ஆகஸ்ட் 18 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்.

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

உண்மையான அமைதியைத் தருபவர் இயேசு

பப்புவா நியூ கினிவா (Papua New Guinea) என்ற தீவில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் பல ஆண்டுகாலம் மறைபோதகப் பணியைச் செய்தவர் டான் ரிச்சர்ட்சன் (Don Richardson). இவர் ‘அமைதியின் குழந்தை’ (The Peace Child) என்றொரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு இது.

பப்புவா நியூ கினியாவில் இரண்டு இனக்குழுக்கள் உண்டு. அந்த இரண்டு இனக்குழுக்களுமே காலங்காலமாக ஒருவரோடு இருவர் போரிட்டுக்கொண்டு செத்து மடிந்துகொண்டிருந்தார்கள். இதனால் அந்த இரண்டு இனக்குழுக்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் அந்த இரண்டு இனக்குழுக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி வந்து, இப்பிரச்சினையை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று பேசினார்கள்.

அப்பொழுது ஒரு இனக்குழுவின் தலைவர் இன்னோர் இனக்குழுவின் தலைவரைப் பார்த்து, “உனக்கொரு மகன் இருக்கின்றான் அல்லவா… அவனை என்னிடம் விட்டுவிட்டு… நான் அவனை வளர்க்கின்றேன்… ஒருவேளை உன்னுடைய மகனை நான் சரியாக வளர்க்கவில்லை என்றால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுக்கலாம். உன் மகனுக்கு ஏதாவது நான் செய்துவிட்டால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுப்பாய் என்ற ஒருவிதமான அச்சத்தில், நானும் உன்னுடைய மகனை என்னுடைய மகன் போன்று வளர்ப்பேன்!” என்றார். அவர் சொன்ன யோசனை இன்னோர் இனக்குழுத் தலைவர்க்குப் பிடித்துப் போகவே, அவர் தன்னுடைய மகனை அந்த இனக்குழுவின் தலைவரிடம் ஒப்படைத்து வளர்க்கவிட்டார்.

ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. ‘தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பக்கத்து இனக்குழுவின் தலைவருடைய மகனை நல்லமுறையில் வளர்க்கவேண்டும்… இல்லாவிட்டால் அவர் என்னுடைய இனத்தின்மீது போர்த்தொடுத்துவிடுவார்’ என்ற ஒருவிதமான அச்சம் கலந்த தவிப்பில் சிறுவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரியவாக்கினார் இவர். பக்கத்து இனக்குழுவின் தலைவரோ தன்னுடைய மகன் பக்கத்து இனக்குழுத் தலைவரின் வீட்டில் நல்லமுறையில் வளர்கின்றான் என்ற நம்பிக்கையில் அவருடைய இனத்தின்மீது போர்த்தொடுக்காமல் இருந்தார். இதனால் இரண்டு இனக்குழுக்களும் பகைமையை மறந்து ஒருவரை ஒருவர் அன்புசெய்யத் தொடங்கினர்.

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு டான் ரிச்சர்ட்சன் இவ்வாறு நிறைவுசெய்வார்: “ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும் போர்த்தொடுத்துக்கொண்டும் இருந்த அந்த இரண்டு இனக்குழுக்களும் எப்படி ‘அமைதியின் குழந்தையின்’ வருகைக்குப் பின்னால் சமரசமானார்களோ, அதுபோன்று அமைதியின் குழந்தையாய் இந்த அவனிதனில் பிறந்த இயேசு கிறிஸ்துவால் உண்மயான அமைதி பிறக்கும்.”

இயேசுவால் இப்புவியில் அமைதி வரும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளின் நற்செய்தி வாசகம் ‘உண்மையான அமைதியைத் தரும் இயேசு’ என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

இயேசு இவ்வுலகில் ஏற்படுத்த வந்தது அமைதியையா? பிளவையா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்கட்குச் சொல்கிறேன்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவர் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தாரா? இல்லை, பிளவை உண்டாக்க வந்தாரா? என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றன. ஏனென்றால், அவருடைய பிறப்பின்போது வானதூதர்கள், “உலகில் அவர்க்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக” (லூக் 2: 14) என்றார்கள். இயேசுகூட தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, “இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக” (லூக் 10:5) என்றுதான் வாழ்த்தச் சொன்னார். அப்படியிருக்கையில், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற வார்த்தைகள், ஒருவேளை அவர் இன்றைக்கு இருக்கின்ற ஒருசில அரசியல் தலைவர்களைப் போன்றும் மனிதர்களைப் போன்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றொரு கேள்வி எழுகின்றது.

பிளவின் வழியாக அமைதி.

இயேசு, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியானால் இயேசுவின் இவ்வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு நாம் இதே பகுதி இடம்பெறுகின்ற மத்தேயு நற்செய்தியை இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மத்தேயு நற்செய்தியில் இயேசு, “அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத் 10: 34) என்று சொல்லிவிட்டு, இருசில இறைவார்த்தைக்குப் பின்னால், “என்னைவிடத் தன் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்…” (மத் 10: 37) என்பார். இந்த இரண்டு இறைவார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போமேயானால், ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதால் அவருடைய தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ அவரை வெறுக்கலாம். அதனால் குடும்பத்தில் பிளவு உண்டாகலாம். ஆனாலும் அந்தப் பிளவு அங்கு அமைதி ஏற்படுவதற்காக ஒரு முகாந்திரம் அல்லது தொடக்கம் என்று சொல்லலாம். எப்படியென்றால், இயேசுவைப் பின்பற்றி நடக்கின்றவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இயேசுவின் வழியில் நடக்கலாம். இதனால் அங்கு உண்மையான அமைதி நிலவலாம். இதைதான் இயேசு, அமைதியை அல்ல, பிளவையே உண்டாக்க வந்தேன் என்று கூறுகின்றார்.

Comments are closed.