செப்டம்பர் 18 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.

நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

அக்காலத்தில் இயேசு, “இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, `பேய் பிடித்தவன்’ என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளு…
முதல் ஆண்டு – 24ஆம் வாரம்.

முதல் வாசகம்.

உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு; இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

அன்பிற்குரியவரே, நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து.

இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள் கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே. இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும்.

உன்னைப் பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு; அவைகளில் நிலைத்திரு; இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் (திபா 111: 7-8. 9. 10).

பல்லவி(2ய) : ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

7) அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8) என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. – பல்லவி

9) தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. – பல்லவி

10) ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மத் 11: 28).

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார்.

அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார்.

அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார்.

சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.

பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.

பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.

இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை.

‘பாவங்களை மன்னிக்கும் இயேசு’

ஓர் இரவுவேளையில் நண்பர்கள் இருவர் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வானில் விண்மீன்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்பொழுது ஒரு நண்பன் இன்னொருவனிடம், “நண்பா! வானில் பூத்துக்கிடக்கும் விண்மீன்களை எல்லாம் அகற்ற முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றவன், “இன்னும் ஒருசில மணிநேரம் பொறுத்திரு. வானிலுள்ள விண்மீன்கள் எல்லாம் அகன்றுவிடும்” என்றான். “அப்படியா?” என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்தான் முதலாவது நண்பன்.

இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் பல விசயங்களைக் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். காலத்தை மறந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் கிழக்கில் சூரியன் உதிக்கும் நேரம் வந்தது. சூரியன் உதிக்கத் தொடங்கியதும், வானில் பூத்துக்கிடந்த விண்மீன்கள் எல்லாம் மாயமாய் மறைந்தன. இதைப் பார்த்துவிட்டு இரண்டாவது நண்பன் முதலாவது நண்பனைப் பார்த்துச் சொன்னான், “வானில் உள்ள விண்மீன்களை அகற்ற முடியுமா என்று கேட்டாய் அல்லவா! இப்பொழுது வானத்தைப் பார், அங்கிருந்த விண்மீன்கள் எல்லாம் சூரியனால் அகற்றப்பட்டுவிட்டன.”

இப்படிச் சொல்லிவிட்டு, அந்த நண்பர் தொடர்ந்து பேசினார், “எப்படிச் சூரியன் வந்தபோது, வானிலிருந்த விண்மீன்கள் அகன்றுபோனதோ, அதுபோன்று நம்மிடம் வருகின்ற இயேசுவிடம், நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டால், அவை பனிபோல் மறைந்துவிடும்.”

ஆம், கடவுளிடம் நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கின்றபோது, அவர் நம்முடைய குற்றங்களையெல்லாம் மன்னித்து, நம்மை ஏற்றுக்கொள்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு, தன்னுடைய பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு, மன்னிப்புக் கேட்ட ‘பாவிப்பெண்ணை’ மன்னிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு அந்தப் பெண்ணுக்கு அளித்த மன்னிப்பு எத்தகையது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன்னை நேர்மையாளராய்க் காட்டிக்கொண்ட பரிசேயர் சீமோன்.

நற்செய்தியில் இயேசு, பரிசேயரான சீமோனின் அழைப்பினை ஏற்று அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். முதலில் இந்தப் பரிசேயர் இயேசுவை விருந்துக்கு அழைத்தாரே… அவரை இவர் (யூத முறைப்படி) வரவேற்று, விருந்து உபசரித்தாரா…? என்று தெரிந்துகொள்வது நல்லது.

யூதர்கள் தங்களுடைய வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்க்கு கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் தரவேண்டும். ஏனென்றால், அவர்கள் தொலைதூரத்திலிருந்து கால்களில் புழுதியோடு வந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கட்கு கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் தருவதுதான் முறை. அதை இந்தப் பரிசேயர் செய்யவில்லை. அடுத்ததாக, அழைக்கப்பட்ட விருந்தினரை வீட்டார் முத்தம் கொடுத்து வரவேற்க வேண்டும். இதையும் இந்தப் பரிசேயர் இயேசுவுக்குச் செய்யவில்லை. மேலும் அழைக்கப்பட்ட விருந்தினரின் தலையில், விருந்துக்கு அழைத்த வீட்டார் எண்ணெய் பூசவேண்டும். அதையும் இவர் இயேசுவுக்குச் செய்யவில்லை. இப்படி எதையும் இயேசுவுக்குச் செய்யாத பரிசேயர் சீமோன், அவற்றைப் ‘பாவிப் பெண்’ இயேசுவுக்குச் செய்ததும், தன்னை நேர்மையாளர் போல் காட்டிக்கொண்டு இயேசுவைக் குறித்து விசனப்படுகின்றார். இவர் தன்னை ‘நல்லவர்’, நேர்மையாளர் என்பவர் போல் காட்டிக்கொள்கின்றார். அதனால் இவர் இயேசுவால் கண்டிக்கப்படுகின்றார்.

தன்னைப் பாவி என்று ஏற்றுக்கொண்ட பெண்.

இயேசு, பரிசேயரான சீமோனின் வீட்டிற்கு வந்திருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணானவள் இயேசுவிடம் வந்து, பரிசேயர் செய்யத் தவறியதை எல்லாம் இயேசுவுக்குச் செய்கின்றார். அதாவது அவள் இயேசுவின் கால்களில் நறுமணத் தைலம் பூசி, கூந்தலால் துடைத்து, முத்தி செய்கின்றார். இவ்வாறு அவள், இயேசுவுக்கு முன்னால் தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகின்றார்.

யூத சமூகத்தில் ரபிக்கள் பெண்களோடு பேசுவதில்லை. அதுவும் இந்தப் பெண் ‘பாவிப் பெண்’ என்று தெரிந்தும், இயேசு தன்னுடைய கால்களைக் கழுவி, கூந்ததால் துடைத்து, முத்தி செய்ய அனுமதித்ததைத் தொடர்ந்து, ‘ஓர் இறைவாக்கினர் எப்படியெல்லாம் நடந்துகொள்வது முறையா?’ என்று மனதிற்குள் முணுமுணுத்துத் தொடங்குகின்றார்.

இங்கு நாம் ஒன்றை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். பாவிப்பெண் தன்னுடைய தவற்றை வெளிப்படையாக அறிக்கையிட்டார், அதனால் மன்னிப்புப் பெற்றார். ஆனால், பரிசேயரான சீமோனோ ‘தன்னை நேர்மையாளர்’, ‘நல்லவர்’ என்று காட்டிக் கொள்வதால், தானும் ஒரு பாவி என்பதை அறியாதவராக, பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிடாதவராக இருக்கின்றார். இதனால் அவர் இயேசுவுக்கு ஏற்றவராக இல்லாது போகின்றார். சில சமயங்களில் நாமும் இந்தப் பரிசேயரைப் போன்று அடுத்தவரிடம் இருக்கின்ற தவறை பெரிதுபடுத்துகின்ற அளவுக்கு நம்மிடம் இருக்கின்ற தவறைப் பெரிது படுத்துவதில்லை, அதை களைவதற்கும் முன்வருவதில்லை. ஆகையால், நாம் ஒவ்வொருவரும் பாவி என்பதை உணர்ந்து, நம்முடைய தவறுகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டு, அதன்மூலம் மன அமைதி பெற முன்வரவேண்டும்.

சிந்தனை.

‘உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் நான் தீயது செய்தேன்’ (திபா 51: 4) என்று சொல்லும் திருப்பாடல் ஆசிரியரைப் போன்று, நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்முடைய குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.