உண்மைக்கு, கிறிஸ்தவ சாட்சிகளாகத் திகழுங்கள் -திருத்தந்தை

சமூகத் தொடர்பாளர்கள், நற்செய்தியின் மகிழ்வை அறிவிக்க வேண்டும், அதுவே அவர்கள் ஆற்ற வேண்டுமென கடவுள் விரும்புவது என்று, திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் உறுப்பினர்களிடம் இத்திங்களன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தையொட்டி, செப்டம்பர் 23, இத்திங்கள் காலையில், அந்த அவையின் ஏறத்தாழ 500 உறுப்பினர்களை வத்திக்கானின் ரெஜ்ஜியா அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிகழ்வுக்கென தயாரித்து வைத்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்த நேரத்தில் தன் இதயத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஏற்கனவே தயாரித்திருந்த உரை, மூன்று பக்கங்கள் கொண்டதாய் இருப்பினும், அது ஏழு பக்கங்கள் கொண்டது என முதலில் சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்த திருத்தந்தை, இந்த நீண்ட உரையை ஆற்றினால் உஙகளுக்கு உறக்கம் வரும் என்று கூறினார், திருத்தந்தை. உண்மையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருக்கின்றீர்கள் என்று வியப்புற்று, அந்த உரையை சமூகத்தொடர்பு அவையின் தலைவரிடம் கொடுத்துவிட்டு பேசத்தொடங்கிய திருத்தந்தை, சமூகத் தொடர்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பவை பற்றி விளக்கினார்.

உண்மையான சமூகத் தொடர்பாளர்கள், கடவுள் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகின்ற வழியில், அதாவது, எதையும் தங்களுக்கென வைத்துக்கொள்ளாமல், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் செயல்பட வேண்டும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மை, நீதி, நன்மை

உண்மை, நீதி, நன்மை, மற்றும், அழகானவை அனைத்தையும் அறிவிக்க வேண்டும், இவ்வாறு அறிவிக்கையில், மனதையும், இதயத்தையும், அறிவையும், கரங்களையும் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும், அன்பிலே, அறிவிப்பின் முழுமையை நாம் காண்கிறோம் என்று திருத்தந்தை கூறினார்.

சமூகத் தொடர்பில் மதமாற்றம் கூடாது

மக்களைக் கட்டாயமாக மதமாற்றும் வர்த்தக முறையிலான சமூகத் தொடர்பில் ஈடுபடக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் குறிப்பிட்ட திருத்தந்தை, திருஅவை, மதமாற்றத்தில் அல்ல, மாறாக, சாட்சிய வாழ்வில் வளர்கின்றது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை நினைவுபடுத்தினார்.

சாட்சிபகர்வதால் தகவல் தொடர்பு

உண்மையை அறிவிப்பது என்பது, உங்களின் சொந்த வாழ்வில் சான்று பகர்வதாகும், கிறிஸ்தவராய் இருப்பது என்பது, சாட்சிகளாய், மறைசாட்சிகளாய் இருப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, எல்லாக் காலங்களிலும் நற்செய்தியை அறிவியுங்கள், தேவைப்படும்போது வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறிய, அசிசி நகர் புனித பிரான்சிசின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தார்.

சான்று பகர்தல் எப்போதும் முதலில் வரவேண்டும், நம் திருஅவை மறைசாட்சிகளின் திருஅவை என்றும் கூறியத் திருத்தந்தை, விருப்பமில்லாமல் அல்லது தவிர்க்க இயலாமல் வேலைசெய்யும் சோதனைக்கு எதிராய் எச்சரித்தார்.

மக்களைவிட்டு ஒதுங்கியிருத்தல், கடவுளை அன்புகூர்வதை வெளிப்படுத்தவில்லை, அது, சமய உணர்வற்ற உலகில் நிலவுகிறது, இயேசுவும் தம் சீடர்களிடம், உலகப்போக்கின் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்தார் என்ற திருத்தந்தை, நாம் உலகிற்கு உப்பாக, புளிக்காரமாக இருக்கும்வரை, திருஅவை, சிறிய எண்ணிக்கையிலுள்ளது என்று பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.