திருஅவை, வறிய இறைமக்களுக்காகச் சேவையாற்றுகின்றது

மூடிய வட்டத்திற்குள் செயலற்றதாக திருஅவை இருந்துவிடக் கூடாது, அது முன்னோக்கிச் செல்லவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணி வழிகாட்டுதலில் இந்த உலக ஆயர்கள் மாமன்றம் இடம் பெறுகிறது என அறிவித்தார், கர்தினால் கிளவ்தியோ ஹுயூம்ஸ்.

வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள, “திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகளைக் கண்டுபிடிக்க” என்ற தலைப்பிலான ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத்தொடர்பாளரான கர்தினால் ஹுயூம்ஸ் அவர்கள் அம்மாமன்றத்தில் ஆற்றிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

அமேசான் பகுதி, காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, அங்குள்ள குடிமக்களுக்கு உறுதுணையாக இருந்து, நல ஆதரவு, கல்வி, ஏழ்மை அகற்றுதல், மற்றும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம் போன்றவைகள் வழியாக தொடர்ந்து திருஅவை உதவி வருவதைச் சுட்டிக்காட்டினார் கர்தினால்.

அமேசான் பகுதியில், சுற்றுச்சூழல் அழிவாலும், சுரண்டல்களாலும், மனித உரிமை மீறல்களாலும் வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்த கர்தினால் ஹுயூம்ஸ் அவர்கள், ஒரு சிலரின் அரசியல் மற்றும், பொருளாதார ஆதாயங்களுக்காக இது நடத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.

அமேசான் பகுதியில் திரு அவை மேற்கொள்ள வேண்டிய புதிய வழிகள், கலாச்சாரமயமாக்குதல், திரு அவையில் கலாச்சாரங்களிடையேயான சந்திப்பு, அமேசான் திரு அவையில் பெண்களின் பங்களிப்பு, ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் வளர்ச்சி, குடிபெயர்ந்து நகர்ப்புறங்களில் வாழும் அமேசான் மக்களிடையே பணி, பூர்வீக இன மக்களிடையே மேய்ப்புப்பணியாற்ற, அவர்களுள் திருமணமானவர்களைத் திருநிலைப்படுத்தல் போன்றவைகள் குறித்தும் இந்த ஆயர்கள் மாமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று இம்மாமன்றத்தின் பொதுத்தொடர்பாளர் கர்தினால் ஹுயூம்ஸ் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்.

Comments are closed.