குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் இங்கிலாந்து பேராயர் ஜஸ்ரின் ஆண்டகை

இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்ரின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தார்.

அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் ஏப்ரல் 21ம் திகதி பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்ரியார் ஆலயத்திற்கு இன்று காலை விஜயம் செய்தார். அவரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றார்.

பேராயர் பேரருட்திரு ஜஸ்ரின் வெல்வி ஆண்டகை சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அதன் பின் குண்டுத்தாக்குதலின் சிதைவுகளை பார்வையிட்டு குண்டுத்தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மக்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பேராயர் பேரருட்திரு ஜஸ்ரின் வெல்வி ஆண்டகை குண்டுத்தாக்குதல் செய்திக்கேட்டு தாம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் , சொல்லமுடியாத வேதனைக்கு நாம் ஆளானதாகவும் அன்றைய தினம் பாதிக்ப்பட்ட மக்களை இன்றைய தினம் சந்திக்க கிடைத்ததில் தாம் மிகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணப் பொதிகளும், பேராயர் ஜஸ்ரின் வெல்வி ஆண்டகை அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிற்பகல் 2மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதனை தொடர்ந்து கிறிஸ்தவமத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவையும் சந்திக்கவுள்ளார்.

பேராயர் ஜஸ்ரின் வெல்வி ஆண்டகை அவர்கள் 31ம் திகதி (நாளை மறுதினம்) வரைக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.