வியாகுல அன்னை – செப்டம்பர் 15

திருத்தந்தை 7ம் பத்திநாதர் (14 August 1742 – 20 August 1823) திருத்தந்தையாக இருந்த காலத்தில் நாடு கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட நாட்களில் அன்னை மரியாவின் பரிந்துரையால் விடுதலை அடைந்ததற்கு நன்றியாக வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடப் பணித்தாரென கத்தோலிக்க திரு அவையின் பாரம்பரிய வரலாறு தெரிவிக்கிறது.

கத்தோலிக்கரான எம்மை அன்னை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்துகிறார்களென அடிப்படை பிரிவினைவாதக் குழுவினர் சுட்டிக் காட்டினாலும் – இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக்கா1:37) என்றுரைத்த வியாகுல அன்னையின் மகிமையை நற்செய்தியின் வெளிச்சத்தில் நாம் ஆராயலாம்.

ஏதேனில் ஏவாள் என்ற பெண்ணால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க (தொட.நூல்3:15) நசரேத்தூர் மரியாள் “அருள் மிகப்பெற்றவராக” (லூக்கா1:28) புதிய ஏவாளாக உன்னத கடவுளின் அருளைக் கண்டடைந்தவராக (லூக்கா1:30) எல்லாம் வல்ல இறைவனாலே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எவராலும் மறுக்க முடியாத அல்லது விவாதத்திற்கு அப்பாற்ப்பட்ட இறையியல் உண்மை என்பதனை நற்செய்தி ஆய்வாளர்களும், இறையியல் வல்லுனர் களும் தெரிவிக்கின்றனர்.

இறை தூதர் கபிரியேல் நசரேத்தூரில் “ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” (லூக்கா1:28) என கணவ னையே அறியாத கன்னிப்பெண் மரியாவை வாழ்த்தியபோதே இவ்வாழ்த்து எத்தகைய தோவென மட்டுமல்ல – கல்லாலெறிந்து கொல்வார்களேயென வியாகுல அன்னையாக மரி அன்னை கலங்கினாளென (லூக்கா1:29) நற்செய்தியை நாம் வேறுவிதமாகப் பொருள் கொள்ள இடமுண்டு.

மனித அறிவு தெளிவுபடுத்த முடியாத விசுவாசப் பெட்டகமாகி – உன்னத கடவுளின் வல்லமையை தனதாக்கி – “இதோ உமது அடிமை” (லூக்கா1:38) எனத்தாழ்த்தி தனக்கு ஏற்படவிருக்கும் வியாகு லத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டவரென அன்னை மரியாவை இறையியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நமதாண்டவர் இயேசு வியாகுலங்களை அனுபவித்து பரலோக தகப்பனது சித்தத்தை நிறைவேற்றி (லூக்கா24:46) பாவங்களிலிருந்து எம்மை மீட்டெடுக்க – அன்னை மரியாவும் தமது திருமகனை கல்வாரி வரை பின்தொடர்ந்து வேதனைகள் அனுபவித்ததால் வியாகுல அன்னையாக (யோவான்19:27) எமக்குத் தரப் பட்டுள்ளாள் என்பது எனது பணிவான கருத்து.

“இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவரென அழைப்பர் ” (லூக்கா1:48) என அறிவுக்கு அப்பாற்பட்ட இறை விசுவாசத்தற்கு புதிய விளக்கம் தருகிறாள். வியாகுலங்கள் தம்மைப் பின்தொடருமோவென (லூக்கா1:34) அன்னை கலங்கினாலும் – அனைத்து வியாகுலங் களையும் நல்மனதோடேற்று இறைவனின் அடிமையெனக் கீழ்ப்படிந்து (லூக்கா1:38) எல்லாம் வல்ல இறை பராமரிப்பில் வாழமுடியும் என்பதனை நிரூபித்திருக்கிறார்.

தமது திருமகனது வியாகுலத்தின் அதி உன்னத வேளையில் கல்வாரியில் ”இவரே உம் தாய்” (யோவான்19:26) எனப்பட்டதனால், நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை வைக்க அழைக்கிற விண்ணக மண்ணக உறவுப் பாலமாக மட்டுமல்ல – இவ்வுலகத் திரு அவையின் தாயாகவும் இறைமகன் இயேசுவால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளாள்.

பரலோக தகப்பனது சித்தத்தை தனது துன்பங் களால் நிறைவேற்றி நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கி – தனது வியாகுலங்கள் வழியாக இறைவனது திருவுளத்தை எமக்குத் கற்றுத்தந்து – இறைவனுக்குப் பணிந்து வாழப்போதிக்கின்ற இறைமகன் இயேசுவின் முதலாவது சீடத்தியாக வியாகுல அன்னை இருக்கின்றார் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

நமது ஆண்டவர் இயேசுவின் வியாகுலம் நிறைந்த பாடுகளின் வேளையிலும் அன்னை பயந்து ஒதுங்க வில்லை – கல்வாரி வரைக்கும் உடன்சென்று தமது திருமகனின் வியாகுலம் நிறைந்த வேதனையின் வாள் (லூக்கா2:35) தனது உள்ளத்தை மானசீகமாக ஊடுருவ அனுமதித்தவள்.

நசரேத்தூர் முதல் கல்வாரி மட்டுமல்ல மேலறையில் பெந்தகோஸ்தே வரை வியாகுல அன்னை மரியா அனுபவித்த பாடுகளையும் – வேதனைகளையும் தியானிக்கும் நாம், எமது தாயகத்தில் குறிப்பாக தமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து கடந்த 10 வருடங்களாக மீண்டும் காணாது துன்பம் அனுபவிக்கும் எமது அன்னையர் ஒவ்வொரு வரையும் வியாகுலத் தாயிடம் ஒப்படைப்போம்.

பல்வேறு வியாகுலங்களை அனுபவித்து பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தது மட்டுமல்ல வருடக்கணக் காக வளர்த்து ஆளாக்கியதனை கருத்தெடுக்காது உதாசீனம் செய்கின்ற ஊதாரிப் பிள்ளைகளது மனமாற்றத்திற்காகவும் வியாகுல அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டுதல் செய்வோம்.

எமது துன்ப துயரங்களில் நமது அருகிருந்து குழந்தைகளாகிய எமது வேதனையைத் தமதாக்கி – தாய்மைக்குப் பெருமை சேர்க்கும் வியாகுல அன்னையை நமதாக்குவோம் – அன்னையின் ஆயுதமான செபமாலையைக் கரத்திலெடுப்போம் – “அருள்நிறை மரியே” என அனுதினமும் செபிப்போம்.

எமது வீடுகள் செபிக்கின்ற வீடுகளாக மாறட்டும். எமது இளைய தலைமுறை செபமாலையை ஏந்தி அனுதினமும் செபிக்கின்ற சமுதாயமாக மாற்றமடையட்டும்.

”இது எப்படி நிகழும்?” (லூக்கா1:34) என்று கேட்டபோது வானதூதர் அளித்த பதில் ”கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக்கா1:37) என்பதாகும் – மணித குலத்தின் வணக்கத்திற்கு உகந்தவரான வியாகுல அன்னை மரியா அன்றும் – என்றும் – என்றும் அருள் நிறைந்தவரென வாழ்த்தப்படத் தகுதி பெற்றவர் – எனினும், வியாகுல அன்னையின் கண்ணீருக்கு எமது தனிப்பட்ட பதில் என்ன? சிந்திப்போம் – செயற்படுவோம்.

Comments are closed.