நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 18)
தீய தலைமுறையினர்
அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பம் ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்குச் சென்றுவிட்டு, தங்களுடைய நான்கு சக்கர வண்டியில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தது.
வருகிற வழியில் அக்குடும்பத்தில் இருந்த தந்தை, “இன்றைக்குப் பங்குத்தந்தை பிரசங்கமா வைத்தார்! நீட்டி முழங்கி வைத்தாரே ஒழிய, ஒரு சுவாரஸ்யம் இல்லை… எனக்குத் தூக்கமே வந்துவிட்டது” என்றார். தந்தையைத் தொடர்ந்து தாய் பேசத் தொடங்கினார். “இன்றைக்கு திருவிருந்துப் பாடல் பாடப்பட்டபோது, பியானோ வாசிக்கக் கூடியவர் ஒரு கட்டையை இறக்கி வாசித்துவிட்டார். அதனால் அப்பாடலைக் கேட்பதற்கும் சகிக்கவில்லை.” இவர் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், இவர் அமெரிக்காவில் இருந்த ஓர் இசைக் கல்லூரியில் இசை ஆசிரியையாக இருந்தார். அதனால்தான் இவர் இப்படிக் குறைபட்டுக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து குடும்பத்தில் இருந்த மூதாட்டி, “எனக்கு நீங்கள் சொன்னது போல் பங்குத்தந்தையின் பிரசங்கமும் கேட்கவில்லை; பாடற்குழுவினர் பாடிய பாடலும் கேட்கவில்லை. ஏனெனில் நான் அமர்ந்திருந்த இடத்தில் ஒலியமைப்பு (Sound System) சரியாகவே இல்லை… எவ்வளவு பெரிய கோயில் இது…இதில் இந்தச் சின்ன விஷயத்தைக்கூட கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். என்ன கோயில் நிர்வாகமோ…?” என்று மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
இப்படி வண்டியில் இருந்த எல்லாரும் பேசிமுடித்த பின்பு, தந்தைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுட்டிப்பெண், “அப்பா நான் திருப்பலியைச் சரியாகக் காணமுடியாத வண்ணம் எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பாட்டி என்னை மறைத்துக் கொண்டார்… ஆனாலும் நாம் காணிக்கையாகச் செலுத்திய ஒரு டாலருக்கு இது எவ்வளவோ பரவாயில்லை” என்றாள். இது கேட்டு எல்லாரும் அப்படியே அதிர்ந்து போனார்கள்.
தங்களிடம் ஏராளமான தவறுகளைகளையும் குற்றங்குறைகளையும் வைத்துக்கொண்டு மற்றவரைத் தவறாகப் பேசும் போக்கு இன்றைக்கு பெரும்பாலானவர்களிடம் மலிந்துவிட்டு என்பதை இந்நிகழ்வு பகடி செய்வதாய் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில், யாரிடமும் நிறைவடையாத அல்லது திருப்தியடையாத பரிசேயக் கூட்டத்தை ஆண்டவர் இயேசு கடுமையாகச் சாடுகின்றார். இயேசு எதற்கு அவர்களை அவ்வாறு சாடவேண்டும்? அவர்கள் செய்த குற்றமென்ன? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருமுழுக்கு யோவான்மீது குற்றம் கண்டுபிடித்தவர்கள்
நற்செய்தியில் இயேசு பரிசேயர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று சாடுகின்றார். அதற்குக் காரணம், திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவராய், ஆண்டவர்காக மக்களைத் தயார் செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல், அவர் மிக எளிய உணவை உண்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படி இருந்தபோதும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரைப் ‘பேய் பிடித்தவன்’ என்று விமர்சனம் செய்தார்கள்.
திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர் கிடையாது; அவர் மனிதராகப் பிறந்தவர்களுள் பெரியவர். அவரையே பரிசேயக் கூட்டம் விமர்சனம் செய்ததால்தான், இயேசு அவர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று சாடுகின்றார்.
இயேசுவிடம் குற்றம் கண்டுபித்த பரிசேயக் கூட்டம்
இயேசு திருமுழுக்கு யோவானைப் போன்று இருக்கவில்லை; அவர் மக்களோடு மக்களாக இருந்தார்; உண்டார்; குடித்தார். அவர்களோ அவரைப் ‘பெருந்தினிக்காரர்’ என்று குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். இவ்வாறு எப்படி வாழ்ந்தாலும் அதில் குற்றம் காண்பவர்களாகப் பரிசேயர்கள் இருந்ததனாலேயே இயேசு அவர்களைச் சாடுகின்றார்.
அடிப்படையில் பரிசேயர்கள் எதிலும் நிறைவடையாதவர்களாக, உண்மையைத் திறந்த மனதோடு ஏற்கும் பக்குவமில்லாதவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் எல்லாரிடமும் குறை கண்டு பிடித்தார்கள். இயேசுவின் பணிவாழ்வில் இந்தப் பரிசேயக்கூட்டம் இயேசு சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ளாமல், அதைப் புரிந்துகொள்வதற்கும் முயற்சி செய்யாமல், குறைகண்டு பிடிப்பது ஒன்றும் தங்களுடைய குலத்தொழில் என்பது குறையை மட்டும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களது செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று சாடுகின்றார்.
இந்த இடத்தில் நம்முடைய வாழ்வையும் நாம் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது. நாம் உண்மையைத் திறந்த மனதோடு ஏற்பவர்களாக இருக்கிறோமா? அல்லது பரிசேயர்களைப் போன்று மூடிய மனத்தவராக, அடுத்தவரிடம் குற்றம் காண்பவராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘தன்னிடம் உள்ள குறையைப் பார்க்காமல் அடுத்தவரிடம் இருக்கின்ற குறையைப் பார்ப்பது என்பது முட்டாளுக்கே உரிய குணம்’ என்பார் சிசரோ என்ற அறிஞர். ஆகையால் நாம் பிறரிடம் குறைகளைப் பார்க்காமல், நிறைகளைப் பார்த்து பாராட்டக் கற்றுக் கொள்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.