பொதுக்காலம் – 20ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை
நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன், ஃபுல்கம் அவர்கள், இந்நூலை ஆரம்பித்துள்ளார். ஒரு வீட்டின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறவே, அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு, எரிந்துகொண்டிருந்த ஒரு படுக்கையில் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். அவரை மீட்டு, தீயை அணைத்தபின், அவரிடம் நடந்ததென்ன என்று கேட்டபோது, “எனக்குத் தெரியாது. நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது” என்று சொன்னாராம். எரியும் கட்டிலில் படுத்திருந்த அம்மனிதரின் கூற்று, நம்மில் பலருக்குப் பொருந்தும்; இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், “நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது” என்ற சொற்களை நம்மில் பலர் நம் கல்லறை வாசகமாகவும் எழுதலாம் என்று இந்நூலின் துவக்கத்தில் ஃபுல்கம் அவர்கள் கூறியுள்ளார்.
“பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது” என்ற முதல் வாக்கியம், பற்றியெரியும் சுடர்களாக இவ்வுலகில் வாழ்வோரைக் குறிக்கிறது. “நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது” என்ற இரண்டாவது வாக்கியமோ, தங்களைச் சுற்றி அனைத்தும் பற்றியெரிந்தாலும், கண்மூடித் துயில்வோரைக் குறிக்கிறது. இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், இறைவனின் உண்மையால் பற்றியெரிந்த இரு தீப்பிழம்புகளைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள், இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா, தன்னைப்பற்றி கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறைவாக்கினரை நம்மால் காணமுடிகிறது. “அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. (எரேமியா 20: 9). என்ற கதறல் எரேமியாவிடமிருந்து எழுகிறது.
இறைவார்த்தையால் தூண்டப்பட்ட ஒரு தீப்பிழம்பாக வாழ்ந்த எரேமியாவின் உயிருக்கு வந்த ஆபத்தை, இன்றைய முதல் வாசகம் (எரேமியா 38: 4-10)எடுத்துரைக்கிறது. எரேமியா இந்த நெருக்கடிக்கு உள்ளானதற்குக் காரணம், அவர் சொன்ன உண்மை. யூதேயா நாடு, பாபிலோனிய மன்னரால் கைப்பற்றப்படும்; கொடும் துன்பங்கள் தொடரும் என்ற உண்மையை, மன்னரான செதேக்கியாவிடம் கூறினார், எரேமியா. மிகவும் கசப்பான இந்த உண்மையை, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், மன்னர் தடுமாறினார். மன்னரது தடுமாற்றத்தை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில தலைவர்கள், எரேமியா, ஒரு குற்றவாளி என, பொய்யான பழியைச் சுமத்தி, அவரைக் கொல்லும்படி மன்னரைத் தூண்டினர். உண்மையைப் பேசியதால், உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை, இறைவாக்கினர் எரேமியா நம் நினைவுக்குக் கொணர்கிறார். அவர்களில் ஒருவர், எல் சால்வதோர் நாட்டில், கசப்பான உண்மைகளைப் பறைசாற்றிவந்த ஒரு பேராயர்.
1970களில், அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன், எல் சால்வதோர் அரசு, ஏழைகளை, வதைத்து வந்தது. கருணை ஏதுமின்றி, வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு, அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என, சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர், ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பினார். இந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின், 1980ம் ஆண்டு, மார்ச், 24ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், கூலிப்படையினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தான் எடுத்துரைத்த உண்மைகள், பலருக்கு, குறிப்பாக, சக்திமிகுந்த செல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சங்கடத்தை விளைவித்தன என்பதை நன்கு உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ அவர்கள், தனது மரணத்தைப் பற்றியும் பேசத் தயங்கவில்லை. ஒருமுறை அவர் ஏழை விவசாயிகளுக்கு உரை வழங்கியபோது, “உங்கள் குருக்களையும், ஆயரையும் அவர்கள் கொன்றுவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குரலை ஓங்கி, ஒலிக்கச் செய்யும் ஒலிபெருக்கிகளாகச் செயல்படுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினார்களாக மாறவேண்டும்… உயிர்ப்பு இல்லாத மரணத்தை நான் நம்பவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், சால்வதோர் மக்களில் நான் மீண்டும் உயிர்ப்பேன்” என்று கூறினார் பேராயர்.
