அடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)

நாளாம் நாளாம் புனித நாளாம் அன்னையின் பிறந்த நாளாம்

மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட – திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத – தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.

மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், “உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்” என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சபை வழக்கமாக புனிதரின் – தூயவரின் – இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Comments are closed.