மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை

மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 11:11)

வாழ்க்கை வரலாறு

“சாவுக்குப் பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருதடவைதான் சாவு” என்று சொல்வார்கள். ஆண்டவரைத் தவிர வேறு எதற்கும் எவருக்கும் பயப்படாது, அஞ்சா நெஞ்சத்தோடு வாழ்ந்து, அநியாயமாகக் கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகளைத் தான் இன்றைக்கு நாம் நினைவுகூருகின்றோம்.

யோவான், அபியா வகுப்பைச் சார்ந்த செக்கரியா என்பவருக்கும் ஆரோனின் வழிவந்த எலிசபெத் என்பவருக்கும் அவர்களுடைய வயதான காலத்தில் மகனாகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு எப்படி முன்னறிவிக்கப்பட்டதோ, அதுபோன்று யோவானின் பிறப்பும் முதன்மைத் தூதர் கபிரேயலால் முன்னறிவிக்கப்பட்டது. ஆனால் இயேசுவைப் போன்று திருமுழுக்கு யோவான் குடும்பப் பாங்கான சூழலில் வளரவில்லை. காட்டிற்குச் சென்று தனிமையாக பாலைநிலத்தில் வளர்ந்து வந்தார். அங்கு கிடைத்த வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும்தான் உண்டுவந்தார். ஒட்டக மயிராடையை ஆடையாக அணிந்துவந்தார். இப்படி யோவான் காட்டிலே வளர்ந்து வந்ததால் அவருடைய பேச்சுகூட சற்று கடினமாகவே இருந்தது.

இத்தகைய பின்னணியிலிருந்து வந்த யோவான், ஆண்டவருடைய வாக்கு கிடைக்கப்பட்டதும் அதனைத் திறந்த மனதோடு ஏற்று, அதன்படி நடக்கத் தொடங்குகின்றார் (லூக் 3: 2-3). ஆம், ஆண்டவர் அவரை தன் திரு மைந்தனாம் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரிக்கச் சொல்கின்றார். யோவானும் ஆண்டவர் சொன்னதைப் போன்று மக்கள் மனமாறவேண்டும் என்று அறிக்கையிட்டு, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுக்கத் தொடங்குகின்றார். அவர் இவ்வாறு திருமுழுக்குக் கொடுக்கத் தொடங்கியதும் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரை எல்லாரும் அவரிடமிருந்து திருமுழுக்குப் பெறுகின்றார்கள். யோவானின் காலத்திற்கு முன்பாக ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் ஆண்டவர் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்தவே இல்லை. இத்தகைய சூழ்நிலையில் யோவான் இறைவாக்கைப் போதிப்பதையும் திருமுழுக்குக் கொடுப்பதையும் பார்த்துவிட்டு அவரை இறைவாக்கினராகவும் ஆண்டவர் அவர் வழியாகப் பேசுகின்றார் என்றும் நம்பத் தொடங்குகின்றார்கள்.

திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வந்தவர்களிடம், பகிர்ந்து வாழச் சொல்கின்றார், பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல் கனிதரும் வாழ்க்கை வாழச் சொல்கின்றார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, அதன்படி நடக்கின்றார்கள்.

ஆண்டவருக்காக மக்களை ஆயத்தம் செய்தது ஒரு பணி என்றால், வந்த மெசியாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது, அவரைத் தம் சீடர்களுக்குச் சுட்டிக்காட்டியது திருமுழுக்கு யோவான் செய்த இன்னொரு பணியாகும். ஒருசமயம் திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களோடு நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் வருகின்றார். அவர் வருவதைக் கண்ட யோவான் தன் சீடர்களிடம், “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று தன்னுடைய சீடர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். உடனே யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள் (யோவா 1: 35-37) இவ்வாறு திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்குச் சுட்டிக்காட்டியபின், எருசலேம் திருக்கோவிலில் இருந்த சீமியோனைப் போன்று, “ஆண்டவரே உம் அடியானை இப்போது அமைதியோடு போகச் செய்யும்” என்பதுபோல நிம்மதி அடைகின்றார்.

திருமுழுக்கு யோவான் ஆண்டவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில், அநீதியையும் சுட்டிக்காட்டினார். ஏரோது மன்னன் தன் சகோதரரின் மனைவியோடு வாழ்ந்து வந்ததைப் பார்த்த யோவான், அவர் செய்துவந்த தவற்றை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுகின்றார். அதனால் அவர் கொல்லப்படுகின்றார். அதற்குப் பிறகு யோவானின் சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போய், சமாரியாவில் உள்ள செபாஸ்டி என்ற இடத்தில் அடக்கம் செய்கிறார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்து திருச்சபை திருமுழுக்கு யோவானை நினைவுகூர்ந்து கொண்டாடத் தொடங்கியது.

கற்றுக்கொள்ளவேன்டியாய பாடம்

திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூருகின்ற நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு நிறைவு செய்வோம்.

1. இயேசுவை சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரல்களாக மாறுவோம்

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்ற மிக முக்கியமான பாடம் நாம் ஒவ்வொருவரும் நம்மை மையப்படுத்துகிறவர்களாக அல்லாமல், இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரல்களாக மாறவேண்டும் என்பதுதான். அவர் எப்போதும் மக்களிடம் தன்னை மையப்படுத்தியோ அல்லது தன்னைச் சுட்டிக்காட்டியோ பேசவில்லை, மாறாக மெசியாவாகிய இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக, அறிவிப்புப் பலகையாக விளங்கினார்.

நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக, அறிவிப்புப் பலகையாக மாறவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்கு எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கின்றது.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மானிய நாசிப் படை இங்கிலாந்து நாட்டிற்குள் புகுந்து அங்குள்ள நகரங்களையும் அதிலுள்ள மக்களையும் அழித்தொழிக்க திட்டம் தீட்டியது. அப்போது இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் மக்களுக்கு ஓர் அறிவிப்பு விடுத்தார். “அன்பார்ந்த மக்களே, நம்முடைய நாட்டை நோக்கி எதிரிகளின் படை வீறுகொண்டு வருகின்றது. இதை நினைத்து நீங்கள் பதற்றமடைய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஊர் பெயரோ அல்லது நகரத்தின் பெயரோ பொறிக்கப்பட்ட பலகைகளை அப்புறப்படுத்துங்கள். அதுபோதும்” என்றார். அவர் சொன்னதுபோன்றே மக்களும் செய்தார்கள்.

இதற்குப் பின் இங்கிலாந்தை அழித்தொழிக்க வேண்டும் என்று வீறுகொண்டு வந்த ஜெர்மானியப் படை, எந்த நகர் எங்கிருக்கின்றது, அந்த நகருக்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் கடைசியில் தங்களுடைய நாடு திரும்பினார்கள். இந்த நகருக்கு இப்படிச் செல்லவேண்டும், அந்த ஊருக்கு அப்படிச் செல்லவேண்டும் என்று பொறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டதினால், இங்கிலாந்து நாட்டவர் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டனர்.

ஒன்றை அல்லது ஒருவரை சுட்டிக்காட்டுகின்ற அறிவிப்புப் பலகைகளுக்கு, சுட்டுவிரலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். திருமுழுக்கு யோவான் அப்படித்தான் ஒரு சுட்டுவிரலைப் போன்று ஆண்டவர் இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். நாமும் அவர் காட்டிய அந்த வழியில் நடப்பதே சிறப்பானதாகும்.

ஆகவே, திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டுவோம், உண்மைக்குச் சான்றுபகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்

Comments are closed.