செப்டம்பர் 14 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை.

“திருச்சிலுவை மகிமை விழா”

மிகச்சிறந்த மறைபோதரும் பேராயருமான புல்டன் ஷீன் ஒருமுறை குறிப்பிட்ட வார்த்தைகள்: “நான் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றேன். அவையெல்லாம் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் நான் எழுதிய இயேசுவின் வாழ்க்கை வரலாறு (Life of Christ) என்ற புத்தகம் சிலுவையின்மீது அறையப்பட்ட இயேசுவின் பேரன்பை, அவர் இந்த மனுக்குலத்தின்மீது கொண்டிருந்த இரக்கத்தை உணர்ந்துகொள்வதாகவே எழுதப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த கிறிஸ்துவின் பேரன்பை விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை”.

வரலாற்றுப் பின்னணி.

312 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், உரோமையை ஆண்டுவந்த கொன்ஸ்டன்டின் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர்தொடுக்கச் சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர்தொடுக்கச் செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்திச் சென்றான். இதனால் அவன் அந்தப் போரில் வெற்றிபெற்றான். அதன் நிமித்தமாக கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான்.

இது நடந்து 13 ஆம் ஆண்டுகள் கழித்து, கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்க்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு கைசூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்தது. இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்தார். அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்பிறகு 614 ஆம் ஆண்டு, பெர்சிய மன்னன் சொஸ்ரோஸ் (Chosroas) என்பவன் உரோமை நகரின் மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை தூக்கிச் சென்றான். இதனைக் கேள்விப்பட்ட ஹெரக்லியுஸ் என்று மன்னன் 628 ஆம் ஆண்டு, பெர்சியா நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வந்தான். திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வரும்போது அதனை ஆடம்பரமாக அலங்கரித்து, தூக்கிப்பார்த்தான். அவனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. அப்போது அங்கிருந்த ஆயர், “இயேசு சுமந்து வந்த சிலுவை எளிமையின் அடையாளம், அதனை நீ ஆடம்பரமாக தூக்கிப் பார்த்தால் எப்படி நகரும்” என்று சொன்னார். இதைக் கேட்ட அரசன், தாழ்ச்சியோடு திருச்சிலுவையை தூக்கினான். இப்போது திருச்சிலுவை எளிதாக நகர்ந்தது. பின்னர் அவன் திருச்சிலுவையை உரோமை நகரில் உள்ள ஆலயத்தில் போய் நிறுவினான்.

இப்படியாக திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் திருச்சபை முழுவதும் படிப்படியாக வளர்ந்தது. 1970 ஆம் ஆண்டு வரை இவ்விழா திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் என்றே கொண்டாடப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விழா திருச்சிலுவையின் மகிமை விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அவமானத்திற்கு உரிய சிலுவைமரணம் அல்லது சிலுவைச்சாவு என்பது நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் துரோகிகளுக்கும் தான் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனைமுறை தொடக்கத்தில் பொனிசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகுதான் உரோமையர்கள் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட தண்டனைமுறையை எடுத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள். இயேசு ஒரு பாவமும் அறியாதவர்; ஒரு குற்றமும் செய்யாதவர். அப்படிப்பட்டவருக்கு சிலுவைச் சாவு தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர், அவமானமாகக் கருத்தப்பட்ட சிலுவையை, தன்னுடைய மரணத்தினால் வெற்றியின் சின்னமாக மாற்றுகின்றார். ஆகவே, சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது. மாறாக, அது வெற்றியின் சின்னம் என்பதை இயேசு தன்னுடைய மரணத்தினால் நிரூபிக்கின்றார்.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக சிலுவை அடையாளம் போட்டு, தொடங்குகின்ற நாம், அதற்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது, அதற்கு நாம் எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்பதை சிந்தித்து பார்ப்போம்.

திருச்சிலுவை கற்றுத்தரும் பாடம்.

திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

திருச்சிலுவை: இயேசு இந்த மனுக்குலத்தின்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ 5: 7-8). ஆம், நாம் பாவிகளாக இருந்தும் கிறிஸ்து நமக்காக உயிர்கொடுக்கிறார் என்றால், அது உண்மையிலே கடவுள்/ இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பை வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றது.

ஆகையால் ஒவ்வொருமுறையும் நாம் சிலுவையை உற்றுப் பார்க்கின்றபோது கடவுள் / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பினை ஆழமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.

திருச்சிலுவை: நன்மைகளின் ஊற்று.

திருத்தந்தை பெரிய சிங்கராயர், “திருச்சிலுவை நன்மைகளின் ஊற்று” என்று குறிப்பிடுகின்றார். அது முற்றிலும் உண்மை. எப்படியென்றால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கான எல்லா நலன்களையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம்.

ஒருசமயம் புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த குருவானவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் நடுத்தீர்ப்புக்காக கடவுளின் அரியணை முன்பாக நிறுத்தப்பட்டார். ஒருபக்கம் சாத்தான் நின்றுகொண்டு அவர் மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது செய்த தவறுகளாக ஒவ்வொன்றாக பட்டியலிட்டது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானார், “எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய். ஆனால் இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் விட்டுவிட்டாய்” என்றார். “அது என்ன?” என்று கேட்டது சாத்தான். அதற்கு குருவானார், “இயேசு சிலுவையில் சிந்திய தன்னுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தினால் என்னுடைய பாவம் முழுவதையும் முற்றிலுமாக கழுவிப்போக்கி விட்டார்” என்றார். இதைக் கேட்ட சாத்தான் எதுவும் பேசாது அமைதியானது. ஆம், இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் மாசற்றவர்களாக இருக்கின்றோம்.

ஆகையால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நன்மைகளை அதிகதிகமாக பெற்றுக்கொள்கின்றோம் எனப் புரிந்த்கொள்ளவேண்டும்.

திருச்சிலுவை: அவமானத்தின் சின்னமல்ல, வெற்றியின் சின்னம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், “யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கின்றது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கின்றார்” ( 1 கொரி1: 22-24). சிலுவை நமக்கு மீட்பின் சின்னமாக, வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது என்பதையே பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் படித்து அறிகின்றோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவையை எத்தகைய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிலுவையை துன்பமாகப் பார்க்கின்றோமா? அல்லது துன்பங்களையும் தாங்கிக்கொண்டு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசுவின் சிலுவையை வெற்றியின் சின்னமாகப் பார்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

“திருச்சிலுவை மரமிதோ, இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்” என்று புனித வெள்ளியன்று குருவானவர் திருச்சிலுவையை கையில் ஏந்தி பாடுவதைக் கேட்டிருப்போம். சிலுவையினாலே நமக்கு மீட்பு வந்தது, சிலுவையினாலேயே நமக்கு சிம்மாசனம் வந்தது என்பது அவ்வார்த்தைகள் கற்றுத்தரும் பாடம்.

ஆகவே, திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடும் இன்று, நாம் திருச்சிலுவைக்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு ஏற்றுக்கொள்வோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.