அந்நியர்மீது காட்டப்படும் வெறுப்பு, ஒரு மனித நோய்

செவ்வாயன்று, Antananarivo விலிருந்து உரோம் நகருக்கு மேற்கொண்ட  விமானப் பயணத்தில், வயதானவர்கள் அதிகரித்துவருவது, போர்கள், அந்நியர்மீது வெறுப்பு போன்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்கள், எல்லாவற்றையுமே நாம் இழக்கச் செய்யும் எனவும், ஐரோப்பாவில் நல்வாழ்வு என்பது, அதன் வயதானவர்களைச் சார்ந்து உள்ளது எனவும், அந்நியர்மீது காட்டப்படும் வெறுப்பு, ஆப்ரிக்காவில் மட்டும் இருக்கின்ற பிரச்சனை அல்ல, அது தட்டம்மை போன்ற ஒரு மனித நோய் எனவும், மக்களின் தனித்துவம், காலனிய கருத்தியல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மனித நோய், ஒரு நாட்டில், ஒரு கண்டத்தில் நுழைந்தால், அப்போது நாம் சுவர்களை எழுப்புகிறோம், இந்தச் சுவர்கள், அவற்றைக் கட்டுபவர்களையே தனிமைப்படுத்தும் என்றுரைத்த திருத்தந்தை, பல்சமய உரையாடல் குறித்த கேள்விக்கும் பதில் சொன்னார்.

பல்சமய உரையாடலில், மதங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை, ஏனெனில் நாம் எல்லாரும், சகோதரர், சகோதரிகள், ஒவ்வொருவரும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார், திருத்தந்தை.

உண்மையான உலகத் தாராளமயமாக்கல், பன்முகத்தன்மையுடையது, அதில் ஒவ்வொருவரும் தனது சொந்த தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும், அதேநேரம், அது, அனைத்து மனித சமுதாயத்தையும் ஒன்றிணைக்கின்றது, ஆனால், காலனிய கருத்தியல், மற்றவரின் தனித்துவத்தை அழிக்கும் வழிகளைத் தேடுகின்றது, என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இயற்கைப் பாதுகாப்புப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் நெகிழிப்பொருள்களைத் தடைசெய்துள்ளோம், சூழலியல், பல்லுயிர்கள் மற்றும், நம் வாழ்வை, பாதுகாக்கவேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Comments are closed.