புனிதத்தை அணுகிச் செல்ல உதவும் திருவழிபாடு
நம் ஆண்டவரையும், சகோதரர், சகோதரிகளையும் சந்திப்பதற்கு உதவியாக, திருவழிபாட்டு வாழ்வில் நாம் தகுந்த உருவாக்கம் பெறவேண்டும் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தாலியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
“திருவழிபாடு: திருமுழுக்கின் புனிதத்திற்கு அழைப்பு” என்ற மையக்கருத்துடன், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 29ம் தேதி முடிய, இத்தாலியின் மெஸ்ஸீனா (Messina) என்ற இடத்தில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருள் நிறைந்த, அடையாளங்கள் மிகுந்த கத்தோலிக்கத் திருவழிபாட்டின் ஆழத்தை அனைவரும் புரிந்துகொள்வதற்கும், இந்த அருள் அடையாளங்களில் இறைவனையும், அயலவரையும் சந்திப்பதற்கும் நாம் அனைவரும் அழைப்பு பெற்றுள்ளோம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நான்குநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள ஆயர் Claudio Maniago அவர்களுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், திருவழிபாடுகள், ஒவ்வொருவரையும், ‘நான்’ என்ற நிலையிலிருந்து, ‘நாம்’ என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறைவனின் அணுக இயலாத புனிதத்தை அணுகிச்செல்ல உதவும் திருவழிபாடுகளில், பொருளுள்ள முறையில் பங்கேற்க, இரண்டாம் வத்திக்கான் சங்கம் வழி அமைத்ததைத் தொடர்ந்து, திருத்தந்தையர் அனைவரும், மக்களை, இந்தப் புனிதப்பாதையில் பயணிக்க அழைப்பு விடுத்துவருகின்றனர் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் செய்தியில் எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார்.
Comments are closed.