அன்னை மரியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்…! என்று காலங்காலமாக நம் கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் செபமாலை வழியாக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்…
இன்றைக்கு மட்டுமல்ல… நெடுங்காலமாகவே அன்னை மரியாளை ஏன் வணங்க வேண்டும்…? என்ற கேள்வியும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுள்ளது…!
மேற்கண்ட கேள்வியை நம் பிரிவினை சகோதர சகோதரிகள் எழுப்பி வருகின்றனர். காரணம் அறிந்து கொள்ள வேண்டும் என முனைப்பில்லாமல்… தங்களின் கருத்துக்களை என்பதையும் தாண்டி எதிர்ப்பைக் கொட்டிவிட்டால் போதும் என்ற நோக்கம்தான் இருக்கின்றதே தவிர கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதே இல்லை என்பதுதான் உண்மை.
முதலில்…
அன்னை மரியாள் நமது நல் மேய்ப்பரும் ஆண்டவருமான யேசு கிறிஸ்துவின் தாய் என்பதை அறிந்தேயிறாதவர்களா…? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
தூய திருத்தூதர் பேதுரு… ” உங்கள் விசுவாசத்திற்கு (நம்பிக்கை) யாரேனும் விளக்கம் கேட்டால், விடை பகரத் தயாராகுங்கள்.” (1 பேதுரு 3: 15) என்று மிக சரியாக பறைசாற்றுகிறார் தூய விவிலியத்தின் வழியாக.
எனவே…
விவிலியத்தை அதுவும் தூய விவிலியத்தை நம்பிக்கை கொண்டு வாசித்து வாழ முயற்சி செய்யும் நாம் அனைவரும் தூய பேதுருவின் கூற்றுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும்.
காரணம் கத்தோலிக்கர்களாகிய நம் ஒவ்வொருவரும் நற்செய்தியை பரப்ப கடமை பட்டவர்கள் ஆவோம்.
தூய விவிலியத்தின் வழியாக மட்டுமே அன்னை மரியாவைப் பற்றிய நமது நம்பிக்கைக்கும் பிரிவினை வாதம் செய்யும் அனைவருக்கும் விளக்கம் மிகவும் சிறப்பாக அளிக்கமுடியும்.
பிரிவினைச் சபைகளின் போதனைகளில் நாம் அனைவரும் அடிககடி கேட்கும் வாக்கியம்… “கடவுள் எனக்கு வெளிப்படுத்தினார்.”
சரி…!
எதை வெளிப்படுத்தினார் என்று கேட்டால்… கத்தோலிக்கனாக இருந்த ஒருவரை நமது சபைக்கு ஆண்டவர் அழைத்து வந்தார், சாராள் வீட்டில் இருந்த தகடை எனக்கு காண்பித்தார், ஊதியத்தை உயர்த்த தொலைக்காட்சி, பத்திரிகை வழியாக லாபம் ஈட்டுவதற்காக வெளிப்படுத்தினார்….!
என்று மனதில் தோன்றியதையெல்லாம் கூறி மக்களை திசை திருப்ப முயற்சி செய்வார்கள்…!
ஆனால்…
மேற்கண்ட வெளிப்படுத்துதல் எந்த வகையிலும் நமது ஆண்டவரின் மீட்புத் திட்டத்திற்கோ… மீட்புச் செயலுக்கோ தொடர்புள்ளதா…? மாறாக…
இது எந்த வகையில் நற்செய்தியாகும்…?
வெளிப்படுத்துதல் அன்னை மரியாவுக்கே வழங்கப்பட்டது.
வானதூதரின் வழியாக… ” தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும்.” (லூக்கா 1: 35). என்பதை நாம் விவிலியச் சாட்சியாகக் காண்கின்றோம்.
அன்னை மரியாளே நம் திருச்சபையின் முதல் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனில்…
கூட்டத்தில் ஒரு பெண் யேசுவை நோக்கி ” உம்மைக் கருத்தாங்கி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று கூறினார். அவரோ “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் பேறுபெற்றோர்” (லூக்கா 11: 27, 28)என்று கூறுகின்றார். காரணம் அன்னை மரியா மட்டுமல்ல… கடவுள் வார்த்தைக்கு செவிசாய்க்கும் அனைவரும் என்று பொதுவாகக் கூறினாலும்…எந்த கூற்றுக்குச் சாட்சியம் பகர்ந்தார்…?
அன்னை மரியாளைப் பற்றிய புகழ்ந்தேத்துதலை ஏற்றுக்கொண்டாலும்… அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மாறாக…
“இதோ ஆண்டவருடைய அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் ” (லூக்கா 1: 38) என்றார். அடிமை நிலை மனிதன் மனிதனுக்கு என்ற நிலை யூத மண்ணில் இருந்து வந்த ஒரு இழி நிலை. அந்த அளவுக்கு தன்னை கடவுளுக்கு அடிமையாக்கிக் கொண்டுவிட்ட அன்னை மரியா…
” என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றப்படும் ” (லூக்கா 2:27 ).என்று இறைமகன் யேசு கூறிய கருத்து அன்னை மரியாளுக்கு சரியாகவே பொருந்தும். ஏனெனில்…” உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:35). என்று இறைவார்த்தை தூய சிமியோன் வாயிலாக தொலைநோக்கில் கூறப்பட்டுள்ளது.
“நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவார்கள்”1883 (யோவான் 13:35). என்று நம் இறைமகன் மரியாளின் மகனாக இப்பூவுலகில் வந்த பிறகு கூறியதை அவரை பெற்றெடுக்கும் முன்பே கடைப்பிடித்தவர்…
வானதூதரின் செய்தியைக் கேட்டுவிட்ட அன்னை அவர்கள்… முதிர்ந்த வயதில் தாய்மை அடைந்த எலிசபெத்தம்மாளுக்கு உதவச் சென்றாரே…? (லூக்கா 1 : 39,56) இதைவிட ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பு வேறு உண்டோ…?
“நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது “(உரோ. 5 : 5)
என்ற இறைவார்த்தைக்கு உயிர் கொடுத்து சாட்சியாக வாழ்ந்தவர் அன்னை மரியா.
கானாவூர் திருமணத்தில் நடந்த புதுமை…
அன்னை மரியாள் பரிந்துரைக்குப் பின்னர்தானே…?
அப்போதும்… இப்போதும்…எப்போதும்…
நம் வேண்டுதல்களை…” அன்னை மரியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்… ” என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மன்றாடுகின்ற போது நிச்சயம் நமக்காக தம் மகனாம் யேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசி அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் நிகழ்த்திக் காட்டுவார் என்பது திண்ணம்.
-ரூஃபஸ் வி ஆண்டனி
Comments are closed.