நம் பொதுவான இல்லமாக இந்த உலகை உருவாக்குவோம்

நம் பொதுவான இல்லமாக, இந்த உலகை உருவாக்குவோம் என்று, இச்செவ்வாய் இரவில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், பல்வேறு நாடுகளின் 300க்கும் அதிகமான பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்தனர்.

“எல்லைகளின்றி அமைதி – உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்” என்ற தலைப்பில், அசிசி உணர்வில், உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்கள், இச்செவ்வாய் இரவு அக்கூட்டத்தை நிறைவுசெய்து, இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.

அசிசி நகரின் புனித பிரான்சிஸ் அடிகளாரின் உணர்வில் நடத்தப்படும் இந்த பல்சமயத் தலைவர்களின் அடுத்த கூட்டம், 2020ம் ஆண்டில் உரோம் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட தலைவர்கள், வருங்காலத் தலைமுறைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டனர் எனவும், நாம் வாழ்கின்ற ஒரே பூமிக்கோளம், எல்லாருக்கும் ஏற்றதாக இல்லாமல், சிலருக்கு மட்டுமே உரியதுபோல் இருக்கின்றது என கவலையடைந்தனர் எனவும், அக்கூட்டத்தினர் வெளியிட்ட இறுதி அறிக்கை கூறுகின்றது.

இப்பூமிக்கோளம் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு, தனித்துநின்று தீர்வு காண இயலாது, இதற்கு உரையாடலும், ஒத்துழைப்புமே அவசியம் எனவும், கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள், இந்த உலகை நம் பொதுவான இல்லமாகவே நோக்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.