நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 27)
ஒரு நகரின் மிகவும் பரபரப்பான சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு பாம்பாட்டி ஒருவர், “அம்மாமாரே! அய்யாமாரே! பெரிய பெரிய பாம்புகளெல்லாம் நடனமாடும் காட்சிகளைக் காணவிரும்புகிறார்களா! வாருங்கள் வருங்கள்” என்று கூவிக் கூவி அழைத்தார். அவர் இவ்வாறு அழைத்ததைத் தொடர்ந்து பலரும் அவர்க்கு முன்பாகக் கூடினார்கள். திரளான மக்கள் அங்கு கூடியபின், பாம்பாட்டி தன்னிடம் இருந்த மகுடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவர் வாசிக்க வாசிக்க அவர்க்கு முன்பாக இருந்த பெரிய பெரிய பாம்புகளெல்லாம் படமெடுத்து ஆடத் தொடங்கின. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவிட்டு அங்கு திரண்டிருந்த மக்கள் தங்களிடமிருந்த பத்து, ஐம்பது, நூறு, ஐநூறு என்று அவர்க்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
அந்தக் கூட்டத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிரித்துக் கொண்டே பாம்பாட்டியின் அருகில் சென்று, அவருடைய காதுக்குள், “நீங்கள் மகுடியை ஊதுவதால் அல்ல, உங்களுடைய கால்களைத் தரையில் அடிப்பதால்தான் தானே பாம்புகள் ஆடுகின்றன” என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, பாம்பாட்டி அதிர்ந்து போனார். “தம்பி! மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் போன பின்பு, இது குறித்து உன்னிடம் பேசுகிறேன். அது வரைக்கும் கொஞ்சம் ஓரமாக நில்” என்றார். அவனும் எல்லாரும் அங்கிருந்து போகும்வரைக்கும் சற்று ஓரமாகவே இருந்தான்.
எல்லாரும் போனபின்பு பாம்பாட்டி இளைஞனைத் தன் அருகே கூப்பிட்டார். “தம்பி! பாம்புகள் நான் ஊதுகின்ற மகுடியினால் அல்ல, என்னுடைய கால்களைத் தரையில் அடிப்பதனால்தான் ஆடுகின்றன என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்றார். “அது என்னுடைய தாத்தா சொல்லிக்கொடுத்தது” என்றான் இளைஞன். “அது சரி, இந்த உண்மையை வேறு யாரிடமும் சொல்லிவிடாதே… சொன்னால் என்னுடைய பிழைப்பு நாறிப்போய்விடும்” என்று அவர் அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
அதற்குப் பின் இளைஞன் அந்தப் பாம்பாட்டியைப் பார்த்து, “உங்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்… நீங்கள் எதற்கு ‘மகுடி ஊதுவதால் பாம்பு படமெடுத்து ஆடுகின்றது’ என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். “வேறு எதற்கு? வயிற்றுப் பிழைப்பிற்காகத்தான் மக்களிடம் இப்படிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். சாதாரண மக்கள், நான் மகுடி ஊதிவதால்தான் பாம்பு படமெடுத்து ஆகின்றது என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைத்தான் நான் மூலதனமாகப் போட்டு பிழைப்பை ஒட்டிக்கொண்டிருக்கின்றேன்” என்றார் அந்தப் பாம்பாட்டி.
இந்தப் பாம்பாட்டியைப் போன்றுதான், ஒருசில சமயவாதிகள் அல்லது பிழைப்பு வாதிகள், மக்கள் தங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகப் போட்டு கொள்ளை இலாபம் அடைந்துகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தான் நற்செய்தியில் இயேசு ‘குருட்டு வழிகாட்டிகள்’ என்று சாடுகின்றார். அவர்களை ஏன் இயேசு அவ்வாறு சாடுகின்றார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
திருச்சட்டத்தைப் போதிக்காமல், மனித சட்டங்களைப் போதித்த மறைநூல் அறிஞர்கள்
நற்செய்தியில் இயேசு, ‘விண்ணகத்திற்கு வழி சொல்கின்றேன்’ என்று சொல்லிக்கொண்டு, மக்களும் நுழைய விடாமல் அவர்களும் நுழையாமல் இருந்த மறைநூல் அறிஞர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அவர்கள் விண்ணக வாயிலை மக்கட்கு அடைத்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் கடவுளின் திருச்சட்டத்தைப் போதிக்காமல், மனிதர்கள் உண்டாக்கிய சட்டத்தைப் போதித்ததுதான். இன்றைக்கும் கூட பலர் கடவுளின் வார்த்தையைப் போதிக்காமல், தங்களுடைய வார்த்தைகளை மிகவும் கவர்ச்சியாகப் பேசி, மக்களைப் படுகுழியில் தள்ளுவதைப் பார்க்க முடிகின்றது. இவர்கள் அனைவரும் குருட்டு வழிகாட்டிகள்தான்.
கடவுளின் பெயரைச் சொல்லி, மக்களிடமிருந்து கொள்ளையடித்தவர்கள்
மறைநூல் அறிஞர்களை இயேசு இவ்வளவு கடுமையாகச் சாடுவதற்கு இரண்டாவது காரணம், அவர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி மக்களைச் சூறையாடியதால் ஆகும். நற்செய்தியில் இயேசு அவர்களுடைய தவற்றினை, ‘மக்கள் திருக்கோவிலின் மீதோ அல்லது பீடத்தின்மீதோ ஆணையிட்டால் அவற்றை நிறைவேற்றத் தேவையில்லை. மாறாக கோவிலின் பொன்மீதும் படைக்கப்பட்ட காணிக்கைகள்மீதும் ஆணையிட்டால் அவற்றை நிறைவேற்றவேண்டும்’ என்று சொல்கின்றார் என்று சொல்லி, அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். கோவிலில் படைக்க எல்லாமும் அவர்கட்குத்தான் வந்தன. அதன்வழியாக அவர்கள் கொள்ளை இலாபம் அடித்தார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக அவர்கள். யார் யாரெல்லாம் ஆணையிடுகிறார்களோ அவர்கள் அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்லி வந்தார்கள். இதனாலேயே இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.
சிந்தனை
‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ (யோவா 14:6) என்பார் இயேசு. ஆகவே, நாம் குருட்டு வழிகாட்டிகட்குப் பின்னால் நடக்காமல், ஒப்பற்ற வழிகாட்டியான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.