நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 28)

மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்”

நிகழ்வு

இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்தவர் புனித ஃபெலிசிதஸ் (101-165). கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்படி இவர் சிறையில் அடக்கப்பட்டபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார்.

இவர் கொடிய விலங்குகட்கு முன்பாக வீசப்பட்டுக் கொல்லப்படுவதற்கு மூன்று நாள்கட்கு முன்னம், மிகுந்த வேதனையோடு குழந்தையைப் பிரசவித்தார். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த சிறை அதிகாரி இவரிடம், “இந்த வேதனையையே உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே… உன்னை நாங்கள் இன்னும் மூன்று நாள்கள் கழித்து கொடிய விலங்குகட்கு இரையாகப் போடப்போகிறோமே, அந்த வேதனையை நீ எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாய்?” என்று கேட்டான்.

அதற்குப் ஃபெலிசிடஸ் மிகவும் உறுதியான குரலில், “இப்பொழுது நான் அனுபவித்ததோ பிரசவ வேதனை, இதனை நான் தனியாகத்தான் அனுபவிக்கவேண்டும். ஆனால், நீங்கள் என்னைக் கொடிய விலங்குகட்கு இரையாகப் போடுகின்றபோது, அந்த வேதனையை நான் தனியாக அனுபவிக்கப் போவதில்லை. ஏனெனில், நான் கிறிஸ்துவுக்காக வேதனையை அனுபவிக்கப் போகிறேன். அதனால் அவர் என்னோடு வேதனையை அனுபவிப்பார். அப்பொழுது அந்த வேதனை எனக்கு வேதனையாகவே தெரியாது” என்றார்.

ஆம், கடவுளுக்காக, அவர்மீது கொண்ட நம்பிக்கைக்காக நாம் வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றபோது, அவையெல்லாம் வேதனைகளாகவோ, துன்பமாகவோ தெரியாது. மாறாக, அவை கடவுள் நமக்களிக்கும் ஆசியாகத் தெரியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பாடுகளை ஏற்றுக்கொள்ளப்போவதைக் குறித்துத் தன் சீடர்களிடம் பேசுகின்றார். சீடர்கள் இதனை எப்படி எடுத்துக் கொண்டார்கள். நம்முடைய நம்பிக்கை வாழ்வில் கிறிஸ்துவின் பொருட்டும் அவருடைய விழுமியங்களின் பொருட்டும் வருகின்ற துன்பங்களை எப்படி நாம் எடுத்துக் கொள்வது? என்பவை குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன் சாவை முன்னறிவிக்கும் இயேசு

நற்செய்தியில் இயேசு, “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கின்றார்” என்று தன்னுடைய சாவை முன்னறிவிக்கின்றார். இயேசுவுக்கு முன்னும் சரி, அவர்க்குப் பின்னும் சரி யாராவது தன்னுடைய சாவை அல்லது தான் இப்படித்தான் இறக்கப்போகிறேன் என்று முன்னறிவித்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால், இயேசு தன்னுடைய சாவை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை முன்னறிவிக்கின்றார். சாவை முன்னறிவிப்பதற்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனால், இயேசுவுக்கு அந்தத் துணிச்சல் இருந்தது. அதனால்தான் அவர் தன்னுடைய சாவை முன்னறிவித்தார்.

தான் சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்ட இயேசு

இயேசு தன்னுடைய சாவை முன்னறிவித்தார் எனில், அதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய சிலுவைச் சாவை இயேசு விரும்பி ஏற்றுக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு எத்தனை பேரால் சாவைத் துணிவோடு ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை! ஆனால், இயேசு, இறைவனின் திருவுளம் நிறைவேற, மக்கள் அனைவரும் வாழ்வுபெற (யோவா 10: 10) சாவை, அது தரும் துன்பத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார்.

இயேசு தன் சாவை இப்படித் துணிவோடு ஏற்றுக்கொண்டது, அவருடைய வழியில் நடக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒரு முதன்மையான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சிலுவைச் சாவு வேண்டாம் என்ற சீடர்கள்

இயேசு தன் சாவை, துன்பத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார் எனில், அவருடைய வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் சாவையும் துன்பத்தையும் துணிவோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், இன்று இயேசுவைப் போன்று சாவையும் துன்பத்தையும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. இயேசு தன் சாவை சீடர்களிடம் அறிக்கையிட்டபோது, தலைமைச் சீடரான பேதுரு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத் 16: 22) என்று கூறினார். பேதுருவின் இவ்வார்த்தைகளை ஒட்டுமொத்த சீடர்களின் சீடர்களின் வார்த்தைகளாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், இயேசு சிலுவைச்சாவை அடைய இருந்ததையோ அவர்கள் துன்பங்களை அடைய இருந்ததையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பின்னாளில் அவர்கள் இயேசுவுக்குத் தங்கள் உயிரைத் தந்தது வேறு விசயம்) இருந்தாலும் சாவையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள அவர்கட்கும் இன்று பலர்க்கும் துணிவு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஆகையால், நாம் இயேசுவுக்காகவும் அவருடைய விழுமியங்கட்காகவும் சாவையும் துன்பங்களையும் துணிவோடு ஏற்கத் தயாராகவேண்டும். அப்பொழுது நாம் இயேசுவின் சீடர்களாக முடியும்.

சிந்தனை

‘கடவுளுக்கு இம்மண்ணுலகில் பாவமில்லாத ஒரு மகன் இருந்தான். ஆனால், துன்பத்தைச் சந்திக்காத மகன் என்று யாரும் இருந்ததில்லை’ என்பார் புனித அகுஸ்தினார். ஆம், நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையும் துன்பங்களும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று இறைவனின் திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேற, துன்பங்களைத் துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.