அக்டோபர் 9 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.
ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“இறைவேண்டல் செய்வோரை எவராலும் வெற்றிகொள்ள முடியாது”
அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் எல்லார்க்கும் எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மட்டுமல்லாமல், தன்னிடம் உதவி என்று வந்தவர்கட்கு முகம் கோணாம் உதவி செய்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைமைச் சாத்தான், தன்னிடம் பணியாற்றி வந்த குட்டிச் சாத்தானை அழைத்து, “பெரியவருடைய மனதை எப்படியாவது குழப்பி, அவரைப் பாவம் செய்ய வை” என்று சொல்லி அனுப்பியது. குட்டிச் சாத்தானும் தலைமைச் சாத்தான் சொன்னதற்கிணங்க கிராமத்தில் இருந்த பெரியவரைப் பாவத்தில் விழ வைப்பதற்குப் புறப்பட்டுச் சென்றது. குட்டிச் சாத்தான் பெரியவர் இருந்த இடத்திற்குச் சென்றபோது பெரியவர் இறைவனின் திருப்பெயரைச் சொல்லிப் புகழ்ந்துகொண்டே இருந்தார். குட்டிச்சாத்தான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. ‘என்றாவது ஒருநாள் இவர் இறைவனின் திருப்பெயரைச் சொல்லித் தொழாமல் இருப்பாரல்லவா… அப்பொழுது இவரைப் பாவத்தில் விழச் செய்துவிடலாம்’ என்று திட்டம் தீட்டியது.
ஒரு வாரம், இரண்டு வாரம் என்று நாள்கள் சென்றுகொண்டிருந்தே ஒழிய குட்டிச் சாத்தானால் பெரியவரைப் பாவத்தில் விழச் செய்ய முடியவில்லை. காரணம் அவர் இறைவனின் திருப்பெயரை இடைவிடாது உச்சரித்துக்கொண்டும் தொழுதுகொண்டும் இருந்தார். இதனால் பொறுமை இழந்த குட்டிச் சாத்தான் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு தலைமைச் சாத்தானிடம் திரும்பிச் சென்றது. தலைமைச் சாத்தான் குட்டிச் சாத்தானிடம், “கொடுக்கப்பட்ட பணி என்னவாயிற்று?” என்று கேட்டபோது, அது அதனிடம் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தது. இதைக் கேட்டுவிட்டு, ‘இறைவனிடம் வேண்டுகின்ற மனிதரை யாராலும் வெற்றிகொள்ள முடியாது. அதனால் அவரை ஒன்றும் செய்யாமல் இருப்பதே நமக்கு நல்லது’ என்று வேறொரு வேலையைப் பார்க்கத் தொடங்கியது;
ஆம், இறைவேண்டல் செய்கின்ற மனிதரை யாராலும் எதனாலும் வெற்றிகொள்ள முடியாது. அதற்கு இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நற்செய்தியில் இயேசு தன் சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கட்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுத்த திருமுழுக்கு யோவான்
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற அவருடைய சீடர்கள், “யோவான், தம் சீடர்க்குக் இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல், எங்கட்குக் கற்றுக்கொடும்” என்கின்றார்கள். இங்கு ஒரு செய்தியை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அது என்னவென்றால், திருமுழுக்கு யோவான் என்றால், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்தவர்; யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்தவர் என்றுதான் நாம் அதிகமாக அறிந்து வைத்திருக்கின்றோம்; ஆனால், யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்தார் என்ற செய்தி சற்றுப் புதுமையாகவும் புதிதாகவும் இருக்கின்றார். யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுக் கொடுத்தார் எனில், அவர் இறைவேண்டலில் எந்தளவுக்கு ஆழம் கண்டிருப்பார் என்பதை யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். அதனால்தான் என்னவோ இயேசு, “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை” (லூக் 7: 28) என்று கூறுகின்றார் போலும்.
தன் சீடர்கட்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுத்த இயேசு
இயேசுவின் சீடர்கள் அவரிடம், இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுக்கொடும் என்று சொன்னதும், அவர் அவர்களிடம், “இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு வேண்டுங்கள்” என்று சொல்லிவிட்டு ஓர் இறைவேண்டலைக் கற்றுத் தருகின்றார்.
இயேசு தம் சீடர்க்கு கற்றுத்தரும் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு முன்னம், அவர் இறைவேண்டலுக்குத் தன்னுடைய வாழ்வில் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பதை அறிந்துகொள்வது நல்லது. இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனிடம் வேண்டினார். கீழ்காணும் திருவிவிலியப் பகுதிகள் அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. (லூக் 3:21; 5:16; 6:12 மாற் 1: 35). இப்படி இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்வராய் இருந்ததால்தான் இயேசு தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத் தருகின்றார்.
இயேசு தன சீடர்க்கு கற்றுத்தரும் இறைவேண்டலில் இரண்டு பகுதியில் இருக்கின்றன. முதல் பகுதி இறைவனைத் துதிப்பதாகவும் இரண்டாவது பகுதி நமது தேவைகட்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. இதில் குறிப்பிட்டுச் சொல்லேண்டும் என்றால், இறைவனிடம் வேண்டுகின்றபோது, அவருடைய திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேறவும் அவருடைய ஆட்சி இம்மண்ணுலகில் மலரவும் வேண்டினால், நம்முடைய மன்றாட்டுக் கேட்கப்படும் என்பதாகும். ஏனெனில், நம் இறைவன் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகளை அறிந்துவைத்திருப்பவராக இருக்கின்றார்.
ஆகையால், இறைவனிடம் வேண்டும்போது அவருடைய திருவுளம் நிறைவேற மன்றாடுவோம். நிச்சயமாக நம்முடைய மன்றாட்டுகள் கேட்கப்படும் என்பது உறுதி.
சிந்தனை.
‘இறைவேண்டல், இவ்வுலகை நகர்த்துகின்றவரின் கைகளை நகர்த்தும் வல்லமை கொண்டது’ என்பார் சோரேன் கீர்க்ககார்ட் என்ற மெய்யியலார். ஆகையால், நாம் இறைவனிடம் மிகவும் உருக்கமாக மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.