இலங்கையில் ஆங்லிக்கன் பேராயர் ஒற்றுமைக்கு அழைப்பு

இலங்கையில் மூன்று நாள்கள் ஒருமைப்பாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள, இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், அந்நாட்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான, கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு, ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று சென்ற பேராயர் வெல்பி அவர்கள், அத்தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களையும் சந்தித்தார்.

Katuwapitiya ஆலயத்தில், பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலில் சேதமடையாமல், அதேநேரம் பலியானவர்களின் குருதியால் தோய்ந்திருந்த உயிர்த்த இயேசுவின் திருஉருவத்தைப் பார்த்த பேராயர் வெல்பி அவர்கள், இது, விசுவாசிகளின் ஆழ்ந்த விசுவாசத்தையும், துணிச்சலையும், அன்பையும் நினைத்துப்பார்க்கச் செய்கின்றது என்று கூறினார்.

கிறிஸ்து நம்மிலிருந்து தொலைவில் இல்லை என்றும் உரைத்த பேராயர் வெல்பி அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற தாக்குதல்கள் பற்றி அறிந்தபோது, நம் சகோதரர், சகோதரிகளுக்காக அமைதியாகச் செபித்தேன் என்றார்.

ஏறக்குறைய 8 கோடியே 50 இலட்சம் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்களின் தலைவராகிய, கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் மற்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் திருவழிபாட்டிலும் கலந்துகொண்டார்.

மேலும், இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே அவர்களையும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த இராஜபக்ஷே அவர்களையும், மரியாதை காரணமாகச் சந்தித்தார், பேராயர் வெல்பி.

Comments are closed.