அக்டோபர் 8 : நற்செய்தி வாசகம்

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

அவர் மறுமொழியாக, “ `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார்.

இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார்.

அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார்.

இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
தூய ஜெபமாலை அன்னை (அக்டோபர் 07)

நிகழ்வு

1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே லாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறிஸ்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கைகளில் ஜெபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் ஜெபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை அன்னை மரியின் வெற்றியின் விழா என்று கொண்டாடப் பணித்தார்.

வரலாற்றுப் பின்னணி

ஜெபமாலை சொல்லும் வழக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் அல்பிஜீயன்ஸ் என்ற தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு அதிகமாக ஊறுவிளைவித்து வந்தது. இதை எதிர்த்து டொமினிக் எனப்படும் சாமிநாதர் அதிகமாகப் போராடி வந்தார். ஆனாலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே அவர் காட்டிற்குச் சென்று கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தவ முயற்சிகளை மேற்கொண்ட மூன்றாம் நாளில் மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்த ஜெபமாலையை வைத்து நம்பிக்கையோடு ஜெபி, நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். மரியா சொன்னதற்கு ஏற்ப சாமிநாதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் அல்பிஜீனியன்ஸ் என்ற தப்பறைக் கொள்கையை பின்பற்றி வந்த மக்கள் மனம்மாறி இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு ஜெபமாலை சொல்லும் வழக்கம் மக்களிடத்தில் அதிகமாகப் பரவி வந்தது.

ஆலன் ரோச் என்ற புனிதர் ஜெபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தார். ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் படையை செபமாலையின் துணைகொண்டு வெற்றிகொண்டதால் செபமாலையின் மீது மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். 1715 ஆம் ஆண்டு இவ்விழா உரோமைத் திருச்சபையின் விழா அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில் ஜெபமாலை சொல்வது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. ஜெபமாலை சிறியவர்களும் வயதானவர்களும் சொல்லவேண்டியது அது எல்லாருக்கும் உரித்தானது அல்ல என்பது போன்ற விமர்சனங்களும் வந்தன. இந்த நேரத்தில்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 தேதி வரை லூர்து நகரில் மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி கொடுத்ததில் ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் ஜெபமாலை என்பது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் சொல்லவேண்டியது அல்ல, அது எல்லாரும் சொல்லவேண்டியது என்ற வழக்கம் உருவாகியது. 1917 ஆம் ஆண்டு பாத்திமா நகரில் அன்னை மரியா ஜெசிந்தா, லூசியா, பிரான்சிஸ்கா என்ற மூன்று சிறுமிகளுக்குக் காட்சிகொடுத்தபோது தன்னை ஜெபமாலை அன்னை என்றே வெளிப்படுத்தினார். அப்போது அவர் அவர்களிடம் ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார். இவ்வாறு ஜெபமாலை பக்தி திருச்சபையில் படிப்படியாக வளர்ந்தது. 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் இவ்விழாவை திருச்செபமாலையின் அன்னை விழா என அறிவித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.

ஜெபமாலை சொல்வது என்பது, ஏதோ சொன்ன ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்வது கிடையாது. நாம் ஜெபமாலை சொல்கிறது இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, அவருடைய உயிர்ப்பு ஆகியவற்றை மரியாவின் வாழ்வோடு இணைத்து தியானிக்கின்றோம். அது மட்டுமல்லாமல் ஜெபமாலையை நாம் சொல்லி ஜெபிக்கின்றபோது நம்முடைய ஐம்புலன்களும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குகின்றன. அதலால் இதனை ஒரு மிகச் சிறந்த பக்தி முயற்சி என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தூய லூயிஸ் தே மான்போர்ட் என்பவர் செபமாலையைக் குறித்து இவ்வாறு கூறுவார், “ஜெபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலுமாக நீங்கும். இறையருள் நமக்கு மேலும் மேலும் பெருகும்” என்று. திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரோ, “ஜெபமாலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனைச் சொல்லி ஜெபிக்கின்றபோது மீட்பின் வரலாற்றை நினைவுகூறுகின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்த ஜெபத்தினை நினைவுகூறுகின்றோம்; வானதூதர் கபிரியேல் மரியாவிற்குச் சொன்ன மங்கள வார்த்தையை நினைவுகூறுகின்றோம்” என்பார்.

ஆகவே, நாம் அனுதினமும் சொல்லக்கூடிய செபமாலையின் உட்பொருளையும் வல்லமையையும் உணர்ந்தவர்களாய் நம்பிக்கையோடு ஜெபமாலை சொல்லி ஜெபிப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

Comments are closed.