நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 10)

கேளுங்கள் கொடுக்கப்படும்
நிகழ்வு

பெண்ணொருவர் இருந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில், பெரிய பொறுப்பில் இருந்தார். ஒருநாள் நண்பகல் வேளையில் அவருடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து அவர் பேசியபோது, மறுமுனையில் அவருடைய வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொண்டு வந்த ஆயா, “அம்மா! குழந்தைக்கு கடுமையாகக் காய்ச்சல் அடிக்கின்றது… என்ன செய்வதன்றே தெரியவில்லை” என்றார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்தப் பெண்மணி, தன்னுடைய நான்கு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகமாகக் கிளம்பி வந்தார்.

வழியில் மருந்தகம் ஒன்று அவருடைய கண்ணில் தென்படவே, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மருந்தகத்திற்குச் சென்று, காய்ச்சலுக்கான மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வண்டிக்குத் திரும்பினார். அவர் தன்னுடைய வண்டிக்கு அருகில் வந்தபோதுதான் அவர்க்குத் தெரிந்தது. அவசரத்தில் வண்டிச்சாவி உள்ளே வைத்துப் பூட்டப்பட்டுவிட்டது என்று. அவர் வண்டியைத் திறப்பதற்கு எவ்வளவோ முயற்சி பார்த்தார், முடியவில்லை.

பின்னர் அவர் வீட்டிலிருந்த ஆயாவை அலைபேசியில் தொடர்புகொண்டு, குழந்தையின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று கேட்டுவிட்டு, வண்டிச்சாவியை வண்டிக்குள்ளே வைத்துப் பூட்டிவிட்டு செய்தியைச் சொன்னார். உடனே ஆயா, “பக்கத்திலிலுள்ள கடைகளில் சட்டைதூக்கி (Coat Hanger) ஒன்றை வாங்கி, அதைவைத்து, கைப்பிடி பக்கத்தில் வைத்து ஓர் அழுத்து அழுத்தினால் கதவு எளிதாகத் திறந்துவிடும்” என்றார். ஆயா சொன்ன இந்த ஆலோசனையின் பேரில் அவர் பக்கத்திலிருந்த ஒரு கடையில் சட்டை தூக்கி ஒன்றை வாங்கி, அதை வண்டிக் கதவில் இருந்த கைப்பிடியில் வைத்து அழுத்தினார். வண்டி திறக்கவில்லை. மீண்டும் மீண்டுமாக அழுத்திப் பார்த்தும் திறக்காமல் போகவே, அவர்க்கு அழுகை அழுகையாக வந்தது.

அந்த நேரத்தில் அவர் இறைவனை நோக்கி, “இறைவா! என்னுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி புரியும்” என்று உருக்கமாக மன்றாடினார். அப்பொழுது ஓர் இளைஞன் அழுக்கு உடையுடன், ஒரு பழைய இரண்டு சக்கர வண்டியை ஓட்டிக்கொண்டு வேகமாக வந்தான். அவன் அப்பெண்மணி பார்ப்பதற்கு மிகவும் பரிதாப இருக்கிறார் என்று, “ஏதாவது உதவிவேண்டுமா?” என்று அவரிடம் கேட்டான். பெண்மணியோ நடந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, “உங்களால் வண்டியைத் திறக்க உதவசெய்ய முடியுமா…?” என்று கேட்டுவிட்டு தன்னுடைய கையில் இருந்த சட்டைதூக்கியைக் கொடுத்தார்.

அந்த இளைஞனோ பெண்மணி கொடுத்த சட்டைதூக்கியை வாங்கி, வண்டிக் கதவில் இருந்த கைப்பிடியில் வைத்து ஓர் அழுத்து அழுத்த, மறுநொடி கதவு திறந்து கொண்டது. பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியில்லை. “இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட எனக்கு உதவிசெய்த நீங்கள் மிகவும் நல்லவர்” என்று சொல்லி அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னார். அதற்கு அவன், “அம்மா! நான் நல்லவன் எல்லாம் கிடையாது. கடந்த வாரம்தான் நான் ஒரு நான்கு சக்கர வண்டியைத் திருடிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்றுவிட்டு, இப்பொழுது சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய இரு சக்கர வண்டியை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

இதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணி, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “இறைவா! என்னுடைய வண்டியின் கதவைத் திறக்க சாதாரண ஒரு மனிதனைத்தான் கேட்டேன்; ஆனால், நீர் வண்டியின் கதவைத் திறப்பதில் கைதேர்ந்த ஒரு மனிதனை அனுப்பி வைத்தாயே, அதற்காக உமக்கு நன்றி” என்றார்.

வேடிக்கையான ஒரு நிகழ்வாக இருந்தாலும் இறைவனிடம் நாம் தொடர்ந்து வேண்டுகின்றபோது, அவர் நம்முடைய வேண்டுதலுக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடவேண்டும் என்ற செய்தியைச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கேளுங்கள் உங்கட்குக் கொடுக்கப்படும்

நற்செய்தியில் இயேசு, இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுகின்றபோது, அந்த மன்றாட்டு கேட்கப்படும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றார். அதை விளக்க ஓர் உவமையையும் சொல்கின்றார்.

இயேசு சொல்லும் உவமையில் ஒரு முக்கியமான செய்தி இருக்கின்றது. அது என்னவெனில், உவமையில் வருகின்ற – தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளோடு படுத்திருக்கின்ற – மனிதர் தன்னைத் தேடிவந்த நண்பர்க்கு அப்பங்களைக் கொடுக்க விருப்பமில்லாவிட்டாலும், நண்பரின் தொல்லையின் பொருட்டு அப்பங்களைக் கொடுக்கின்றார். அப்படியிருக்கும்போது, அன்பே வடிவான இறைவன் தன் பிள்ளைகள் கேட்கின்றபோது அவர்கட்கு கொடுக்காமல் போவாரா…? நிச்சயம் கொடுப்பார் என்பதுதான் இயேசு சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

உவமையின் வழியாக இயேசு சொல்லும் இரண்டாவது செய்தி, இறைவனிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறைவனிடம் கடைசி நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது; மாறாக, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். அப்படி நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், அதற்கான பதில் நிச்சயம் (லூக் 18: 1-8) கிடைக்கும். இன்றைக்குப் பலர் ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், ஒன்றைக் கடைசி நேரத்தில் இறைவனிடம் கேட்டுவிட்டு, அதை இறைவன் கொடுக்கவில்லை என்று புலம்புவதைக் காணமுடிகின்றது. இத்தகையோர்க்கு இயேசு சொல்லும் பதில்தான், நீங்கள் இறைவனிடம் கேளுங்கள்… கேட்டுக்கொண்டே இருங்கள் என்பதாகும்.

ஆகையால், நாம் இறைவனிடம் ஒரு தந்தைக்குரிய வாஞ்சையுடனும் தொடர்ந்தும் மன்றாடுவோம். அதன்மூலம் அவருடைய ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை

‘இறைவனிடம் இடைவிடாது மன்றாடுங்கள்’ (1 தெச 5: 17) என்பார் பவுல். . ஆகையால், நாம் இறைவனிடம் இறைவிடாது மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.