நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 08)

பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
லூக்கா 10: 38-42

நீங்கள் மார்த்தாவா? மரியாவா?

நிகழ்வு

இங்கிலாந்து நாட்டில் பிறந்த மிகப்பெரிய பணக்காரர் ரூட்ஷெல்ட். சில சமயங்களில் இவர் அரசாங்கத்திற்கே நிதியுதவி செய்வார். அந்தளவுக்குப் பெரிய பணக்காரர். இவர் நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியில் கடவுளை மறந்து வாழ்ந்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் பணம்தான் கடவுள்… பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் இவர் தன்னுடைய பணமெல்லாம் இருந்த இரகசிய அறையில் அமர்ந்துகொண்டு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று வேகமாக வீசிய காற்று இவர் இருந்த அறையின் கதவைச் சாத்த, இவர் உள்ளே மாட்டிக்கொண்டார். இவருடைய துரதிஷ்டம், அறையின் சாவி வெளிப்பக்கமாக இருந்ததால், இவர் எவ்வளவு முயன்றும் அறையைத் திறக்க முடியவில்லை.

நாள்கள் பல ஆயின. அன்னம், தண்ணீர் உட்கொள்ளாமல் இவர் உடல் மெலிந்து போனார். இறுதியில் தான் இறக்கப்போகிறோம் என்பத்தை உணர்ந்து, ஒரு காகிதத்தை எடுத்து, அதில் இவ்வாறு எழுதத் தொடங்கினார்: “பணம்தான் எல்லாம்… பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். கடைசியில் இவ்வளவு பணமிருந்தும் உணவும் தண்ணீரும் இல்லாமல் இறக்கப்போகிறேன்.” இதை அவர் எழுதி, அங்கிருந்த மேசை ஒன்றில் வைத்துவிட்டு அப்படியே இறந்துபோனார்.

இதற்கு நடுவில் ‘ரூட்ஷெல்ட் எங்கே?’ என்று பல நாள்களாகத் தேடிய அவருடைய குடும்பத்தினரும் அவருடைய உறவினர்களும் அவர் பாதாள அறையில் செத்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் அதிர்ந்து போனார்கள்.

வாழ்க்கையில் பணமும் இன்ன பொருள்களும் வேலையும்தான் முக்கியம்; கடவுள் எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று வாழக்கூடியவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தை நம்முடைய வாழ்க்கையில் எதற்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்ட மார்த்தா

இயேசு தன் சீடர்களோடு மார்த்தாவின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு மார்த்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் இயேசுவுக்கு நல்லதொரு விருந்து கொடுக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் பரபரப்பாக அலைகின்றார். மட்டுமல்லாமல், தனக்கு உதவி செய்யவில்லை என்று தன் மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கின்றார்.

இங்கு மார்த்தா செய்த தவறு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த இயேசுவை வரவேற்றதோடு சரி. அதன்பிறகு அவர் இயேசுவை மறந்துவிட்டு பற்பல பணிகளில் மிகவும் ஈடுபடத் தொடங்கினார். மார்த்தாவின் செயல்பாடு, இயேசு அல்லது இறைவன் இல்லாமல் வாழமுடியும் என்ற எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஆனால் இறைவார்த்தை சொல்கின்றது, “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது” (யோவா 15:5) என்று.

மார்த்தா செய்த இன்னொரு தவறு, தன் சகோதரியின் மீது குறைபட்டுக் கொண்டது. நம்முடைய மத்தியில் ஒருசிலர் இருக்கின்றார். அவர்கள் ‘தாங்கள்தான் கடின உழைப்பாளி’, தங்களால்தான் எல்லா ஆகின்றன’ என்று பம்மாத்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இது ஒருவகை மனநோய். தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு அடுத்தவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்பாரி வைப்பது அல்லது முறையிடுவது மனநோய் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்! இதனால்தான் இயேசு மார்த்தாவிடம் பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்று கூறுகின்றார்.

தேவையான ஒன்றின்மீது கவனம் செலுத்திய மரியா

மார்த்தாவோ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில், மரியா தேவையான ஒன்றான, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆண்டவரின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பதில் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்.

திருவிவிலியத்தில் மார்த்தாவின் சகோதரி மரியாவைக் குறித்த குறிப்புகள் மூன்று முறை இடம்பெறுகின்றன (லூக் 10: 39, யோவான் 11: 32; 12:3) இந்த மூன்று முறையும் அவர் இயேசுவின் காலடியில் இருப்பதாக இருக்கின்றன. அப்படியானால் மரியா இயேசுவோடு இணைந்திருந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பதில், அதைத் தியானிப்பதில் நிறைவுகண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இங்கு மரியா தன் சகோதரி மார்த்தாவிற்கு உதவி செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது. அவர் மார்த்தாவிற்கு நிச்சயம் உதவி செய்திருக்கவேண்டும். அதன்பிறகுதான் அவர் இயேசுவின் வார்த்தையைக் கேட்பதன் தேவையை உணர்ந்து, அவருடைய காலடியில் வந்து அமர்கின்றார். இவ்வாறு அவர், ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்’ (மத் 4: 4) என்ற உண்மையை உணர்ந்து, நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டவர் ஆகின்றார்.

இந்த இருவரில் நாம் யார்? என்பதை நம்முடைய தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

சிந்தனை

‘நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்’ (யோவா 15: 4) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தையைக் கேட்பதன் மூலமும் அதன்படி நடப்பதன் மூலமும் அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.