நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 30)

பொதுக்காலம் இருபத்தி ஒன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 23: 23-26

“உங்கள் உட்புறத்தை எதனால் நிரப்பியிருக்கிறீர்கள்?”

நிகழ்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டில் ‘தண்டர்போல்ட்’ என்ற பிரபலத் திருடன் ஒருவன் இருந்தான். அவன் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருடுவதில் கைதேர்ந்த ஆள். ஒருசமயம் அவன் ஒரு வீட்டில் திருடிவிட்டு வெளியேறுபோது, அங்கிருந்த காவலாளி அவனைப் பார்த்துவிட, அவன் அவரிடமிருந்து தப்பித்து ஓடினான். ஆனால், அந்தக் காவலாளி தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிபார்த்துச் சுட்டார். குறி எப்படியோ தப்பி, குண்டு தண்டர்போல்ட்டின் வலதுகாலில் பாய்ந்தது. அப்படியிருந்தும் அவன் அங்கிருந்து தப்பித்து, தான் இருந்த இடத்திற்கு ஓடிப்போனான்.

காலில் குண்டு பாய்ந்த பிறகு சில மாதங்கட்கு அவன் எங்கேயும் திருடச் செல்லாமல், வீட்டிலே முடங்கிக் கிடந்தான். ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?’ என்பார்களே அதுமாதிரி, பிரபலத் திருடனாக இருந்த தண்டர்போல்ட்டால் திருடாமல் இருக்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டில் திருடுவதற்குத் திட்டம் தீட்டினான். குறிப்பிட்ட நாளில் அவன் அந்த செல்வந்தரின் வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது, ஏதோவொரு சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்த எல்லாரும் முழித்துக்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அவனை நையப்புடைத்து வழக்காடு மன்றத்தில் ஒப்படைத்தார்கள். வழக்காடு மன்றம் அவனுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையை அளித்தது.

சிறையில் அடைக்கப்பட்ட அவன் ஓரிரு நாள்களிலேயே அங்கிருந்து தப்பித்து, 1818 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தான். அவன் தப்பித்த செய்தி ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது. இதனால் அவன் தன்னுடைய முகத்தோற்றத்தையும் குண்டடிபட்ட தன்னுடைய காலையும் ‘தண்டர்போல்ட்’ என்ற தன்னுடைய பெயரை மருத்துவர். ஜான் வில்சன் எனவும் மாற்றிகொண்டு ஒரு மருத்துவரைப் போன்று, மக்கள் மத்தியில் வலம் வந்தான். இதனால் யாருக்கும் அவன்மீது ஐயம் வரவேயில்லை.

ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. அவனுக்கு வயது ஏறிக்கொண்டே சென்றது. ஒருநாள் அவன் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தனக்குத் தெரிந்தவர்களிடம், “நான் இறந்தபிறகு என்னுடைய உடையை என் உடலிலிருந்து அகற்றாமல், அப்படியே அடக்கம் செய்துவிடுங்கள்” என்றான். அவர்களும் அதக்குச் சரியென்று சொன்னார்கள். இது நடந்து ஒருசில நாள்களிலேயே அவன் இறந்துபோனான். அவன் இறந்தபிறகு அவனுக்குத் தெரிந்தவர்கள் அவனை அப்படியே அடக்கம் செய்ய முயன்றபோது, அந்த ஊரில் இருந்தவர்களெல்லாம், “இறந்தவரை அவர் உடுத்தியிருந்த உடையோடா அடக்கம் செய்வார்கள்?. புத்தாடை உடுத்தித்தானே அடக்கம் செய்வார்கள்” என்றார்கள்.

இதனால் அவன்மீது இருந்த உடையானது களையப்பட்டது. அப்பொழுது அவனுடைய காலில் இருந்த தழும்பும் அவனுடைய உண்மையான முகமும் மக்களுக்குத் தெரிய வந்தது. “இது பிரபலத் திருடன் தண்டர்போல்ட் அல்லவா… இவன்தான் ஒரு மருத்துவரைப் போன்று வேடம் தரித்துக்கொண்டு, நல்லவனைப் போன்று வலம்வந்தானா!” என்று திட்டித் தீர்த்தார்கள்.

இந்தத் திருடனைப் போன்றுதான் பலரும் வெளிப்புறத்திற்கு நல்லவர்கள் போன்றும் உள்ளுக்குள் மிகவும் மோசமாகவும் இருக்கின்றார்கள். இதேபோன்றுதான் இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வெளிவேடத்தனத்தை நற்செய்தியில் இயேசு மிகக் கடுமையியாகச் சாடுகின்றார். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

வெளியே நல்லவர்களாகவும் உள்ளுக்குள் கொடூரமானவார்களாகவும் வாழ்ந்து வந்த பரிசேயக் கூட்டம்

இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயக் கூட்டம், மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டது போன்று ‘புதினா, சோம்பு, சீரகம்’ ஆகியவற்றிலிருந்து பத்திலொரு பங்கைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள் (இச 14: 22; லேவி 27: 30). இவற்றையெல்லாம் அவர்கள் செலுத்தக் காரணம், மக்கட்கு முன் தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக. ஆனால், அவர்கள் இன்னொரு பக்கம், திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை போன்றவற்றைக் கடைப்பிடிக்கத் தவறினார்கள்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், பரிசேயக் கூட்டம் மக்கள் பார்வைக்கு பக்திமான்களாக, நல்லவர்களாகக் காட்டிக்கொண்டார். உள்ளேயோ அடுத்தவரை எப்படி அடக்கியாளலாம்; அடுத்தவருடைய உடைமையை எப்படி அபகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று சாடுகின்றார். பரிசேயர்களின் வெளிவேடத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம், நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் முக்கியமாகும்.

இறைவாக்கினார் ஓசேயா, ஆண்டவர் கூறுவதாக இஸ்ரயேல் மக்களைப் பார்த்து இவ்வாறு சொல்வார், “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.” ஆகையால், இறைவன் விரும்புகின்ற இரக்கத்தை, பிறர் மீதான அன்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சித்து, வெளிவேடமில்லா வாழ்க்கை வாழ்வோம்.

சிந்தனை

‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13:10) என்பார் பவுல். ஆகையால் அன்பை நம்முடைய வாழ்வின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் கொண்டு ,வெளிவேடமில்லா வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்

Comments are closed.