சவுல் பவுலாக மாறிய நிகழ்வு

இத்தாலியில் குளிர்காலம் ஏற்கனவே துவங்கிவிட்டாலும், புதன் காலையில் வழக்கத்திற்கு மாறாக குளிருடன் இதமான வெப்பமும் நிலவ, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை புனித பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. காலநிலையும் ஒத்துழைத்ததையொட்டி, பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில் இன்று, சவுல் பவுலாக மாறிய நிகழ்வு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில் திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 9லிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

சவுல் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.

அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார் (தி.ப. 9,3-6).

அதன்பின் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதுப் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, தூய பவுலின் மனம்திரும்பல் குறித்து நோக்குவோம். திருஅவையை மிக மூர்க்கமான முறையில் கொடுமைப்படுத்தி வந்த அவர், எவ்வாறு அச்சமற்ற ஒரு நற்செய்தி போதகராக மாறினார் என்பது குறித்து காண்போம்.

புனித பவுலின் வாழ்வில் முக்கிய தருணம் என்பது, ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என உயிர்த்த இயேசு அவரை நோக்கி கேட்ட வேளையாகும். இயேசுவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பானது, சவுல் பவுலாக மாறிய ஒரு புதிய பயணத்தைத் துவக்கி வைப்பதாக இருந்தது. இறைவனின் திருப்பெயரை உலகின் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லும், இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவியாக அவர் மாறினார். புனித பவுல் தன் கண்பார்வையை இழந்து, பின்னர், அதை திரும்பப் பெற்றது, சாவிலிருந்து வாழ்விற்கு கடந்துசென்றதைக் குறிக்கின்றது. இதிலிருந்து அவர் இவ்வுலகை முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குகிறார். திருமுழுக்கின்போது நாமும் பாஸ்கா மறையுண்மையில் மூழ்கி எழுவது என்பது, புனித பவுலைப்போல், ஒரு வாழ்வின் துவக்கத்தையும், கடவுளையும் ஏனையோரையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குவதையும் குறித்து நிற்கிறது. இறையன்பின் தாக்கத்தை நாம் முற்றிலும் அனுபவிக்க உதவ வேண்டும் என வேண்டுவோம். இயேசுவைப்போல் நாமும் மற்றவர்களை வரவேற்கும் வகையில், நம் கல்லான இதயங்கள், தசையால் ஆன இதயங்களாக மாற்றக்கூடிய சக்தி இறையன்பிற்கு மட்டுமே உள்ளது என்பதை உணர்வோம்.

இவ்வாறு, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்

Comments are closed.