செப்டம்பர் 27 : வெள்ளிக்கிழமை. நற்செய்தி வாசகம்.

நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு
துன்பப்பட வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்.

அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார்.

பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார்.

இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

” நான் யார்? ”

பிறந்ததிலிருந்து காடுகளிலேயே வளர்ந்துவந்த மனிதர் ஒருவர், திடீரென்று ஒருநாள் ஒரு சிறு நகருக்குள் நுழைந்தார். நகருக்குள் நுழைந்த அவர்க்கு எல்லாமே வித்தியாசமாகத் தோன்றின. மனிதர்கள் விதவிதமான ஆடைகள் உடுத்தியிருப்பதையும் அவர்கள் பேசும் மொழி வித்தியாசமாக இருப்பதையும் கண்டு அவர்களை அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த கடைகளில் ஏறி இறங்கினார்; தன்னுடைய பார்வையில் தென்பட்ட பொருள்களை எல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதை மக்கள் அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

இப்படியே நேரம் கடந்துகொண்டிருக்க, அவர்க்கு ஓர் ஐயம் எழுந்தது. ‘பார்ப்பதற்கு எல்லாரும் ஒன்றுபோல் இருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து நான் வித்தியாசமாக இருக்காவிட்டால், என்னை நான் எப்படி அடையாளம் கொள்வது?’ இதுதான் அவருடைய உள்ளத்தில் எழுந்த ஐயமாகும். எனவே அவர், ‘மற்றவர்களிடமிருந்து நான் என்னை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்கு என்ன செய்வது?’ என்று சிந்திக்கத் தொடங்கினார். எனவே, அவர் அவருடைய பார்வையில் தென்பட்ட ஒரு சிவப்பு நிற பாலூனை வாங்கித் தன் காலில் மாட்டிக்கொண்டு ஒரு கடையின் முன்பக்கம் போடப்பட்டிருந்த டேபிளுக்கு அடியில் படுத்துத் தூங்கத் தொடங்கினார்.

அந்த மனிதர் செய்துவந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கவனித்து வந்த அந்த நகரில் இருந்த ஒரு குறும்புக்கார இளைஞன், அந்த மனிதர் தன்னுடைய காலில் கட்டியிருந்த பாலூனைக் கழற்றித் தன்னுடைய காலில் மாட்டிக்கொண்டு, தன்னுடைய வீட்டுக்குக் கிளம்பிப் போனான்.

அடுத்த நாள் காலையில், காட்டிலிருந்து வந்த அந்த மனிதர், தன்னுடைய காலில் கட்டியிருந்த பலூன் இல்லாததைக் கண்டு அதிர்ந்துபோனார். ‘என்னுடைய காலில் பாலூன் இல்லையே! அப்படியென்றால் இது நான் கிடையாதா…? நான் எங்கு போனேன்…? எங்கே நான் ஓடி ஒளிந்தேன்…? என்று அவர் தன்னைத் தேடத் தொடங்கினார்.

கார்லோஸ் வல்லஸ் (Carlos Valles) என்ற எழுத்தாளர் சொல்கின்ற இந்த வேடிக்கையான நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் தாங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதைத் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்ற, “நான் யார்?” என்ற கேள்வி நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசு தான் யாரென்று அறியாதகொள்ள விரும்புகிறாரா?

நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கின்றார்கள்?” “நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்ற இரண்டு கேள்விகளைக் கேட்கின்றார். இவ்விரு கேள்விகளையும் இயேசு தன் சீடர்களிடம் ஏன் கேட்கின்றார்…? அதற்கு அவர்கள் பதிலென்ன…? என்பவை பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு எழுப்புகின்ற இக்கேள்விகளை அவர் தன்னைக் குறித்து அறிந்துகொள்வதற்காகக் கேட்கின்றாரா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு, இன்றைக்கு இருக்கும் ஒருசிலரைப் போன்று தன்னைக் குறித்து அறியாதவர் அல்ல, அவர் தான் யார்? எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன்? என்பதை முற்றிலுமாக அறிந்து வைத்திருந்தார். அப்படியிருந்தும் அவர் ஏன் இக்கேள்விகளைக் கேட்கவேண்டும்? தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்ட விரும்புகின்றாரா?

ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் காட்ட விரும்பி, ‘நான் யார் தெரியுமா?’ என்று கேட்பார்கள். இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்ற கேள்வி அப்படிப்பட்டதா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் இயேசு இக்கேள்விகளை ஏன் தன் சீடர்களிடம் கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதிலை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்

தான் யார் என்பதை சீடர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்பதையறிய விரும்பிய இயேசு

இயேசு இக்கேள்வியைக் கேட்டதன் முதன்மையான நோக்கம் தன்னைக் குறித்து அறிந்து கொள்ளவோ தான் எவ்வளவு பெரியவர் என்பதை வெளிப்படுத்தவோ அல்ல. மாறாக, தன்னோடு இருந்த சீடர்கள் தன்னைக் குறித்து அறிந்திருக்கின்றார்களா என்று தெரிந்துகொள்ளத்தான் இயேசு இப்படியொரு கேள்வியைக் கேட்டார். இயேசு கேட்ட இக்கேள்விக்கு சீமோன் பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்று சொன்னதும், இயேசு அவரிடம், ‘இதை யார்க்கும் சொல்லவேண்டாம்’ என்று சொல்கின்றார்.

இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், அவரும் மற்ற சீடர்களும் ஏனைய யூதர்களைப் போன்று இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாக, அருமடையாளங்கள் நிகழ்த்துபவராகப் புரிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் அவர் பேதுருவிடம் யார்க்கும் சொல்லவேண்டாம் என்று சொல்கின்றார். இதற்குப் பின் இயேசு தன் சீடர்களிடம், தான் அரசியல் மெசியா அல்ல, துன்புறும் ஊழியன் என்பதை எடுத்துக் கூறுகின்றார்.

இயேசுவின் சீடர்கள் அவரைக் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அவரை அடுத்தவர்க்கு நல்லமுறையில் அறிவிக்க முடியும். நாம் இயேசுவைக் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை.

‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ (திபா 34: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். நாம் இயேசுவை முழுமையாய் அறிந்து, அதை மற்றவர்க்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.