இளையோர் மறைப்பணியில் அக்கறை தேவை

அமைதியின் அரசி அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பீடத்தின் முன்பாக நிற்கும்பொழுது, இந்த போர்ட்-லூயிஸ் நகரையும், அதைக் கடந்து இருக்கின்ற கடலையும் பார்க்க முடிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயேசு போதித்த பேறுபெற்றவர்கள் பற்றி கேட்பதற்கு, மொரீஷியஸ், மற்றும், இந்தியப் பெருங்கடல் பகுதியின் மற்ற தீவுகளிலிருந்து, திரளாக வந்திருக்கிறீர்கள். இயேசு போதித்த பேறுபெற்றவர்கள் பற்றியது, குளிரான இதயங்களை வெம்மைப்படுத்தும் வல்லமை, மற்றும், நெருப்பைக் கொண்டிருக்கின்றன.

அருளாளர் ஜாக்-தெசிய லவல்  பேறுபெற்றவர்

பேறுபெற்றவர்கள் என்பது, கிறிஸ்தவ அடையாள அட்டை போன்றது. இதில் உள்ளவைவை, நல்ல கிறிஸ்தவராய் வாழ்வதற்குப் போதுமானவை. இவை பற்றி, ஒவ்வொரு நாள் வாழ்விலும் நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். “மொரீஷயஸ் மக்கள் ஒன்றிப்பின் திருத்தூதர்” என அழைக்கப்படும் அருளாளர் ஜாக்-தெசிய லவல் (Jacques-Dèsire Laval) அவர்கள், பேறுபெற்றவர்கள் போதனையின்படி வாழ்ந்தவர். கிறிஸ்து மற்றும், ஏழைகள் மீது அன்புகொண்டிருந்த இவர், நற்செய்தி, எல்லா மக்களுக்கும் உரியது என்பதை அறிந்திருந்தார். அதனால், அங்கு அண்மையில் விடுதலையடைந்திருந்த அடிமைகளின் மொழியைக் கற்று, எளிய மொழியில், மீட்பின் நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். விசுவாசிகளை ஒன்றுதிரட்டி, மறைப்பணிக்கு அவர்களைத் தயார்செய்து, நகரங்கள், கிராமங்கள் தோறும் சிறு கிறிஸ்தவ குழுக்களை உருவாக்க அவரால் முடிந்தது. அவற்றில் பெரும்பாலானவை இன்று பங்குத்தளங்களாக மாறியுள்ளன. அவரின் ஆர்வமிக்க மேய்ப்புப்பணி, ஏழைகள் மற்றும், ஒதுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றது. அந்த மக்கள்தான் முதலில் ஒன்றுசேர்ந்து வந்து, தங்கள் துன்பங்களுக்குப் பதிலைக் கண்டவர்கள். அருள்பணி லவல் அவர்கள், தனது மறைப்பணி மற்றும், அன்பு வழியாக, மொரீஷியஸ் திருஅவைக்கு புதிய இளமையை, புதிய வாழ்வைக் கொணர்ந்தார். இவரின் இந்த மறைப்பணி ஆர்வத்தைத் தொடர்ந்து செயல்படுத்த, இன்று நாம் அழைக்கப்படுகிறோம். இது எப்போதும் எளிதாக இருக்காது. அதாவது, நம் குழுக்களிலும், சமுதாயத்திலும் இருக்கின்ற இளையோரை அங்கீகரித்து அவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.

இளையோர் ஏற்கப்பட..

உங்கள் நாடு, அண்மை பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டிருந்தாலும், நாட்டில் அதிகம் துன்புறுவோர் இளையோர் என்பதைச் சொல்வதற்கே வருத்தமாக உள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுகின்றனர். இந்நிலை அவர்களின், வருங்காலம் குறித்த நிச்சயமற்றதன்மையை உருவாக்குவதோடு, உங்களின் வரலாற்றில் அவர்கள், ஒரு குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கின்றார்கள் என்று நம்புவதையும் தடைசெய்கின்றது. இது, அவர்களை, இந்த 21ம் நூற்றாண்டில் இடம்பெறும் அடிமைமுறையின் புதிய வடிவங்களில், தங்களையே பாதுகாத்துக்கொள்ள இயலாதவர்களாய் ஆக்குகின்றது. நம் இளையோரே, நம் மறைப்பணியில் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இயேசுவில் தங்கள் மகிழ்வைக் கண்டுகொள்ள நாம் அவர்களை அழைக்க வேண்டும். அவர்களின் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் கற்று, அவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களோடு நேரம் செலவழித்து, அவர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும். இந்த மண்ணின் முதற்கனிகளைத் திருடி அவற்றை அழிக்க நினைப்பவர்களை அனுமதிக்காதிருப்போம்

நற்செய்தியை வாழ்தல்

நற்செய்தியை வாழ்தல் என்பது, நம்மைச் சுற்றி எல்லாமே நிறைவாக உள்ளது என்று தொடர்ந்து நம்பிக்கொண்டு இருக்க முடியாது என்பதாகும். அதிகாரத் தாகமும், உலகப்போக்குச் செயல்களும், நமக்கு எதிராகச் செயல்படும் ஒரு சமுதாயத்தில், இயேசுவின் மலைப்பொழிவை வாழ்வது கடினமாக மாறுகிறது. ஆயினும், இவற்றால் சோர்வடைய நம்மை கையளிக்கக் கூடாது. இந்த மலையடிவாரத்தில், பேறுபெற்றவர்களாய் இருப்பதற்கு கிறிஸ்து விடுத்துள்ள அழைப்பை நாம் மீண்டும் கண்டுகொள்ள வேண்டும். பேறு என்பது, மகிழ்வு என்று பொருள். இது, புனிதம் என்பதாகவும் மாறுகிறது. ஏனெனில், கடவுளுக்கும், அவரின் வார்த்தைக்கும் விசுவாசமாக இருப்பவர்கள், தங்களையே வழங்குவதன் வழியாக, உண்மையான மகிழ்வைப் பெறுகிறார்கள் என்பதை, இது வெளிப்படுத்துகிறது. நம் உறுப்பினர்களின் எண்கள்    குறைகின்றன என்பதில் அவ்வளவாக கவலைப்படாமல், புனிதத்தை நோக்கிய பாதையில் மகிழ்வை அனுபவிக்க விரும்புகின்றவர்கள் குறைவுபடுவது பற்றி கருத்தாய் இருப்போம். அன்புச் சகோதரர், சகோதரிகளே, நம் குழுக்களுக்காகச் செபிப்போம். திருஅவையைக் கட்டியெழுப்புபவர் தூய ஆவியார் என்பதை மறவாதிருப்போம். தூய ஆவியாருக்குத் திறந்த மனதாய் இருக்கும் கொடைக்காக, அன்னை மரியாவின் பரிந்துரையைக் கேட்போம்.

Comments are closed.