நற்செய்தி வாசகம் செப்டம்பர் 03
நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.
தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.
“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார்.
அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.
எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திய இயேசுவின் போதனை
நிகழ்வு
‘The Power of Positive Thinking’, ‘You can If you think You can’ ‘Stay Alive All your Life’ போன்ற பல புத்தகங்களின் ஆசிரியர் மற்றும் மிகச்சிறந்த பேச்சாளர் நார்மன் வின்சென்ட் பீல் என்பவர்.
இவர்க்கு ஒரு நண்பர் இருந்தார். ஒருசமயம் இவருடைய நண்பர் இவரிடம் வந்து, “நண்பா! ஒரு பெரிய கூட்டத்தில் பேசவேண்டும். எப்படிப் பேசவேண்டும்? அதற்கான ஆலோசனைகளைக் கொடு” என்றார். உடனே நார்மன் வின்சென்ட் பீல் அவரிடம், “நீ பேசப்போவது சிறிய கூட்டமோ பெரிய கூட்டமோ, நீ பேசும்போது உன்னை மறந்து, கேட்பவர்களின்மீது அக்கறையோடும் கரிசனையோடும் பேசு. நிச்சயம் உன்னுடைய பேச்சு எல்லாருடைய உள்ளத்தையும் தொடும்” என்றார்.
நார்மன் வின்சென்ட் பீல் சொன்னதுபோன்று அவருடைய நண்பர், அந்தப் பெரிய கூட்டத்தில் பேசியபோது தன்னை மறந்து, தனக்கு முன்பாக இருந்தவர்கள்மீது உண்மையான அக்கறையோடும் கரிசனையோடும் பேசினார். அவர் பேசி முடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று அவர்க்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.
ஒருவருடைய பேச்சு அடுத்தவர்மீது உண்மையான அக்கறையோடும் கரிசனையோடும் இருந்தால், அது அவர்களுடைய உள்ளத்தைத் தொடும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள். மக்கள் வியப்பில் ஆழ்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை இருந்தது என்றால், இயேசுவின் போதனையில் அப்படி என்ன இருந்தது என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
அன்போடும் பரிவோடும் போதித்த இயேசு
இயேசு கிறிஸ்து தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்திலிருந்து கப்பர்நாகுமிற்கு வருகின்றார். அங்கு வந்தபிறகு மக்கட்குப் போதித்தத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள். இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் ஆழ்ந்தார்கள் எனில், அதற்கான காரணத்தை நாம் தெரிந்துகொள்வது நல்லது.
மாற்கு நற்செய்தி 6 ஆம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்ச்சி. இயேசுவும் அவருடைய சீடர்களும் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்று செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்து பெருந்திரளான மக்கள் வருவார்கள். அவர்களைக் காணும் இயேசு, ஆயரில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்கட்குப் பலவற்றைக் கற்பிப்பார் (மாற் 6: 34). இங்கு இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கட்குப் பரிவோடு போதிப்பதை நம்முடைய கருத்தில் கொள்வது நல்லது.
இந்த இடத்தில் மட்டும் மட்டுமல்லாது பல இடங்களிலும் அவர் பரிவோடும் அன்போடுதான் போதித்தார். அதனால் அவருடைய போதனை மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதிகாரத்தோடு போதித்த இயேசு
இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்ததற்கு இன்னொரு காரணம், அவர் அதிகாரத்தோடு போதித்தார் என்பதால் ஆகும். இன்றைய நற்செய்தியில், இயேசு தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடம் தீய ஆவியை விரட்டியடிக்கின்றார். இதைத் தொடர்ந்து, மக்கள், “இவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகட்குக் கட்டளையிடுகின்றார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று பேசிக்கொள்கின்றார்கள். ஆம், இயேசு, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போலன்றி, தன்னுடைய சொந்த அதிகாரத்தில் (மத் 28: 18) போதித்தார்; வல்ல செயல்களைச் செய்தார். அதனால்தான் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
வாழ்ந்ததைப் போதித்த இயேசு
இயேசுவின் போதனை மக்கள் அனைவரையும் வியப்படைய வைத்ததற்கு மிக முக்கியமான அவர் வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததை வாழ்ந்து காட்டினார் என்பதால்தான். இயேசுவின் காலத்தின் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சொன்னார்கள். ஆனால் செயலில் காட்டவில்லை; வாய்கிழியப் பேசினார்கள். ஆனால், வாழ்ந்து காட்டவில்லை (மத் 23: 3) இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததை வாழ்ந்து காட்டினார். அதனால் மக்கள் அவருடைய போதனைக் கேட்டு வியப்படைந்தார்.
இயேசுவிடம் இருந்த பரிவும் அன்பும் போதித்ததை வாழ்ந்துகாட்டும் பண்பும் நம்மிடமும் இருக்கும் பட்சத்தில் இயேசுவைப் போன்று வல்ல போதகராக மாறமுடியும் என்பது உண்மை.
சிந்தனை
‘இயேசு கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்’ (லூக் 24: 19) என்று எம்மாவு நோக்கிச் செல்லும் இயேசுவின் சீடர்கள் அவரைக் குறித்துப் பேசிக்கொள்வார்கள். இயேசுவைப் போன்று நாமும் சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.