செப்டம்பர் 4 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.

நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.

இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.

அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை.

“தனிமையான ஓர் இடம்”

ஒரு நகரில் மாரோவ், கிரயோன் என்று நண்பர்கள் இருவர் இருந்தனர். இரண்டு பேரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரைக்கும் ஒன்றாகவே படித்தார்கள்; ஒன்றாகவே சுற்றினார்கள். வேலைதேடி அலையும்போதுதான் இருவரும் வேறு வேறு இடங்கட்குப் பிரிந்துபோனார்கள். அதன்பிறகு அவர்கள் இருபது ஆண்டுகட்கும் மேல் ஒருவரை ஒருவர் பார்க்கவே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து, இருவரும் இலண்டனில் நடைபெற்ற ஒரு வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டார்கள். இருவரும் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாதவாறு மாறியிருந்தார்கள். பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டதால், கடந்த காலத்தில் நடந்த பல இனிமையான தருணங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஓர் உயர்தரத் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு, அங்கு தங்களுடைய வாழ்வில் நடந்த பல இனிமையான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

இருவர்க்கும் இடையிலான உரையாடல் பின்னிரவையும் கடந்துசென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இருவர்க்கும் தூக்கம் வரத் தொடங்கியதால், தூங்குவதற்குத் தயாரானார்கள். அப்பொழுது மாரோவ் தன்னுடைய படுக்கையில் அமர்ந்து, கண்களை மூடிகொண்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினான். நடுவில் ‘Ditto’ (மேற்சொன்னபடி) என்று உரக்கக் கத்தினான். இதைக் கேட்டு அவனுக்குப் பக்கத்துப் படுக்கையில் படுத்து தூங்குவதற்குத் தயாரான அவனுடைய நண்பன் கிரயோன் திடுக்கிட்டு எழுந்தான். மாரோவ் தன்னுடைய வேண்டுதலை முடித்ததும் கிரயோன் அவனிடம், “என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ இறைவேண்டல்களைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், இப்பொழுது நீ செய்த இறைவேண்டல் வித்தியாசமாக இருக்கின்றது… அதுவும் உன்னுடைய இறைவேண்டலின் இடையில் நீ சொன்ன ‘Ditto’ என்ற என்ற சொல் இதுவரைக் கேட்டிராதது. இதற்கான அர்த்தம் என்ன என்று சற்றுப் புரியும்படி சொல்லமுடியுமா?” என்று வினவினான்.

“அதுவா… வழக்கமாக நான் ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளிலும், என்னுடைய எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கிய ஓர் அருமையான மன்றாட்டினை இறைவனிடம் எடுத்துரைப்பேன். அதற்கு அடுத்து வரும் நாள்களில் நான் வேறு எந்த வார்த்தையையும் சொல்லி ன்றாடமாட்டேன். மாறாக, புத்தாண்டின் முதல் நாளில் நான் இறைவனிடம் எடுத்துரைத்த அதே மன்றாட்டை ஒவ்வொருநாளும் எழுப்புகிறேன் என்பதைக் குறிக்கும் வகையில் Ditto என்ற ஒரே வார்த்தையை உரக்கச் சொல்லி மன்றாட்டை முடித்துக் கொள்வேன்” என்றான்.

இதைக் கேட்டுவிட்டு கிரயோன் தன் நண்பன் மாரோவிடம் ‘இப்படியெல்லாமா இறைவனிடம் மன்றாடுவாய்? இதற்கு நீ மன்றாடாமல் இருப்பதே மேல்” என்று சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மாரோவைப் போன்றுதான் பலரும் இறைவனிடம் மன்றாடவேண்டுமே என்று கடமைக்காக மன்றாடுவதைக் காண முடிகின்றது. இவர்கட்கு மத்தியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறைவேண்டலை ஒரு வாழ்க்கை முறையாக, வாழ்வின் ஓர் அங்கமாக செய்வதை நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாப்போம்.

தனிமையான ஓர் இடம் தேடிச் சென்ற இயேசு.

நற்செய்தி வாசகத்தில், இயேசு பொழுது விடியும் வேளையில் தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் என்று வாசிக்கின்றோம். இறைவனிடம் வேண்டுவதற்கே அவர் தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் என்று புரிந்துகொள்ளலாம்.

ஆண்டவராகிய இயேசு நாள்முழுதும் நற்செய்தியை அறிவிப்பதும் நோயாளிகளைக் குணப்படுத்துவதும் பேய்களை ஓட்டுவதும் என்று மிகவும் பரபரப்பாக இருந்தார். அதனால் அவர் உடலளவில் மட்டுமல்லாது, உள்ளத்தளவிலும் சோர்வுற்றிருந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்தான் அவர் தன்னுடைய உள்ளத்திற்கும் உடலுக்கும் ஆற்றல்வேண்டி இறைவனிடம் மன்றாடுவதற்குத் தனிமையான ஓர் இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார். இயேசு செய்த இச்செயல் நமக்கு இரண்டு சிந்தனைகளை வழங்குகின்றன. அவை என்னென்னவென்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பணிவாழ்விற்கான எல்லா ஆற்றலையும் இறைவேண்டலின் வழியாகப் பெற்ற இயேசு.

இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றதற்கு மிக முக்கிய காரணம், அவர் தந்தைக் கடவுளோடு உறவாடுவதற்காக. அதற்கு அடுத்த காரணம், அவர் தன்னுடைய பணிவாழ்விற்கான எல்லா ஆற்றலையும் பெற்றுக்கொள்வதற்காக. இந்த இரண்டு காரணங்கட்காகத்தான் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். நாள் முழுவதும் இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த இயேசுவுக்கு இறைவனின் ஆற்றலும் வல்லமையும் தேவைப்பட்டது உடனிருப்பும் தேவைப்பட்டன. அவற்றையெல்லாம் அவர் தான் செய்த இறைவேண்டலின் வழியாகப் பெற்றுக்கொண்டார். நம்முடைய அன்றாட வாழ்விற்கும் இறைவேண்டல் என்பது மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து வாழ்வது தேவையானது.

சிந்தனை.

‘தொடர்ந்து ஏழு நாள்கள் ஒருவர் இறைவனிடம் வேண்டவில்லை என்றால், அவர் மிகவும் பலவீனமடைந்து விடுவார்’ என்கின்றது ஒரு பொன்மொழி. ஆகையால், நாம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.