நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 12)
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம்
புதன்கிழமை
லூக்கா 6: 20-26
மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை இகழும்போது…
நிகழ்வு
ஊர் ஊராகச் சென்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்த இறையடியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஓர் ஊரில் போதித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய போதனையைக் கேட்டு ஒருசிலர் கொதித்தெழுந்து, அவர்மீது காரி உமிழ்ந்தார்கள்; தங்களுடைய கைகளில் கிடைத்த கற்கள், மரக்கட்டைகளைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கினார்கள்; அவருடைய ஆடையை உரிந்துகொண்டு அவரை அரைநிர்வாணமாக்கினார்கள். இவற்றுக்கு நடுவில் அந்த இறையடியார் சிரித்துக்கொண்டே இருந்தார்.
இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “இவர்கள் உங்களை இவ்வளவு தாக்குகின்றார்கள். இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் வணங்கக்கூடிய உங்கள் கடவுள் ஏன் ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டி, உங்களை மீட்கவரவில்லை?” என்று கேட்டார். அதற்கு அந்த இறையடியார், “இப்பொழுதுகூட அவர் அதிசயத்தை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றார். ஆம், இந்த இக்கட்டான வேளையிலும் நான் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேனே… அதுவே ஓர் அதிசயம்தான்” என்றார்.
“உங்களுடைய நிலைமையைப் பார்த்தால் பாதாளத்தில் – நரகத்தில் இருப்பதைப் போன்று இருக்கின்றது. அப்படியிருக்கையில் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றீர்கள் என்று சொல்கிறீர்களே… ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அந்தப் பெரியவர் கேட்க, பதிலுக்கு இறையடியார், “நான் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கிறேன் என்று சொன்னேனே, அது வெளிப்புறத்தில் அல்ல, என்னுடைய உட்புறத்தில்… என்னுடைய உள்ளத்தில்” என்றார்.
பெரியவர் தொடர்ந்து அவரிடம், “உங்களுடைய உள்ளத்தில், விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேன் என்று சொல்கிறீர்களே, அதற்குக் காரணமென்ன?’ என்று கேட்டார் பெரியவர். “நான் என்னுடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரின் திருவுளத்தின்படியே நடக்கின்றேன். அதனால் நான் என்னுடைய வாழ்க்கையில் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும், வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் விண்ணகத்தில் இருப்பதைப் போன்றுதான் உணர்கின்றேன். என் ஆண்டவரும் என்னை எந்தச் சூழ்நிலையும் கைவிட்டு விடாமல் என்னை அன்பு செய்துவருகின்றார்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற இறையடியார், இயேசுவின் பொருட்டுத் துன்பத்தை அனுபவித்தபோதும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசு யாரெல்லாம் பேறுபெற்றோர் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். இதில் இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுவோர் எந்தவிதத்தில் பேறுபெற்றோராக இருக்கின்றார்கள் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பொருட்டு இகழப்படுத்தல்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு யாரெல்லாம் பேறுபெற்றோர் என்பது பற்றிப் பேசுகின்றார். இந்தப் பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெறக்கூடிய ஒரு வகையினர்தான் இயேசுவின் பொருட்டு இழந்து, வெறுத்து, ஒதுக்கப்பட்டுத் துன்பங்களைச் சந்திக்கக்கூடியவர்கள். இந்த உலகத்தின் பார்வைக்கு இயேசுவின் பொருட்டு இழந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் இழிவாகக் கருதப்பட்டாலும், இயேசுவின் பார்வையில் அவர்கள் பேறுபெற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.
இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் இந்த உலகப் போக்கின்படி வாழாமல், ஆண்டவர்க்கு உகந்த வாழ்கின்றார்கள் என்பதால்தான். யோவான் நற்செய்தியில் இயேசு மிக அழகாகக் கூறுவார், “நான் உலகைச் சார்ந்தவர்வனாய் இல்லாதுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கின்றது (யோவா 17: 12). உண்மைதான். இந்த உலகத்தால் இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் உலகப்போக்கின்படி வாழாமல், இயேசுவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்கின்றார்கள். அதனால்தான் அவர்கட்கு அவ்வாறெல்லாம் நடக்கின்றது. ஆனால், மனிதர்களால் அவர்கள் இகழ்ந்து ஒதுக்கப்பட்டாலும், இயேசுவால் பேறுபெற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அதுதான் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது.
இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கட்கு விண்ணுலகில் கைம்மாறு மிகுதியாகும்
தன் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் குறித்து இயேசு சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான அம்சம், அவர்கள் விண்ணகத்தில் பெறுகின்ற மிகுதியான கைமாறாகும் என்பதாகும். இவ்வார்த்தைகள் லூக்கா நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும் மத்தேயு நற்செய்தியில் (மத் 5: 11, 12) மிகத் தெளிவாக இடம்பெறுகின்றது. ஆகையால், இயேசுவின் வழியில் நடந்து, அவர் பொருட்டு வெறுப்பையும் இகழ்ச்சியையும் ஏற்கக்கூடியவர்கள் கலங்கத் தேவையில்லை. ஏனெனில் விண்ணுலகில் இறைவன் அவர்கட்குத் தருகின்ற கைம்மாறு மிகுதியாகவும்.
சிந்தனை
‘உலகம் உங்களை வெறுக்கிறது என்றால், நீங்கள் வியப்படைய வேண்டாம்’ (1 யோவா 3: 13) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் எத்தகைய இடர்வரினும் ஆண்டவர்க்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.