இந்தோனேசியா உட்பட11 நாடுகளைச் சேர்ந்த 13 புதிய கர்தினால்கள்

இந்தோனேசியா, இத்தாலி, இஸ்பெயின், போர்த்துக்கல், கியூபா, காங்கோ, லக்சம்பர்க், குவாத்தமாலா, லித்துவேனியா, அங்கோலா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 13 பேராயர்கள் மற்றும், ஆயர்களை, இச்சனிக்கிழமையன்று கர்தினால்களாக உயர்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அக்டோபர் 5, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய திருவழிபாட்டில், 13 புதிய கர்தினால்களுக்குத் தொப்பியும், மோதிரமும், அவர்களுக்குரிய திருஆட்சிப்பீடமும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவரான, 67 வயது நிரம்பிய ஆயர் Miguel Ángel Ayuso Guixot, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிப் பொதுச் செயலர், 73 வயது நிரம்பிய ஆயர் Michael Czerny, இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo Hardjoatmodjo உட்பட 13 பேரை புதிய கர்தினால்களாக திருத்தந்தை உயர்த்தினார்.

புதிய கர்தினால்கள் –

72 வயது நிரம்பிய குவாத்தமாலா நாட்டு கர்தினால் Álvaro Ramazzini Imeri அவர்கள் Huehuetenango நகர் ஆயராவார்.

67 வயது நிரம்பிய, இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, சலேசிய சபையின் கர்தினால் கிறிஸ்டோபல் லோப்பெஸ் ரொமேரோ அவர்கள், ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டு ராபாட் பேராயராவார்.

59 வயது நிரம்பிய காங்கோ குடியரசைச் சேர்ந்த, பிரான்சிஸ்கன் சபையின் கர்தினால் Fridolin Besungu அவர்கள், கின்ஷாசா பேராயராவார்.

69 வயது நிரம்பிய இந்தோனேசியாவைச் சேர்ந்த கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், ஜகார்த்தா பேராயராவார்.

61 வயது நிரம்பிய லக்சம்பர்க்கைச் சேர்ந்த, இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், லக்சம்பர்க் பேராயராவார்.

53 வயது நிரம்பிய போர்த்துக்கல் நாட்டு கர்தினால் José Tolentino Calaça de Mendonça அவர்கள்,  உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் நூலகப் பொறுப்பாளர்.

71 வயது நிரம்பிய கியூபா நாட்டு கர்தினால் Juan de la Caridad García Rodríguez அவர்கள், சான் கிறிஸ்டோபல் தெ ஹவானா பேராயராவார்.

63 வயது நிரம்பிய இத்தாலிய கர்தினால் Matteo Maria Zuppi அவர்கள், பொலோஞ்ஞா பேராயராவார்.

மேலும், இந்த 13 புதிய கர்தினால்களில், 82 வயது நிரம்பிய பேராயர் Michael Louis Fitzgerald, 81 வயது நிரம்பிய கவ்னாசின் முன்னாள் பேராயர் Sigitas Tamkevičius, 80 வயது நிரம்பிய  Benguela மறைமாவட்ட முன்னாள் ஆயர் Eugenio Dal Corso ஆகிய மூவரும், திருஅவைக்கு ஆற்றியுள்ள சிறந்த பணிகளைப் பாராட்டும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவர்களை கர்தினால்களாக உயர்த்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த புதிய கர்தினால் Michael Louis Fitzgerald அவர்கள், திருப்பீட பல்சமய உரையாடல் அழையின் முன்னாள் தலைவர். இயேசு சபையைச் சேர்ந்த லித்துவேனியாவின் புதிய கர்தினால் Sigitas Tamkevičius அவர்கள், முன்னாள் சோவியத் யூனியன் கம்யூனிச ஆட்சியில் தொழில் முகாமிற்கு அனுப்பப்பட்டவர். இறைபராமரிப்பின் ஏழை ஊழியர் சபையைச் சேர்ந்த, இத்தாலியரான புதிய கர்தினால் Eugenio Dal Corso அவர்கள், ஆப்ரிக்காவின் அங்கோலாவில், கடினமான சூழல்களில் இரு மறைமாவட்டங்களை வழிநடத்தியவர்.

Comments are closed.