ஆகஸ்ட் 17 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்.

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில் சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

‘அவர்களைத் தடுக்காதீர்கள்’

அது காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்துபின் வந்த திங்கட்கிழமை காலை வேளை. அந்தக் காலை வேளையில் யாழினி, மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தன்னுடைய மூன்று வயது மகன் மகிழனைப் படுக்கையிலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, பள்ளிச் சீருடையை அணிவித்து, சாப்பாடு கொடுத்து இறுதியாக அவனுடைய கால்களில் காலணிகளைப் போட்டுவிட முயன்றாள். அதுவரைக்கும் அமைதியாக இருந்த மகிழன் தன்னுடைய தாய் தனது கால்களில் காலணிகளை மாட்டத் தொடங்கியதும், முரண்டு பிடிக்கத் தொடங்கினான். யாழினியோ, தன் மகன் நீண்ட நாள்கள் கழித்துப் பள்ளிக்கூடம் போவதால்தான் இப்படி முரண்டு பிடிக்கின்றான் என்று நினைத்து, அவளுடைய கால்களில் காலணிகளை மாட்டினாள்.

அதற்குப் பிறகு யாழினி தன் மகனின் புத்தகப் பையை ஒரு கையிலும் அவனது சாப்பாட்டுக் கூடையை இன்னொரு கையிலும் தூக்கிக்கொண்டு, மகனை முன்னே நடக்கவிட்டுவிட்டு, அவள் அவன் பின்னே நடந்துசென்றாள். வழியெங்கும் மகிழன் இருப்புக் கொள்ளாமலேயே நடந்துசென்றான். அதைப் பார்த்துவிட்டு யாழினி அவனிடம், “விடுமுறையில் இங்கும் அங்கும் ஓடியாடித் திரிந்துவிட்டு பள்ளிக்கூடம் போவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். இரண்டு மூன்று நாள்களில் எல்லாம் சரியாகிவிடும். அதனால் வருத்தப்படாமல் போ” என்றான். அவனோ அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல் நடந்துசென்றான்.

மகிழன் படித்து வந்த பள்ளிக்கூடம் வந்ததும், அவனை அவனுடைய தாய் அவனது வகுப்பு ஆசிரியையிடம் விட்டுவிட்டு வெளியே வந்தாள். அப்பொழுதும் அவன் அவளிடம் ஏதோ சொல்வதற்கு வாய் எடுத்தான். அவளோ, “பேசாமல் இரு… சாயந்தரம் வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த சிறிதுநேரத்தில் ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. ஆம், அது வேறு யாருடைய சத்தமும் அல்ல, யாழினியின் மகன் மகிழனின் சத்தம்தான். மகனின் அலறல் சத்தம் கேட்டதும் யாழினி மகன் இருந்த வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்றாள். அங்கு அவளுடைய மகன் வாயில் நுரைதள்ள, இறந்துகிடந்தான்.

மகனுக்கு என்னவாயிற்று என்று யாழினி அவனுடைய உடல் முழுவதும் சோதித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவனுடைய காலணிக்குள் உள்ள இருந்த கருந்தேள் அவனைக் கொட்டியிருக்கின்றது என்று. ‘இதைச் சொல்வதற்குத்தான் நான் இவனுக்குக் காலணியை அணிவிக்கின்றபோது முரண்டு பிடித்தானோ… இதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் மகனைக் கொன்ற பாவியானேனே” என்று யாழினி கதறி அழுதாள். என்ன செய்ய! போன உயிரைத் திரும்பப் பெற்றுவிட முடியுமா என்ன?

இந்த நிகழ்வில் வரும் யாழினிப் போன்றுதான் பலரும் சிறுவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள். அவர்களுடைய உணர்வுகள் என்ன என்பதைக் காதுகொடுக்கக் கேட்பதில்லை. இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் சிறுவர்களை, வறியர்களை ஒரு பொருட்டாகக்கூடக் கருதுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், “சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்… அவர்களைத் தடுக்காதீர்கள்” என்று சொல்லும் இயேசுவின் வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் ஆசியை வேண்டிக் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோர்.

நற்செய்தியில், ஒருசில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்ட வந்து, அவர் அவர்கள்மீது தன் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு வருகின்றார்கள். வழக்கமாக யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகள்மீது இரப்பிக்கள் ஆசி வழங்கவேண்டும் என்று அவர்களை அவர்களிடம் கொண்டு வருவார்கள். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இரபிக்கள் குழந்தைகட்கு ஆசி வழங்கவேண்டும். இரண்டாவது முக்கியமான காரணம், இரபிக்களின் முன்மாதிரியைத் தங்களுடைய குழந்தைகளும் கடைப்பிடித்து வாழவேண்டும். இதற்காகத்தான் யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இரபிக்களிடம் கொண்டுவந்தார்கள். இயேசுவையும் மக்கள் ஓர் இரபியைப் போன்று பார்த்தார்கள். அதனால் யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்.

குழந்தைகளோடு வந்த பெற்றோரைத் தடுத்த இயேசுவின் சீடர்கள்.

தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளோடு இயேசுவிடம் வருவதைப் பார்த்த சீடர்கள் அவர்களை அதட்டுகின்றார்கள். சீடர்கள் இயேசுவுக்குப் பாதுகாப்புக் கொடுக்க நினைத்திருக்கலாம். அதனால் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம். இன்னொரு புறம். குழந்தைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக்கூட நினையாமல் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோர்க்கே உரியது” என்கின்றார்.

இயேசுவின் காலத்திலும் சரி. நம்முடைய காலத்திலும் சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகள் மிகவும் மோசமாகவே நடத்தப்படுக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கட்கு எதிராக நடக்கும் வன்முறைகள் ஏராளம். இத்தகைய தருணத்தில் நாம் குழந்தைகளின் உரிமைகளைப் பேணுவதும் அவர்கட்கு உரிய மதிப்புத் தருவதும் அவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுப்பதும் தேவையானதாக இருக்கின்றது.

சிந்தனை.

‘நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்’ (1 திமொ 4:12) என்பார் பவுல். பவுலின் இவ்வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டவர்களாய் யாரையும் அவர்கள் சிறியவர்களாக, வறியவர்களாக இருக்கின்றார்களே என்று நினைத்து அவர்களை இரண்டாம் தரக்குடிகளாக நடத்தாமல், அவர்கட்கு உரிய மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.