சால்வதோர் மக்களில் மட்டுமல்ல, உலக மக்கள் நடுவிலும் பேராயர் ரொமேரோ அவர்கள், உயிர்பெற்று வாழ்கிறார் என்பதற்கு, உலக அரங்கிலும், கத்தோலிக்கத் திருஅவையிலும் அவர் பெற்றுள்ள புகழ், சான்றாக விளங்குகிறது. 2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையால், ஓர் அருளாளரென அறிவிக்கப்பட்டார். 2018ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் ரொமேரோவை புனிதராக உயர்த்தினார். எல் சால்வதோர் நாட்டிற்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களிலும், புனித ரொமேரோ, ஓர் இறைவாக்கினராக, இன்றும் உயிர்பெற்று வாழ்கிறார்.
தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், இறைவாக்கினர்களால் அமைதிகாக்க இயலாது. அவர்கள் பேசும் உண்மைகள், இவ்வுலகில் தீயை மூட்டும்; அமைதியைக் குலைத்து, பிளவை உருவாக்கும். தீயை மூட்டவும், பிளவை உண்டாக்கவுமே தான் இவ்வுலகிற்கு வந்ததாக, இயேசு, இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார். (லூக்கா நற்செய்தி 12: 49-53)
அமைதி, அன்பு என்ற அற்புதக் கொடைகளின் ஊற்று இயேசுவே என்று உலகறியப் பறைசாற்ற நாம் தயங்குவதில்லை. அத்தகைய இயேசு, இன்றைய நற்செய்தியில் கூறியுள்ள வெப்பமான வார்த்தைகளை, துணிந்து, வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கிறோம். “உலகில் தீ மூட்ட வந்தேன், அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்” என்று இயேசு கூறும் வார்த்தைகள், நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாகுகின்றன. அதிலும் குறிப்பாக, தான் கொணரும் பிளவுகள், குடும்பத்திற்குள் உருவாகும் என்று இயேசு சொல்வது, நமக்குள் கூடுதலானச் சங்கடங்களை உருவாக்குகிறது. நமது சங்கடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இயேசு, தெளிவாக, தீர்க்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
முதலில், இயேசு மூட்டவந்த தீயைப்பற்றி புரிந்துகொள்ள முயல்வோம். தான் வாழ்ந்துவந்த யூத சமுதாயத்தில் நிலவிய அநீதிகளைக் கண்ட இயேசுவின் உள்ளம் பற்றியெரிந்திருக்க வேண்டும். அதேநேரம், நீதியும், அமைதியும், உலகில் நிலைக்கவேண்டும் என்ற வேட்கையும், அவர் உள்ளத்தில் பற்றியெரிந்திருக்க வேண்டும். நன்மையை நிலைநாட்ட, அவர் உள்ளத்தில் பற்றியெரிந்த தீயை, மற்றவர் உள்ளங்களில் மூட்டவே தான் வந்ததாக இயேசு கூறினார்.
தீ மூட்டுதல் என்ற செயலால், ஆக்கப்பூர்வமான விளைவுகளும், அழிவும் உருவாகும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, நமது இல்லங்களில், சமையலறையில், தீ மூட்டுவதை எண்ணிப்பார்ப்போம். குடும்பத்திற்கு உணவு படைக்கவேண்டும் என்ற அன்பினால், சமையலறையில் மூட்டப்படும் தீ, ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரும். ஆனால், எத்தனையோ இல்லங்களில், புகுந்த வீட்டை நம்பி வந்த பெண்ணைக் கொளுத்துவதற்கு அதே சமையலறை தீ, ஒரு கருவியாக அமைவது, நாம் அறிந்த வேதனையான உண்மை.
தீ மூட்டுதல், உருவாக்கத்தையும், அழிவையும் கொணரும் என்று இருகோணங்களில் சிந்தித்ததுபோல், இயேசு கொணரும் அமைதியையும், இரு கோணங்களில் சிந்திக்க முயல்வோம்.
உலக அரசுகள், ‘அமைதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அவை, பெரும்பாலும் குறிப்பிடுவது, போரும், வன்முறைகளும் இல்லாத ஒரு நிலை. இதை நாம் ‘கல்லறை அமைதி’ என்ற உருவகத்தில் எண்ணிப்பார்க்கலாம். உலகம் தரும் ‘கல்லறை அமைதி’யை உருவாக்க, பல நியாயங்கள் அக்கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்களும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.