யாழ். மறைமாவட்டம் இழந்த மகத்தான மக்கள் சேவகன் ஜிம் பிறவுண் அடிகளார்

004 ஆண்டில் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணி புரிந்து கொண்டிருந்த அருட்தந்தை அந்தோனி அமலதாஸ் அடிகளார், தனது பணித்தளத்தில் ஒரு குழந்தை, ஒரு சிறுவன் உட்பட ஒன்பது பேர் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளி உலகுக்கு வெளிசம் போட்டுக் காட்டினார். இதன் காரணமாக அவர் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. தொடர்ந்தும் அவரால் அங்கு பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக நியமிக்கப் பட்டார். இவர் தனது உதவியாளரான அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பென்சன் பிளஸ் (வயது 39) என்பவருடன் யாழ்ப்பாணம் வருகை தந்து மீண்டும் அல்லைப்பிட்டியை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது காணாமலாக் கப்பட்டார்.

ஜிம் பிறவுண் அடிகளார் 2006 ஆண்டு ஆவணி மாதம் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து அல்லைப்பிட்டி திரும்பியதற்கான பதிவு தம்மிடம் உள்ளதாக பண்ணைப் பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் ஏற்கனவே கூறிய போதிலும் பின்பு அருட் தந்தைக்குப் பொறுப்பானவர்கள் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிவித்து விட்டார்கள்.

காணாமலாக்கப்பட்ட ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றிய தகவல்களை தரவேண்டுமென பாப்பரசரின் அன்றைய இலங்கைக்கான தூதுவர் பேராயர் மரியோ செனாறி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கோரியிருந்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் இது சம்பந்தமாக முறையிடப்பட்டிருக்கின்றது.

ஆனாலும், இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இதுவரைக்காலமும் யாரும் பொறுப்புக்கூறவில்லை என்பது இலங்கை நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட பல மனிதர்களுக்கு யாருமே பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

———————————————————
அருட்தந்தை ஜிம் பிறவுன் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டு ஆண்டுகள் பதினாறைக் கடந்திருந் தாலும் அடிகளார் பற்றிய பசுமையான நினைவு கள் குறிப்பாக மன்னாரில் அடிகளார் தங்கியிருந்த குறுகிய காலத்தில் எனது தகப்பனார் அமரர் சூசைமுத்து அவர்களை மன்னாரில் சென்று சந்திக்கும் போது என்னுடனும் தொலைபேசியில் உரையாடித் தனது அன்பைப் பரிமாறிக்கொள்வார்.

குறிப்பாக மன்னாரிலிருந்து அடிகளார் யாழ் மறை மாவட்டத்திற்குப் பயணமாவதற்கு முதல்நாள் என்னுடன் தொலைபேசி வழியாக உரையாடியது ஆண்டுகள் பதினாறைக் கடந்திருந்தாலும் இன்னமும் எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது.
பதிவு அருட்தந்தை- Manuel Asir

Comments are closed.