நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 20)

பொதுக்காலம் இருபதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 19: 23-30

‘இறையாட்சியும் செல்வமும்’
நிகழ்வு

பாக்தாத்தை ஆண்டுவந்த ஹரூன் ராசீத்திற்குப் பிறந்தநாள் வந்தது. அதை அவன் பெரிய விழாவாக எடுத்து, வெகு சிறப்பாகக் கொண்டாட நினைத்தான். எனவே, அவன் நாட்டில் இருந்த உயர்குடி மக்களை மட்டுமல்லாது பொதுமக்கள், அடிமைகள் என எல்லாரையும் தன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தான். அவனுடைய அழைப்பினை ஏற்று எல்லாரும் வருகை புரிந்திருந்தார்கள்.

விழா ஆரம்பமானது. முதலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அறுசுவை விருந்து நடைபெற்றது. எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் அரசன் மக்கட்கு முன்பாகத் தோன்றி, “அன்பு மக்களே! என்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு வருகை புரிந்திருக்கின்ற உங்கள் அனைவர்க்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பொழுது நான் உங்கட்கு என்னுடைய பிறந்த நாள் பரிசாக ஒன்றைக் கொடுக்கப்போகிறேன். இதோ! உங்கட்கு முன்னம் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வைத்திருக்கின்றேன். இதில் உங்கட்குப் பிடித்த ஒரு பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

அரசன் இவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு, தங்கட்கு முன்னம் இருந்த பரிசுப் பொருளை எடுக்க விரைந்தனர். ஆனால், அரசனுக்குப் பக்கத்தில் இருந்த அடிமைப்பெண் மட்டும் எதையும் எடுக்க நினைக்காமல் அப்படியே இருந்தாள். அவளைப் பார்த்த அரசன், “நீயேன் எதையும் எடுக்காமல் அப்படியே நிற்கின்றாய். உனக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்புத் தருகிறேன். நீ எதைத் தொடுகிறாயோ அது உனக்குச் சொந்தம்” என்றான்.

அடிமைப் பெண் ஒரு கணம் யோசித்தாள். பின்னர் விரைந்து சென்று அரசனுடைய இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு, “அரசே! எனக்கு வேறெதுவும் வேண்டும். நீங்கள் மட்டுமே போதும்” என்றாள். அந்த அடிமைப் பெண் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அரசன், “நீ விலையுயர்ந்த பரிசுப் பொருள் எதுவும் வேண்டும்… நான் மட்டும் போதும்… என்று என்னிடம் சரணடைந்தாய் அல்லவா… அதனால் இந்த அரசையே உனக்குச் சொந்தமாக்குகிறேன்” என்றான்.

இந்த நிகழ்வில் வரும் அடிமைப் பெண், விலையுயர்ந்த பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம்.. அரசனே போதும் என்று இருந்ததால் அரசாங்கத்தைத் தனதாக்கிக் கொண்டாள். அதுபோன்று நாமும் இந்த உலக செல்வமல்ல, எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்கும் இறைவனே போதும் என்று, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தொமெனில் விண்ணரசு நமக்குரியதாகும். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

செல்வத்தின்மீது பற்றுக் கொண்டிருப்பவர் விண்ணரசை தமக்கு உரித்தாக்க முடியாது

நற்செய்தி வாசகத்தில் இயேசு, “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்” என்று சொல்கின்றபோது, சீடர்கள் அவரிடம், “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முயும்?” என்று கேட்கின்றார்கள். இது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில் இயேசு ஏன் செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என்று சொல்கின்றார் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “பொருள் ஆசையே எல்லாத் தீமைகட்கும் ஆணிவேர்.” (1திமொ 6: 10) . இங்கு பவுலடியார் ‘பொருள் ஆசை’ என்று சொல்கின்ற இடத்தில் ‘பண ஆசை’ என்றுகூட வைத்துக் கொள்ளலாம். யார் யாராரெல்லாம் செல்வத்தின் மீது அல்லது பணத்தின்மீது அளவுகடந்த பற்று வைத்திருக்கின்றார்களோ, அவர்கள் நிச்சயமாக எல்லாவிதத் தீமைகட்கும் அடிமையாவார்கள். அதனால் அவர்கள் விண்ணரசில் புக முடியாமல் போய்விடும். அதனால்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார்.

“எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6: 24) என்று மத்தேயு நற்செய்தியில் கூறுவார். அதனடிப்படையிலும் வைத்துப் பார்த்தோமெனில், பணத்திற்கு அடிமையாகி, அதுவே எல்லாம் என்று வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவரால் நிச்சயம் விண்ணரசைப் பெறுவது கடினம். இதனாலேயே இயேசு, செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என்கின்றார்.

ஆண்டவர்மீது பற்றுக் கொண்டிருப்பவரால் மட்டுமே விண்ணரசை உரித்தாக்க முடியும்

செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என்று சிந்தித்துப் பார்த்தோம். அப்படியானால் யார்தான் விண்ணரசில் புகமுடியும் அல்லது மீட்பைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. அக்கேள்வியைத் தான் சீடர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். இயேசு அந்தக் கேள்விக்கு, “மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்” என்கின்றார். இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகள் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றன.

கடவுளால் எல்லாம் இயலும் என்றால், அவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடக்கின்ற ஒருவரால் மட்டுமே விண்ணரசில் நுழைய முடியும் அல்லது மீட்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதியாகின்றது. ஆபிரகாம் செல்வராய் இருந்தும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். அதனால் ஆண்டவர்க்கு உகந்தவரானார் (தொநூ 15:6). நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடந்தோமெனில் விண்ணரசில் புக முடியும் என்பது உறுதி. ஆதலால், நாம் விண்ணரசில் புகுவதற்கு ஆண்டவர்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றோர்’ (திபா 40:4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக விண்ணரசில் புகுந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.