றல் காற்றில், சலசலத்து ஓடும் நீர்ச்சுனையில், உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் மரங்களில், பறந்து விரிந்திருக்கின்ற மலைகளில், உன்னில், என்னில் இப்படி எங்கும் எதிலும் கடவுளைத்தான் காண்கிறேன்” என்றார்.
இந்த நிகழ்வில் வரும் பெரியவர் சொன்னத்தைப் போன்றுதான், எங்கும் எதிலும் கடவுள் இருக்கின்றபோது… நம் கண்முன்னே ஓராயிரம் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கின்றபோது… ‘கடவுள் இல்லவே இல்லை’, ‘இருந்தால் அவரை எங்கட்குக் காட்டுங்கள்’ என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது?
நற்செய்தியில், யூதர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் கேட்கின்றார்கள். இயேசு அதற்கு என்ன பதிலளித்தார்? லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினார் யோனாவின் அடையாளம்
யூதர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டபோது, அவர் அவர்களிடம், “யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது” என்கின்றார். யோனாவின் அடையாளம் என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றியதாகும். யோனா எப்படி மீனின் வயிற்றில் மூன்று நாள் அல்லும் பகலும் இருந்துவிட்டு, வெளியே வந்தாரோ (யோனா 1:17) அதுபோன்று தான் பூமியின் வயிற்றில் இருந்துவிட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்பதை இயேசு அடையாளமாகச் சொல்கின்றார்.
தொடக்கக்காலத் திருஅவையில் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்புதான் அதிகமாக வலியுறுத்திச் சொல்லப்பட்டன. புனித பவுல் இதனை, “தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் (இயேசு) வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது” என்று கூறுவார். புனித பேதுரும் இதே கருத்தினைத்தான் வலியுறுத்திக் கூறுவார் (திப 2:22 f) இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இயேசு தன்னுடைய பாடுகள், இறப்பு, உயர்ப்பு ஆகியவற்றை அடையாளமாகக் கொடுத்தது மிகப்பொருத்தம் என்று சொல்லலாம்.
புறவினத்தார் இறையடியார்களை நம்பியபோது, யூதர்கள் இயேசுவை நம்பாமல் இருத்தல்
இயேசு தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, தீர்ப்பு நாளில் நினிவே நகர மக்களும் தென்னாட்டு அரசியும் உங்கட்கு எதிராக எழுந்து கண்டனம் செய்வார்கள் என்கின்றார். அது ஏன் என்ற காரணத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.
நினிவே நகர மக்கள் யாவே இறைவனைக் குறித்து அறிந்திராதவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் யோனா யாவே இறைவனைப் பற்றிச் சொல்கின்றபோது, அவர்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து மனம்மாறுகின்றார்கள். தென்னாட்டு அரசியும் ஒரு புறவினத்தார்தான். அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தார் (1 அர 10). இயேசுவோ, இறைவாக்கினர் யோனாவை விட, சாலமோன் அரசரைவிடப் பெரியவர். அப்படியிருந்தும் யூத்ர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனதால் (லூக் 13: 34-35; யோவா 12: 35-41) அவர்கட்கு எதிராக நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் எழுந்து கண்டனம் செய்வார்கள் என்கிறார் இயேசு.
யூதர்களைப் போன்று நமக்கும் பல்வேறு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழவில்லை என்றால், அந்த நம்பிக்கையின்மையினாலேயே நாம் நமக்கான அழிவைத் தேடுவோம் என்பது உறுதி.
சிந்தனை
‘இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ (உரோ 10:9) என்பார் பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர் நம்பி, அவர்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.